சிங்காங்
தன் காலை நடைப் பயிற்சியை முடித்துவிட்டு சிங்கராஜா தன் குகையை நெருங்கியது. அன்னநடை என்று கேள்விப்பட்டதுண்டா? அப்படி ஒரு நடை. குகைக்குள் செல்லும் போது பின்னால் ஒரு சலசலப்பு. நரியார் எங்கேயோ வேகமாக சென்று கொண்டிருந்தார். “காலை வணக்கம் நரியாரே!” என்று சிங்கராஜா வணக்கம் சொன்னது. “வணக்கம் சிங்கராஜா!” என்று பதில் சொன்னது நரி. அப்போது தான் நரியாரிடம் இருந்த மாற்றத்தை பார்த்தது சிங்கராஜா. நரியாரின் தலை முடி சீவப்பட்டு பின்னால் கொண்டை போட்டுக்கொண்டு இருந்தது.
“அட என்ன இது மாற்றம் நரியாரே?” என்று கேட்டது சிங்கராஜா. தங்கள் காட்டிற்கு புதிதாக சலூன் வந்திருப்பதாகவும் அதனை கரடி பப்பு எடுத்து நடத்துவதாகவும் தெரிவித்தது நரி. “அங்கே முடிவெட்டிக்கொள்ளலாம், முடியை மழித்துக்கொள்ளலாம், தலை முடிக்கு வேறு நிறம் அடித்துக்கொள்ளலாம், உடலில் ஏதேனும் ஓவியம் வரைந்து கொள்ளலாம், உடலில் இருக்கும் முடியை சீர் செய்துகொள்ளலாம்” எனத் தெரிவித்தது நரி. அதைக் கேட்டதும் சிங்கராஜாவின் கண்கள் விரிந்தன.
காலை உணவு சாப்பிட்டுவிட்டு அந்தப் பப்பு கரடியின் சலூனை நோக்கி மெல்ல நடந்தார் சிங்கராஜா. நரி சொன்னது போல அது காட்டின் தெற்குப் பகுதியில் இருந்தது. சலூன் ஒரு மரத்தின் கீழே இருந்தது. இரண்டு பக்கமும் முகம் பார்க்கும் கண்ணாடிகள் வைக்கப்பட்டு இருந்தன. பாதியாக வெட்டப்பட்ட மரம் தான் இருக்கை போல இருந்தது. மரப் பொந்திற்குள் சவரம் செய்யத் தேவையான பொருட்கள் இருந்தன. சீப்பு, தண்ணீர் தெளிக்க ஒரு டப்பா, கத்தரிக்கோல் என நவீன வசதியுடன் தான் சலூன் இருந்தது.
சிங்கராஜா சலூனுக்குப் போகவில்லை. தூரத்திலேயே ஒரு மரத்தின் பின்னால் நின்றது. சலூனில் என்ன நடக்கின்றது எனக் கவனித்தது. அங்கே வரிசையில் சில விலங்குகள் காத்திருந்தன. முள்ளம்பன்றி தன் முட்களுக்கு சிகப்பு நிறம் அடித்துக்கொண்டது. யானை தன் காதிற்குள் இருந்த முடிகளை எடுத்துக்கொண்டது, தந்தத்தில் ஒரு மரத்தின் ஓவியத்தை வரையச்சொன்னது. புலி ஒன்று தன் மீசையை ஒட்ட வெட்டிக்கொண்டது. புள்ளிமான் ஒன்று புள்ளிகளில் நீல நிறம் வரைந்து கொண்டது. இப்படியாக மாலையே வந்துவிட்டது. ஆனால் சிங்கராஜா அருகிலேயே போகவில்லை. மிகுந்த கூச்சம். யாராவது பார்த்து கிண்டல் அடித்தால் என்ன செய்வது? யாராவது சிரித்து விட்டால்? எல்லா விலங்குகளும் சென்றுவிட்டன. பப்பு கரடி சலூனை சுத்தம் செய்துகொண்டு இருந்தது.
சிங்கராஜா மெல்ல பப்புவின் முன் சென்று நின்றது. “வாங்க சிங்கராஜா, உங்களை நானே நேரில் சந்தித்து கடை ஆரம்பித்ததைச் சொல்ல நினைத்தேன்” என்றது. சிங்கராஜா புன்முறுவல் பூத்தது. நீண்ட நேரம் எதுவும் பேசாமல் அங்கேயே நின்றது. பப்பு பேசிக்கொண்டே இருந்தது. “என்னையும் அழகு படுத்துவியா பப்பு?” என்றது கடைசியாக. சில நொடிகள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு “நிச்சயம் சிங்கராஜா” என்றது பப்பு. சிங்கராஜா சிரமப்பட்டு இருக்கையில் அமர்ந்தது. முகத்தில் இருக்கும் தாடியை மழிக்கச் சொன்னது. மீசைக்கு கருப்பு நிறம் அடிக்கச்சொன்னது. பப்பு மெதுவாக அனைத்தையும் பொறுமையாக செய்தது.
கண்ணாடியில் சிங்கராஜாவிற்கு தான் இளமையாக இருப்பதைப் பார்த்து சந்தோஷம் தாங்க முடியவில்லை. சின்ன வயதில் இருந்தே மிகுந்த கூச்ச சுபாவம் உள்ள விலங்காகவே வளர்ந்தது. எங்கும் ஒதுங்கியே சென்றுவிடும். வயதானதும் இன்னும் அந்தச் சுபாவம் அதிகமானது. இப்படி சிங்கராஜா மகிழ்வாக இருந்ததை பப்பு பார்த்ததே இல்லை. “ராஜா, உங்க தலைமுடிக்கு ஒரு சின்ன அலங்காரம் செய்கிறேன்” என்றது. வானவில்லின் ஏழு நிறத்தினை தலையில் அடித்தது. முடியை நன்றாக நனைத்து குச்சி குச்சியாக நிற்கும்படி செய்து ஏழு வண்ணத்தை அடித்தது. சிங்கராஜாவிற்கு இன்னும் குதூகலம்.
வேலை முடிந்து சலூனில் இருந்து நடக்க ஆரம்பித்தது சிங்கராஜா. நரி வேகமாக சலூனை அடைந்து, ‘செல்வது யார்’ என பப்புவிடம் விசாரித்தது.
“அது நம்ம சிங்கராஜா தானே?”
“இல்லைப்பா அது சிங்காங்” என்றது பப்பு.
தன் புதிய பெயரைக் கேட்டு சிங்காங் கம்பீரமாக காட்டுக்குள்ளே நடையைக்கட்டியது.