தேசிய விழாவில் பாராட்டுப் பெற்ற பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த கதை
சாகித்ய அகாடமியின் சார்பில் விஜயவாடாவில் பால சாகித்ய புரஷ்கார் 2017 விருது வழங்கும் விழாவில் The Evolution of Chidren’s literature கருத்தரங்கமும் வாசிப்பு அமர்வும் நடைபெற்றது.
நவம்பர் 14ஆம் தேதி அன்று பால சாகித்ய புரஷ்கார் 2017 விருது வழங்கும் விழாவில் அஸ்ஸாமி, பெங்காலி, பொடோ, டோகிரி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடா, காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி நேப்பாலி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிருதம், சாந்தலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 24 மொழிகளில் குழந்தைகளுக்கான கதை, பாடல், நாடக நூல்களை படைத்தளித்த எழுத்தாளர்களுக்கு ”பால சாகித்ய புரஷ்கார்” விருது வழங்கப்பட்டது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் வேலு சரவணன் அவர்களுக்கு தமிழ் மொழிக்காக இவ்விருதினை வழங்கிச் சிறப்பித்தது சாகித்ய அகாடமி. நம் பெரியார் பிஞ்சுகள் பழகு முகாம் குழந்தைகளுக்கு நன்கு பழக்கமானவர் வேலு மாமா என்றழைக்கப்படும் வேலு சரவணன்.
நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற குழந்தைப் பாடல்கள் வாசிப்பு அமர்வில் தமிழில் கவிஞர் மு. முருகேஷ் அவர்கள் தான் எழுதிய குழந்தைப் பாடல்களைப் பாடி சிறப்பித்தார். தெலுங்கு, பொடோ, இந்தி, அஸ்ஸாமி, மராத்தி, மைதிலி, மொழியிலும் குழந்தைப் பாடல்கள் எழுதும் கவிஞர்களும் இதில் பங்கேற்றனர்.
கவிஞர் மு. முருகேஷ் அவர்கள் பாடல்களை ராகத்தோடு ஆடிப்பாடிக் காட்டியதால் மொழி புரியாதவர்களும் கைதட்டி தலையாட்டி ரசித்தனர்.
நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற குழந்தைக் கதைகள் வாசிப்பு அமர்வில் பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் கலந்து கொண்டு “பெரியார் பிஞ்சு” மாத இதழில், தான் எழுதிய ‘கோபுரத்துப் புறாக்கள்’ கதையை வாசித்தார். தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் குழந்தைகளுக்கான கதை எழுதி வாசித்தவர்கள் அனைவரும் நகைச்சுவையான, புராணங்களைத் தழுவிய கதைகளை வாசித்தபோது மூடநம்பிக்கையற்ற பகுத்தறிவு சார்ந்த கதைகளை தமிழிலும், அதையே ஆங்கிலத்திலும் வாசித்தது அனைவரையும் ஈர்த்தது.
மு.கலைவாணன், வேலு சரவணன், மு. முருகேஷ் ஆகிய மூவரும் சாகித்ய அகாடமி விழாவில் பங்கேற்று தமிழ் நாட்டுக்கும், தமிழின் குழந்தை இலக்கியங்களுக்கும் பெருமை சேர்த்தது பாராட்டுக்குரியது.