தந்தை பெரியாரின் கதை – 13
– சுகுமாரன்
பெரியாரின் கொள்கை
பெரியார் வழக்கம்போல ஒரு கூட்டத்தில் கடவுளை கல் என்றும், அதை வணங்குபவனை காட்டுமிராண்டி என்றும் பேசினார்.
கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு கோபம் வந்துவிட்டது.
பெரியாரிடம் சென்றார். அவரைப் பார்த்து, நீங்கள் கடவுளை கல் என்று சொல்லலாமா? இது சரியா? என்று கேட்டார்.
அதற்குப் பெரியார், ஆமாம், சொன்னேன். என்ன தப்பு. வேண்டு-மானால் என்னுடன் வாருங்கள் காட்டுகிறேன் என்ற பெரியார் கோயிலுக்குப் புறப்பட்டார். கையிலிருந்த தடியை தரையில் தட்டினார்.
கேள்வியைக் கேட்டவர், அந்தக் கல்லுக்கு மந்திரம் செய்யப்-பட்டிருக்கிறது. அதனால் அதைக் கடவுள் என்று வணங்குகிறோம் என்றார்.
அதற்குப் பெரியார், கல்லுக்கு மந்திரம் சொல்லி கடவுளாக்க முடியுமானால், ஜாதியால் தாழ்த்தப்-பட்டுள்ள மனிதர்களுக்கு மந்திரம் சொல்லி அவர்களை உயர்ந்த ஜாதியார் ஆக்க முடியாதா? என்றார்.
கேள்வி கேட்டவர் பெரியாரின் பதில் கேள்வியால் திகைத்துப் போனார். பின் பெரியார் சொன்னதை ஏற்றார்.
பெரியாருடைய கொள்கை மனிதனுக்குத் தொண்டாற்றுங்கள் என்பதுதான். புரிந்ததா?
கடவுளை மற, மனிதனை நினை. மதங்கள் மனித ஒற்றுமைக்குத் தடையாக இருக்கின்றன. மூட நம்பிக்கையை வளர்க்கின்றன.
===================
பெரியார் எளிமையே உருவானவர்.
ஒருமுறை தென்ஆற்காடு மாவட்டம் திருக்கோயிலூரில் ஆதிதிராவிடர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் அதில் கலந்துகொண்டு பேசினார்.
உணவு வேளை! பெரியாரை காளியப்பா என்பவர் உணவு உண்ண அழைத்துச் சென்றார். பெரியாருக்கு உணவு பரிமாறப்பட்ட இடம் எது தெரியுமா? ஒரு மாட்டுக்கொட்டகை. வைக்கோல் தரை! அதன்மேல் துணி விரிக்கப்பட்டது. அங்கே பெரியார் அமர்ந்தார். வாழை இலைகூட இல்லை. தையல் இலையில் சோறு, பரங்கிக்காய் குழம்பு. அது குழம்பாக இல்லை, ரசம் மாதிரி இருந்தது.
பெரியார் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியவாறு சாப்பிட்டார்.
பெரியார் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்கிறவர். கூட்டங்களை ஏற்பாடு செய்கிறவர்களின் கஷ்டத்தை உணர்ந்தவர். அவர்கள் தருகிற எப்படிப்பட்ட உணவையும் சாப்பிடுவார்.
இந்த எளிமை போற்றுதலுக்குரியது.
இக்காலத்தில் விளம்பரத் தலைவர்கள் பலர் உள்ளனர். பெரியார் விளம்பரத்தில் விருப்பம் இல்லாதவர். எல்லோருக்கும் எளிய வாழ்வே ஏற்றதென்று அடிக்கடி கூறுவார்.
என்னை நான் சின்னவன் என்றும், குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியுடையவன் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று ஒருமுறை பெரியாரே கூறியுள்ளார்.