வியப்பிற்குரிய வாழ்க்கை ஸ்டீபன் ஹாக்கிங்
இழப்பை ஈடுகட்டுவோம்
வியப்பிற்குரிய வாழ்க்கை ஸ்டீபன் ஹாக்கிங்
– ஞானப்பிரகாசம்
உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங்!
கருந்துளை மற்றும் வெப்ப இயக்கவியல் தொடர்பான ஆய்வுகளின் மூலம் புகழ் பெற்றவரும் பிரித்தானிய இயற்பியலாளருமான ஸ்டீஃபன் ஹாக்கிங் (76), 14 மார்ச் 2018 அன்று அதிகாலை காலமானார். தனது ஆராய்ச்சிகளால் மட்டுமல்ல; பேசவும், எழுதவும், நிற்கவும், நடக்கவும் முடியாதபடி நோயால் பாதிக்கப்பட்ட பின்னும் சிந்திப்பதற்கு மூளை இருக்கிறதே என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து காட்டியதன் மூலமும் உலகை வியக்க வைத்தவர். தனக்கென வடிவமைக்கப்பட்ட சிறப்புக் கருவிகள் மூலம், தன் கருத்தை வெளிப்படுத்தியவர்; ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர்.
1942 ஜனவரி 8 அன்று பிறந்த ஸ்டீஃபன் ஹாக்கிங் (Stephen Hawking) ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார்.
இவர் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகப் பணியாற்றினார்.
அண்டவியலும் (Cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (Quantum gravity) இவரது முக்கிய ஆய்வுத்துறைகள் ஆகும்.
ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருந்துளைகளுக்கும் (Black hole), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன.
கருந்துளையினுள் ஒளி உட்பட எதுவுமே வெளியேற முடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன-வென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ் வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.
21 வயதில், அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis) என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார்.
இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத் துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார்.
இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையிலும், புதிய கோணத்திலும் கற்பிக்க, காலம் _ ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற பாடத் திட்டத்தை உருவாக்கி கொடுத்தார். இப்பாடத்திட்டம் 2000ஆம் ஆண்டு நலங்கிள்ளி அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது.
A Brief History of Time, The universe in a nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்த இவரது நூல்களாகும்.
வேற்று கிரகவாசிகளைப் பற்றி பலவித கருத்துக்களையும், நூல்களையும் எழுதிய இவர், ஏலியன்களை தேடும் எந்தவித செயல்களிலும் விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டாம் எனவும், அதுவே பூமிக்கு ஆபத்தாக அமையக்கூடும் எனவும் கூறினார்.
மனித இனத்தின் பேராசையாலும், முட்டாள் தனத்தினாலும் இந்த பூமி அழியக்கூடும். மனித இனம் தொடர்ந்து வாழவேண்டும் என்றால் வேறு கிரகத்தினை ஆராய வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
அவரது இழப்பை, அவரைப் போலவே அறிவ்யல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, மனித குலத்திற்கு ஊக்கமுடன் உழைத்து ஈடுகட்டுவோம்.