பெரியாரின் நேர்மை
சுகுமாரன்
ஓவியம்: கி.சொ
பெரியாரின் நேர்மையை எல்லோரும் பாராட்டியுள்ளனர்.
உள்ளும் புறமும் ஒன்றாக இருப்பது நேர்மை. சொல்லும் செயலும் வேறாக இருக்கக் கூடாது. அரிய இக்குணம் பெரியாரிடம் நிரம்பி இருந்தது.
ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் பெரியாரை பேட்டி கண்டார். அப்போது இக்கேள்வியைக் கேட்டார்.
கேள்வி: தாங்கள் ஏன் தங்களுடைய சுயசரிதையை எழுதக் கூடாது.
பதில்: உண்மையாக எழுதினால் என்னிடமுள்ள இழிவான குணங்களை எழுதித் தீரவேண்டும். அது மனதுக்குக் கஷ்டம்.
எப்போதும் வெளிப்படையாகப் பேசுவது பெரியாரின் பழக்கம். இந்த நேர்மையான பதில் கேள்வி கேட்டவரின் வாயை அடைத்தது. ஆனால், கஷ்டம் என்றாலும் தனது வாழ்வை வெளிப்படையாக வாழ்ந்துவிட்டுப் போனவர் பெரியார். தன் இளமைக்குறும்புகளை, தன் பழக்க வழக்கங்களை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலான தமிழர் தலைவர் நூலில் அதைப் படிக்கலாம்.
பெரியாரின் நேர்மைக்கு இன்னொரு சான்று.
பெரியார் ஒருமுறை கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
நீதிபதி பெரியாரை இரண்டு நபர்கள் ஜாமீன் பேரில் விடுதலை செய்வதாகவும் 10ஆம் தேதி விசாரணைக்கு வரவேண்டும் என்றும் தீர்ப்புக் கூறினார்.
பெரியார் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. 10ஆம் தேதி வருகிறேன். ஆனால், ஜாமீன் தரமுடியாது என்று கூறினார். இல்லையென்றால் சிறையில் அடையுங்கள் என்று கூறினார்.
நீதிபதிக்கு சங்கடம். உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி பெரியாரின் நேர்மையை சந்தேகிக்க முடியுமா? வேறு வழி இல்லை. பெரியாருக்கு ஜாமீன் தேவை இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார். பெரியாரின் நேர்மை வென்றது.
பெரியாரின் நாகரிகம்
குன்றக்குடி அடிகளார் ஒரு மதத் தலைவர், துறவி ஆவார்.
கடவுளுக்கு அர்ச்சனை செய்வது சமஸ்கிருத மொழியில் உள்ளது. அது தமிழ் மொழியில் நடக்க வேண்டும் என்று கோரினார் அடிகளார்.
புரியாத மொழியில் அர்ச்சனை செய்வது பக்தனுக்குப் புரியாது, இவர்கள் நம்பும் கடவுளுக்கு பக்தனின் மொழி புரியாதா? என்று முன்பே கேட்ட பெரியாரும் அடிகளாரை ஆதரித்தார்.
அது முதல் இருவரும் இணைந்து தமிழ்மக்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டனர்.
ஒருமுறை பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு குன்றக்குடி அடிகளார், தலைமை தாங்கினார். மேடையில் பேசிய நடிகவேள் எம்.ஆர்.ராதா, கடவுள் வழிபாட்டை தாக்கிப் பேசினார். அடிகளார் மனம் வேதனைப்பட்டது.
இதையறிந்த பெரியார், அடிகளார் நமது விருந்தினர். அவரை வருத்தமடைய வைக்கக் கூடாது என்று அமைதிப்படுத்திப் பேசினார்.
இன்னொரு சமயம்,
பெரியார் குன்றக்குடி மடத்திற்குப் போனார். பெரியாரை அடிகளார் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார். அப்போது மடத்தின் வழக்கப்படி மடத்தின் பணியாளர்கள் பெரியாரின் நெற்றியில் திருநீறைப் பூசினார். பெரியாரும் ஏற்றுக்கொண்டார்.
அய்யா அவர்களின் நெற்றியில் திருநீறு இருப்பதைப் பார்த்த அடிகளார் அய்யா அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கச் செய்து களைப்பாக இருக்கிறீர்கள்! முகம் கழுவி வாருங்கள் என்று கூறினார்
பின்னர் பெரியாரிடம் கட்சிக்காரர்கள், நீங்கள் திருநீறை பூசியிருக்கக் கூடாது என்று வாதிட்டனர்.
பெரியார் சொன்னார்: எனக்கு மரியாதை செய்ய வேண்டுமென்பதற்காக அவர்கள் திருநீறு பூசினர். அப்போது நான் முகத்தையா திருப்பிக் கொள்ள முடியும்? அது அடிகளாரை அவமதிப்பது போலாகாதா? அதனால்தான் பூசிக் கொண்டேன்.
பெரியாரின் இந்த நாகரிகம் நாம் கற்க வேண்டிய பண்பாகும்.