மறையாத உண்மைகள்!
¨ இல்லாத ஒன்றை இருப்பதாய்ப் பேசும்
மாயைகளுக்கு இங்கே பஞ்சமில்லை!
பகுத்தறிவை மறந்து பட்டம் பெறினும்
படித்தவன் என்பதில் அர்த்தமில்லை!
¨ “மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்”
பழமொழிக்கிங்கே குறைச்சலில்லை!
உழவு செய்தவன் அழுது நிற்கிறான்
கண்ணீர் துடைக்க “கடவுள் இல்லை!”
¨ கானல் நீரை அள்ளிக் குடித்து
தாகம் தீர்த்தார் எவருமில்லை!
வானில் தெரியும் வானவில் கூட்டணி
அழகாய் இருந்தும் நிலைப்பதில்லை!
¨ நிழலைத் துரத்தி கூண்டில் அடைத்து
வெற்றி கண்ட மனிதரில்லை!
இலவசம் கொடுத்து வாக்கைப் பறித்து
ஏழ்மையை ஒழிப்பது சுலபமில்லை!
¨ இலவு காத்தக் கிளியைப் போல
ஏமாறும் கதைகள் முடிவதில்லை!
பிள்ளைகள் சிறக்க “பெரியார் பிஞ்சு”
பகுத்தறிவேட்டிற்கு இணையுமில்லை!
– புதுவை ச.புகழேந்தி