இவ்வுலகம் பஞ்சபூதத்தால் ஆனதா ?
இந்த உலகம் பஞ்சபூத சேர்க்கையால் ஆனது. இந்த உடல் பஞ்சபூத சேர்க்கை என்று பரம்பரையாகச் சொல்லி வருகின்றனர். இது பெரும் தவறு ஆகும். இந்த அறிவியல் சார்ந்த செய்தியை பிஞ்சுகள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
காரணம், பஞ்சபூதம் என்பதே தவறு!
1. நிலம், 2. நீர், 3. காற்று, 4. நெருப்பு, 5. வான் என்ற அய்ந்தும் பஞ்சபூதம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த அய்ந்தும் சேர்ந்தே உலகு உருவாகிறது, உடல் உருவாகிறது என்றால் இந்த அய்ந்தும் தனிப் பொருட்களாக இருக்க வேண்டும் (தனிமங்களாக இருக்க வேண்டும்).
நிலம், நெருப்பு, நீர், காற்று, வான் என்ற அய்ந்தில் முதலில் நீர் என்பதை எடுத்துக் கொள்ளுங்கள்.
நீர் என்பது ஒரு தனிமமா? தனிப் பொருளா? என்றால் இல்லை.
ஹைட்ரஜன்+ஆக்ஸிஜன் என்ற இரண்டு வாயுக்களும் ஒன்றிணைந்து அழுத்தத்திற்கு உட்படும்போது நீர் உருவாகிறது. ஆக, நீர் என்பது ஒரு சேர்மம். சேர்மம் எப்படி ஒரு தனிப் பொருளாகும்? தனிப்பொருளாக இல்லாதது எப்படி ஒரு பூதமாக இருக்கமுடியும்?
அடுத்து காற்றை எடுத்துக் கொள்ளுங்கள். காற்று என்பது ஒரு சேர்மம். அதில் ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் என்று பல வாயுக்கள் அடங்கியுள்ளன. எனவே, காற்று என்பது ஒரு தனிப் பொருள் அல்ல. எனவே, அதை ஒரு பூதமாகச் சொல்வது தவறு. மூன்றாவதாக நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நிலம் என்பது ஒரு தனிப் பொருளா? இல்லையே! அதில் எண்ணற்ற கனிமப் பொருட்கள், மண், எண்ணெய்ப் பொருட்கள் என்று ஏராளம் உள்ளன. எனவே, நிலம் என்பதும் ஒரு தனிப் பொருள் அன்று. எனவே, தனிப் பொருள் அல்லாத நிலத்தை ஒரு பூதம் என்பது தவறு.
அடுத்து நெருப்பு. நெருப்பு என்பது ஒரு பொருளா? இல்லை. அது பொருட்களிலிருந்து வெளிப்படும் ஆற்றல். ஆற்றல் வேறு. பொருள் வேறு. மின்னாற்றல், காந்த ஆற்றல் போல நெருப்பு என்பது வெப்ப ஆற்றல். ஆற்றல் என்பது தற்காலிக வெளிப்பாடு.
உரசுவதால் உருவாகக்கூடிய வெப்ப வெளிப்பாடு. எனவே, அதை ஒரு பூதமாகச் சொல்வது தவறு.
இறுதியாக ஆகாயம். -அதாவது வான். ஆகாயம் என்பது ஒரு பொருளே அல்ல. உயரே தெரிவதால், அது ஏதோ ஒரு திரை போன்ற ஒன்று என்று கருதப்படுகிறது. ஆனால், அப்படி எதுவும் உயரே இல்லை.
ஆகாயம் என்றால் வெறுமை. அதாவது வெளிப்பரப்பு (வெட்டவெளி). சென்று கொண்டேயிருந்தால் எதுவும் தென்படாது. நமக்குத் தெரிகின்ற திரை போன்ற காட்சி நமது கண்ணின் பார்வை எல்லை! அவ்வளவே!
ஒன்றுமில்லை என்பது ஒரு பொருளா? எனவே, வெறுமை என்பது ஒரு பொருள் அல்ல.
இவ்வாறு பஞ்சபூதங்கள் என்று கூறப்படுகின்ற எந்த ஒன்றும் தனிப் பொருள் அல்ல. (எனவே, அவை பூதங்களும் அல்ல.) ஆக, அவை சேர்ந்து இந்த உடல் உருவாகிறது; இந்த உலகம் உருவாகிறது என்பது அடிமுட்டாள் தனமாகும்; அறியாமையாகும்! <