பொங்கல் விழாவில் சிறுவர் சிறுமியர் பொன்னூசல்
பொன்னூசல் எல்லோரும் ஆடுவமே – நல்ல
பொங்கற் புதுநாளைப் பாடுவோமே
தென்னாடு வாழிஎன் றாடுவமே – நல்ல
செம்பரிதி வாழிஎன் றாடுவமே!
– பொன்
கன்னடம் தெலுங்குமலை யாளம் துளுவம் – நல்ல
கன்னல்நிகர் செந்தமிழும் ஒன்றென்றே
மன்னிய திராவிடர்கள் எல்லோரும் – பிறர்
வந்தசைக்க ஒண்ணாத குன்றென்றே!
– பொன்
சந்தனப் பொதிகைமலை எங்கள் உடைமை – வெண்
சங்கெறியும் தென்குமரி எங்கள் உடைமை
வந்தசைக்க ஒண்ணாத மறவர் நிலம் – நல்ல
வங்கம்வரை எங்கள்நிலம் வாழிய என்றே!
– பொன்
முத்தெடுக்கும் மூன்றுகடல் நட்டநடுவில் – நல்ல
முல்லைமரு தம்குறிஞ்சி நெய்தல் கிடந்தே
மெத்தநலம் செய்திடும் திராவிடநிலம் – நன்கு
வெல்கவெல்க வெல்கவெல்க வெல்கஎனவே!
– பொன்
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பொங்கல் வாழ்த்துக் குவியல்