பொங்கல் ராட்டினம்
– விழியன்
சந்தைத் திடலுக்கு இப்போதெல்லாம் ராதனா அடிக்கடி செல்கின்றாள். அவளுக்கு சந்தையில் பொருள் விற்கவோ, வீட்டுக்கு வாங்கவோ எல்லாம் வேலை இல்லை. அவள் சந்தைக்குச் செல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. அன்று ஒருநாள், தன் மாமாவின் திருமணத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி இருந்தார்கள். அவசர அவசரமாக ராதனாவின் அம்மா ராதனாவை தயார்படுத்தி பள்ளிக்கு அழைத்துச்சென்றார். வழியில் தான் அவளுக்கு விருப்பமான அந்த ரங்கராட்டினத்தை பார்த்தாள்.
அது பொங்கல் திருவிழாவுக்காக சந்தைக்குப் பின்புறம் இருந்த மைதானத்தில் இருந்தது. பொங்கல் விழாவையொட்டி மாமா திருமணம் என்பதால் அவள் ஊரில் இருக்க முடியாமல் போய்விட்டது. தைப்பொங்கல் திருவிழாவை ஒட்டி மைதானத்தில் பல விளையாட்டுகளையும் கடைகளையும் அமைத்து இருந்தனர். ஆனால் முந்தைய தினமே திருவிழா முடிந்துவிட்டது. திருவிழா எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பார்த்தாள் ராதனா. குதூகலம் அடைந்தாள். அடடா நாம் திருவிழாவிற்கு இல்லாமல் போய்விட்டோமே என வருந்தினாள். பள்ளியில் எல்லா நண்பர்களிடமும் யார் யார் திருவிழாவிற்கு சென்றார்கள், எந்த எந்த விளையாட்டில் அமர்ந்தார்கள், என்னென்ன சாப்பிட்டார்கள் என்று கேட்டாள். குறிப்பாக ராட்டினத்தில் யார் அமர்ந்தார்கள், எத்தனை சுற்று சுற்றினார்கள் எனக் கேட்டுக்கொண்டாள். ராட்டினத்தின் மீது அவளுக்கு அவ்வளவு பிரியம்.
மதியம் பள்ளிவிட்டு திரும்ப வரும்போது அம்மா சந்தைக்கருகில் வண்டியை நிறுத்தினார். ராதனா மைதானத்திற்கு ஓடி ராட்டினக்காரரிடம் பேசினாள். “அங்கிள், இதை எப்ப ஓட்டுவீங்க?” “இதோட அடுத்த திருவிழாவுக்கு தான் கண்ணு. எல்லாத்தையும் கழற்றிவிட்டேன்” என்றார் வருத்தமுடன். ஒரு முறை அமர எவ்வளவு காசு என கேட்டுக்கொண்டாள். வருத்த முகத்துடன் அவள் திரும்பினாள். தூரத்தில் இருந்து ஒரு குரல்
“கண்ணு உன் பேரு என்னம்மா?”
“ராதனா அங்கிள்”
அதன் பிறகு தான் அவள் சந்தைக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தாள். சந்தைக்கருகில் இருக்கும் விறகுக் கடை தாத்தா கண்ணில் பட்டால் “எப்ப திருவிழா” என்று மட்டும் கேட்பாள். அவள் வீட்டின் அருகே யார் சந்தைக்குப் போகின்றேன் என்று சொன்னால் போதும் உடனே அவர்களுடன் சந்தைக்கு ஓடிவிடுவாள்.
பலமாதங்கள் உருண்டோடின. தன் அத்தையுடன் சந்தைக்குச் சென்றபோது வாசலில் ஒரு சுவரொட்டியைப் பார்த்தாள். விரைவில் திருவிழா என்ற செய்தி மட்டும் அவளுக்கு புரிந்தது. விறகுக் கடை தாத்தாவிடம் “திருவிழாவிற்கு ராட்டினம் வருமா?” என்று கேட்டாள். அவர் சிரித்துக்கொண்டே அவள் தலையில் தடவி “ஆமாம்” என்றார்.
