மனம் என்பது இதயம்?
காரணமின்றி ஏற்காதீர்
மனம் என்பது இதயம்?
– சிகரம்
படித்தவர்கள் முதல் பாமரர் வரை அனைவரிடமும் காணப்படும் குழப்பம் இது. கவிஞர்கள் இத்தவற்றின்மீது எத்தனையோ கற்பனைக் கோட்டைகளைக் கட்டி விடுகின்றனர்.
“இதயத்தில் இடங்கொடு!’’
“நான் இருப்பது உன் இதயத்தில்!’’
என்று உள்ளம் உருக, உணர்ச்சி மயமாய் உருகுகின்ற காட்சியெல்லாம் இன்று திரைப்படங்களில் பார்க்கலாம். பிஞ்சுகளே நீங்கள் இந்த மனம் என்பது எது என்பதுபற்றி சிந்தித்தது உண்டா? இதோ உங்களுக்கு சிறு விளக்கம்.
இதயம் என்பது என்ன?
இது புரியாமல்தான் மேற்கண்ட தவறான கற்பனைகள். இதயம் என்பது இரத்தம் பாய்ச்சும் இயந்திரம். அவ்வளவே!
சுத்தம் செய்யப்பட்ட இரத்தத்தைப் பெற்று, மீண்டும் சுத்த இரத்தத்தை உடலுக்குப் பாய்ச்சுகின்ற பணியை ஒயாது செய்யும் ஓர் இயந்திரம் அது.
ஆனால், இதயத்தில் நம் நினைவுகள் பதிவாவது போலவும், நாம் இரக்கப்படுகின்ற உணர்வு அங்கேதான் எழுவது போலவும், கொடுஞ் சிந்தனைகள் அங்கேதான் குடிகொண்டிருப்பதாயும் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது அறியாமை; உண்மையல்ல.!
இரக்கக் குணம் அற்றவர்களைக் கல் நெஞ்சினர் என்பர்.
படித்ததை நெஞ்சில் வை என்பர். நெஞ்சில் என்ன இருக்கிறது? இதயமும், நுரையீரலுந்தான். இதில் எப்படி படித்தது பதியும்?
ஆக, மனம் என்பது நெஞ்சில் இருப்பதாக, அதுவும் இதயத்தில் இருப்பதாகக் கருதுவதும், நம்புவதும் அறியாமை. அது தப்பு.
நாம் ஏதாவது ஓர் அதிர்ச்சிக்கு ஆளாகும்போது நெஞ்சில் ‘திக்’ என்ற உணர்வு தோன்றும். அப்போது மனது ‘திக்’ என்றது என்பர். அதனால் இதயத்தை மனம் என்று எண்ணும் அறியாமை ஏற்படுகிறது.
நெஞ்சில் ‘திக்’ என்பது எதனால்?
நாம் திடீரென அதிர்ச்சிக் குள்ளாகும் போது, நமது இரத்த ஓட்டம் திடீரென விரைவுபடும். சட்டென்று இதயத்தில் மோதும். அப்போதுதான் நமக்குத் ‘திக்’ என்ற உணர்வு ஏற்படுகிறது. மற்றபடி இதயத்தில் மனம் இருப்பதால் அல்ல.
நாம் பயப்படும்போதுகூட நெஞ்சு “டப் டப்’’ என்று அடித்துக்கொள்ளும். இரத்த ஓட்டம் விரைந்து செல்வதன் விளைவே இது. இதயம் விரைவாய்த் துடிப்பதன் உணர்வே அது.
மனம் என்பது மூளைதான்!
நாம் எண்ணினாலும், சிந்தித்தாலும், இரக்கப்பட்டாலும் எல்லாம் மூளையில்தான் நடைபெறுகிறது. நாம் படிப்பதும், பார்ப்பதும், கேட்பதும், பதிவாவதும் மூளையில்தான். நெஞ்சில் – இதயத்தில் அல்ல. அதனால்தான் மூளை பாதிக்கப்பட்டால் நினைவு மறந்து போகிறது.
எனவே, மனது என்பது மூளையேயன்றி நெஞ்சு _ இதயம் அல்ல!