சுடானைத் தெரியுமா உங்களுக்கு?
அழியும் பேருயிர்
சுடானைத் தெரியுமா உங்களுக்கு?
நாம் இழந்த மிக முக்கியமான இரண்டு உயிர்களைத் தான் இவ்விதழில் அட்டைப் படத்தில் காண்கிறோம். ஒருவர் உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங். அவர் உலகம் தோன்றியதைப் பற்றிய ஆய்வில் வல்லவர். அவரைக் குறித்து பின்வரும் பக்கங்களில் நீங்கள் அறியலாம்.
மற்றோர் உயிரான சுடான், தன் இறப்பின் பின் உலகப் புகழ்பெற்றுள்ள ஒரு காண்டாமிருகம். அப்படி உலகப் புகழ்பெற்றது ஏன் தெரியுமா? சுடான் தான், வடக்கு வெள்ளை காண்டாமிருகம் (ழிஷீக்ஷீலீமீக்ஷீஸீ கீலீவீமீ ஸிலீவீஸீஷீ) என்னும் உயிரின வகையில் கடைசி ஆண்.
அப்படியென்றால்?
அப்படியென்றால், அப்படித்தான். உலகில் உள்ள 87 லட்சம் வகை உயிரினங்களுள் ஒரு வகை உயிரினமான வடக்கு வெள்ளை காண்டாமிருகத்தின் கடைசி ஆண் வாரிசை நம் கண் முன்னே இழந்திருக்கிறோம். சுடானுடன் வாழ்ந்துவந்த இரண்டு பெண் காண்டாமிருகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அந்த இரண்டும் சுடானின் மகளும் பேத்தியும் ஆவர். காண்டாமிருகம் இனமே அழிந்துபோய்விட்டதா? என்று ஒரு சந்தேகம் தோன்றலாம். இல்லை, காண்டாமிருகம் இனத்தில் வெள்ளை காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், சுமத்திர காண்டாமிருகம், ஜவன் காண்டாமிருகம் என்று பல வகை உண்டு. இவையெல்லாம் நம்மால் அண்மைக் காலத்தில் அடையாளம் காணப்பட்டவை. இதற்கு முன்பு இதே போல பல வகை காண்டாமிருகங்கள் இருந்திருக்கக் கூடும். இதில் வடக்கு வெள்ளை காண்டாமிருகத்தின் கடைசி ஆண் தான் சுடான். 1960களில் மத்திய ஆப்பிரிக்காவில் மட்டும் 2500 இவ்வகை காண்டாமிருகங்கள் இருந்ததாக கணக்கெடுப்புகள் சொல்கின்றன. ஆனால், உணவுக்காக வனவிலங்குகள் வேட்டையாடியதாலும், அதை விட அதிகமாக காண்டாமிருகத்தின் கொம்புக்காக சட்டவிரோதமாக மனிதர்கள் வேட்டையாடியதாலும் இதன் எண்ணிக்கை கடந்த 2000-ஆம் ஆண்டிலேயே வெறும் 30 என்ற அளவில் வந்து, பிறகு 3 ஆகி, இப்போது 45 வயதில், முதுமையின் நோய்களால் சுடான் மறைந்ததற்குப் பிறகு இரண்டாகிவிட்டது.
பார்க்கத் தான் இப்படி முரடாக இருக்கிறதே தவிர, பிற விலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்காத உயிரினம் காண்டாமிருகம். சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதைத் தடுப்பதற்காகத் தான், கென்யாவின் ஒல் பெஜட்டா சரணாலயத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பில் வாழ்ந்துவந்தது சுடான். இனி, இந்த வெள்ளை காண்டாமிருக இனத்தின் அழிவை மட்டும் தான் நாம் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் மீண்டும் இவ்வினத்தை தழைக்கச் செய்ய முடியும் என்று அறிவியல் அறிஞர்கள் பதில் தருகிறார்கள்.
இப்படி ஒரே ஓர் உயிரினம் அழிந்ததற்கு இவ்வளவு கவலைப்படுவதா என்றால், ஆம், அந்தக் கவலை அவசியமானது தான். ஒவ்வொரு உயிரினமும் உலகின் இயக்கத்துக்குத் தேவையானவையே! சூழலைப் பாதுகாப்பதில் சின்னஞ்சிறு உயிரினங்கள் முதல் பேருயிர்கள் வரை பெரும் பங்காற்றுகின்றன. மனித இனம் இல்லாமல் இவ்வுலகம் கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி சில லட்சம் ஆண்டுகளே! எனவே, நாமில்லாமலும் இவ்வுலகம் இருக்கும். நாம் இருந்து அதை அழித்துவிடக் கூடாது. இத்தனை அறிவியல் வளர்ந்த பின்னும் நாம் கவனக் குறைவாகவோ, பேராசையாகவோ இருந்து உலகை அழித்துவிடக் கூடாது என்றால் ஒவ்வொரு உயிரினமும் தேவையானதே!
– பிஞ்சண்ணா