மெட்ராஸ்-ஐ பார்த்ததும் தொற்றும்?
பொதுவாக மழைக்காலங்களில் மெட்ராஸ்-_ஐ என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு கண்நோய் பரவலாகத் தொற்ற ஆரம்பிக்கும். அப்போது கண் உறுத்தல் அதிகம் இருக்கும். கண் கடுமையாகச் சிவந்திருக்கும்.
இந்நோய் வந்தவர்கள் கண்ணாடி போட்டுக் கொள்வார்கள். நோய் வந்தவர்கள் கண்ணைப் பார்த்தால் பார்த்தவருக்குத் தொற்றும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், இது தவறான எண்ணமாகும். கண்ணைத் தூரத்திலிருந்து பார்ப்பதால் இந்நோய் தொற்றுவதில்லை.
கண்ணோய் உள்ளவர் அடிக்கடி கையாலோ, விரலாலோ, கைக்குட்டையாலோ கண்ணைத் துடைப்பர். அவ்வாறு துடைத்தவுடன் அந்த விரலால் வேறு பொருளைத் தொடுவர். அப்போது நோய்க் கிருமி அதன் வழி அப்பொருளில் தொற்றும் (ஒட்டும்). அதை வேறொருவர் தொடும்போது அவர் விரலில் அக்கிருமி தொற்றி, அவர் தனது கண்ணைத் துடைக்கும்போது அவரது கண்ணைக் கிருமிகள் தாக்குகின்றன.
குறிப்பாகப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது, இந்நோய் எளிதில் தொற்றும். காரணம், பேருந்துக் கம்பிகளை மாற்றி மாற்றி நோய் உள்ளவரும் இல்லாதவரும் தொடுவர். இதன் மூலம் கண் நோய் எளிதில் தொற்றும்.
ஆகவே, இக்கண்நோய் பரவும் காலத்தில் நமது கைகளைத் தூய்மையாய் வைத்துக் கொள்வதும், கண்ணைத் தூய்மையாய் வைத்துக் கொள்வதும் இந்நோய் பரவாமல் தடுக்கும். மற்றபடி, பார்ப்பதால் இந்நோய் தொற்றுவதில்லை. தொற்றுவதாக எண்ணுவது தவறு ஆகும்.