பெரியாரின் தயவு தாட்சணியமின்மை
தந்தை பெரியாரின் கதை
சுகுமாரன்
ஓவியம்: கி.சொ
ஒரு பேட்டியின்போது பெரியார் கூறினார்.
கேள்வி: உங்களுக்கு துன்பம் தருவது எது?
பதில்: என்னைப் புரிந்துகொள்ளாமல் போலித்தனமாக என்னைப் புகழ்வது.
இத்தகைய மனோபாவம் பெரியாருக்கு தயவு தாட்சணியமின்மையைக் கொடுத்தது.
பெரியார் பாதை கொள்கை வழிசெல்வது. பெரியாருக்கு நபர்கள் முக்கியமல்ல. அவர்களின் முகமும் முக்கியமல்ல.
அதனால் அவர் தம்முடைய போராட்டங்களை தம்மை ஆதரித்த கட்சிகளின் ஆட்சியிலும் நடத்தினார். நண்பர்கள் ஆட்சியில் இருந்தபோதும் நடத்தினார்.
1933ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியில் பெரியார் ரயில்வே தொழிலாளர்களை ஆதரித்துப் போராடி சிறை சென்றார். அப்போது பெரியார் நீதிக்கட்சிக்காரர்.
நீதிக்கட்சித் தலைவர் குமாரராஜா முதலமைச்சராக இருக்கும்போது போராட்டங்கள் நடத்திச் சிறை சென்றார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம் நடத்திச் சிறை சென்றார். அப்போது முதலமைச்சர் அவருடைய நண்பர் இராஜாஜி.
விநாயகர் சிலை உடைப்புப் போராட்டத்திற்காகச் சிறை சென்றார். இராமர் பட எரிப்புப் போராட்டம் நடத்தினார். அப்போது முதலமைச்சர் அவர் ஆதரித்த காமராசர்.
தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் பெரியார் போராட்டங்கள் நடத்தத் தயங்கவில்லை. கர்ப்பக்கிருக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.
பெரியாரும் -_ இராஜாஜியும் சிறந்த நண்பர்கள்.
ஆனால், கொள்கையில் பெரியார் தென்துருவம், இராஜாஜி வடதுருவம்.
இராஜாஜி அரை நாள் படிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பெரியார் அதை எதிர்த்து ஒழித்தார்.
இராஜாஜி இந்தியை ஆதரித்தார். பெரியார் முழு மூச்சாக எதிர்த்தார்.
அரசியலில் பெரியார் இராஜாஜியை எதிர்த்தார். காமராஜரை ஆதரித்தார்.
பெரியார் வழி வேறு. இராஜாஜி வழி வேறு. ஆனால், இருவருடைய நட்பும் மாறவில்லை. மறையவில்லை.
இராஜாஜி பொது மருத்துவமனையில் இருந்தார். இராஜாஜி இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன் பெரியார் அவரைக் காண வந்தார்.
பெரியாருக்கும் உடல் நலமில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க ஒருவர் தள்ளிவந்தார்.
இராஜாஜி நிலைமையைப் பார்த்ததும் பெரியார் கண் கலங்கினார். பெரியாரை இராஜாஜி அருகில் அழைத்தார். பெரியார் அருகில் போனார்.
இராஜாஜியின் கைகள் பெரியார் முகத்தைத் தேடின. இராஜாஜியின் விரல்கள் பெரியாரின் முகத்தை ஆசையோடு தடவின.
இருவருடைய நட்பின் ஆழத்தை நினைத்து அருகிலிருந்தவர்கள் கண் கலங்கினர்.
பெரியாருக்கும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.விற்கும் இருந்த நட்பும் சிறப்பானது.
பெரியார் மருத்துவமனையில் இருந்தார். பலரும் பார்க்க வந்தனர். திரு.வி.க. வந்தபோது பெரியார் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
திரு.வி.க. ஒருமுறை சொன்னார்: நான் இறந்தால் எனக்காக அழுகிறவர் பெரியாராகத்தான் இருக்கும். முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்னும் வள்ளுவர் நெறியில் பெரியாரின் நட்பு அமைந்திருந்தது.