அரையாண்டு விடுமுறை முடிந்து ஒரு நாள் பள்ளிக்கு போகும் போது ராட்டினம் வந்துவிட்டதை பார்த்துவிட்டாள். போன ஆண்டு வந்தவரே தான் போட்டிருந்தார். பள்ளிவிட்டு போகும்போது அம்மாவிடம் வண்டியை நிறுத்தச்சொன்னாள், ஆனால் அம்மா நிறுத்தவில்லை. பொங்கலன்று நிச்சயம் திருவிழாவிற்கு வரலாம் என்று சொல்லிவிட்டார். மறுநாள் ஊரில் இருந்து ஏதோ தகவல் வரவே அம்மாவும் அப்பாவும் ஊருக்கு அவசரமாக சென்றுவிட்டார்கள். “திருவிழாவிற்கு நிச்சயம் போகவேண்டும் நான் வரவில்லை” என்று சொல்லிவிட்டாள் ராதனா. பக்கத்துவீட்டு அக்காவுடன் பொங்கல் திருவிழாவிற்குச் சென்றாள். அவள் நினைத்ததைவிட மகிழ்வாக இருந்தாள். கடைகளில் ஏறி இறங்கினாள். ஆனால் அவள் கண் ராட்டினத்தைச் சுற்றியே வந்தது. கடைசியாக கையில் பத்து ரூபாயுடன் ராட்டினம் அருகே சென்றாள்.
அவளுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த ஆண்டு ராட்டினத்தில் அமர பன்னிரெண்டு ரூபாய். இவளிடம் இரண்டு ரூபாய் குறைவாக இருந்தது. தயங்கியபடியே நின்றாள். ராட்டினத்துக்காரர் அடுத்த சுற்றில் ராதனாவை அமர வைத்தார். “அங்கிள் என்னை கொஞ்சம் முன்னவே இறக்கிவிட்டுடுங்க. என்கிட்ட பத்து ரூபாய் தான் இருக்கு.”
“கண்ணு சும்மா ஜாலியா உட்காரு” என்று சுற்றினார். அந்த நொடியில் ராதனா தான் உலகிலேயே மிக மகிழ்வான குழந்தையாக இருந்தாள். பதினைந்து சுற்று. ஒவ்வொரு சுற்றிற்கும் ஒவ்வொரு நினைவு அவளுக்கு. ஒவ்வொரு சுற்றிற்கும் ஒவ்வொரு விளையாட்டு. தன்னுடன் வந்த அக்காவிற்கு கையசைத்தாள். மேலே சென்ற போது மொத்த திருவிழாவையும் உயர அமர்ந்து பார்த்தாள். ராட்டினம் நின்றது. ஒவ்வொருவராக காசு கொடுத்து இறங்கினார்கள். ராதனாவும் இறங்கினாள்.
“பாப்பா, நீ ராதனா தான?” என்றார் ராட்டினத்துக்காரர். அவளிடம் காசு வாங்க மறுத்துவிட்டார். “போன வருசமே நீ ஆசைப்பட்டு சுத்த முடியல அதனால உன்கிட்ட காசு வாங்கமாட்டேன்” ஏன்று சொல்லிவிட்டார். அந்த நொடி அவர் தான் உலகிலேயே மகிழ்வான மனிதராக இருந்தார்.
ஆனாலும் ராதனாவிற்கு வருத்தமாக தான் இருந்தது. ராட்டினத்தின் அருகே ஒரு குழந்தை “அப்பா பலூன்… அப்பா பலூன்” என அழுதபடி அமர்ந்து இருந்தது. அப்பா என அழைத்தது ராட்டினக்காரைத்தான்.
ராதனா திருவிழாவைவிட்டு கிளம்பும்போது அந்த குழந்தையிடம் சிகப்பு நிறத்தில் ஒரு பலூனும் மஞ்சள் நிறத்தில் ஒரு பலூனும் இருந்தது. சிரித்தபடியே “அக்கா டாட்டா” என ராதனாவிற்கு கையசைத்தது. அந்த நொடியில் உலகிலேயே மகிழ்வாக இருந்தது அந்தக் குழந்தை தான்.