சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம்

லண்டனில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஓவியம் ஒன்று, அடுத்த நொடியே சுக்குநூறாக கிழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
லண்டனில் உள்ள பிரபல சோதேபைய்ஸ் அரங்கில் கடந்த மாதம் ஓவிய ஏலம் ஒன்று நடைபெற்றது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு ஓவியங்களை ஏலம் எடுக்க போட்டிபோட்டனர். அந்த ஏலத்தில் லண்டன் ஓவியரான பாங்கிசியின் ஓவியமான ஒரு சிறுமி, பறக்கும் சிவப்பு பலூனை நோக்கிக் கையை நீட்டும் ஓவியமும் இடம்பெற்றிருந்தது. அந்த ஓவியம் ஏலத்திற்கு வந்தபோது ரூ.10 கோடிக்கு அதனை ஒருவர் ஏலம் எடுத்தார்.
ஆனால் அடுத்த விநாடி, சுவரில் மாட்டியிருந்த அந்த ஓவியம் கீழே விழுந்து சுக்குநூறாக கிழிந்தது. இதைக்கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
எப்படி இது நடந்தது என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை.
அந்த ஓவியத்தை வரைந்த பாங்சி என்பவர், வேண்டுமென்றேதான் இந்த ஓவியம் சுக்குநூறாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
ஓவியத்தின் கீழே அதற்கென தயாரிக்கப்பட்ட இயந்திரம் மூலம் ஓவியம் கிழிக்கப்பட்டதாக ஓவியர் பாங்சி தெரிவித்துள்ளார்.
அழிவுதான் கலைகளில் மிகப்பெரியது என்று மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது. ஓவியத்தை கிழிப்பதற்காகவே ரிமோட் மூலம் இயங்கும் தனித்த இயந்திரத்தையும் நான் பொருத்தினேன் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டார் பாங்கிசி.
ஏலத்துக்கு ஏற்பாடு செய்தவர்களுக்குத்தான் பதட்டம்.. ஏலம் எடுத்தவர் என்ன சொல்வாரோ என்று! கலைஞர்களின் மனநிலையே வித்தியாசமானதுதான்.