வாழவைக்கும் வாழ்வியல் மாலை
ஊக்கம்
பயிரினை வளஞ்செயும் பயன்தரு நிலமென
உயிரினைக் கல்வியால் ஊக்கலாம் ஓர்கவே!
அறிவொளி
அறிவொளி நெறியினால் ஆளுமை அடையலாம்
முறிவொளி மருந்தென முழங்கி வாழ்கவே!
ஆளுமை
வடவரின் வழிவரு மடச்சடங் கொழிப்பினால்
இடரறும் துன்பிலா திருக்கலாம் எழுகவே!
நம்பிக்கை
செயலினில் உறுதியாய்ச் செயற்படுந் திறலினார்
மயலிலா நம்பிக்கை மாந்தராய் வெல்கவே!
உண்மை
உளம்பொயா ஒழுங்கினால் ஓங்கிநிலம் நாணாளும்
வளம்பொயா வலிவுறும் வாழ்வியல் மகிழ்கவே!
உதவி
உதவியால் உயர்ந்தவர் உலகினில் உயர்த்துவார்
உதவிசெய் மனத்தினால் உலகினை ஆள்கவே!
தொலைக்காட்சி
எமைவிடாய் எனும்படி இருந்திரை ஒளியெலாம்
உமையடிப் படுத்திடும் உணர்ந்தறிந் தொளிர்கவே!
தலையெழுத்து
தலையெழுத் தெனவுரைத் தறுதலை மொழியினால்
நிலையழுத் திழிவுநோய் நீங்கி நிமிர்கவே!
தன்னாய்பு
அவரவர் தனையறி ஆய்வியல் அறிவினால்
தவறினைக் களையலாம் தெரிந்துணர்ந் துயர்கவே!
புகழ்
ஒழுங்குசீர்க் குருதிபோல் உவப்புறு புகழ்வரின்
விழுங்குபோர் வெறியறும் விளங்கி வளர்கவே!
(ஆசிரியர் தாத்தா எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் நூலின் கருத்துகளைத் தொகுத்து எழுதப்பட்டது.)