வலிமை
சின்னச் சின்னக் கதைகள்
கதை: மு.கலைவாணன்
ஓவியம்: மு.க.பகலவன்
கருவேல மரங்கள் நிறைந்த வேடந்தாங்கல் ஏரி. இது பறவைகளின் சரணாலயம். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் முதல் மார்ச் வரை அந்தப் பகுதியே கோலாகலமாய் காட்சி அளிக்கும்.
கூட்டம் கூட்டமாய் வந்துபோகும் பறவைகளைப் பார்க்க மனிதர்களும் கூட்டம் கூட்டமாய் வந்து போவார்கள்.
ஏரியின் பக்கத்தில் அடர்ந்த புதரில் சில காடைகள் வசித்து வந்தன. அதில் ஒரு வயதான காடைக்-கு பறவைகள் வருவதும், போவதும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது.
உள்ளூரில் இருக்கும் நம்மைப் பார்க்க இப்படி யாராவது வருவார்களா? வெளியூரிலிருந்து வந்தால்தான் மதிப்பு மரியாதை எல்லாமே.
ம்…. என்ன செய்யிறது காடையாய்ப் பிறந்தது நம்ம தப்பு… என்று புலம்பியது. ஏரிக்கரையின் ஓரத்தில் தன் பெரிய இறக்கையைக் கோதியபடி நின்று கொண்டிருந்த வெளிநாட்டுப் பறவையின் அருகில் சென்றது அந்தக் காடை.
உன் பேர் என்ன…? என்றது.
பெலிக்கான் _ என்றது வெளிநாட்டுப் பறவை.
நீ எந்த நாடு?
ஆஸ்திரேலியா…
இங்கு எப்படி வந்தாய்…?
பறந்து வந்தோம்… நாங்கள் கூட்டமாகச் சேர்ந்து வந்தோம்.
இங்கே ஏன் வந்தீங்க?
இப்போ எங்க நாட்டுல வெயில் கடுமையா இருக்கும்… இந்த இடம் எங்க இனத்தை விருத்தி செய்ய ஏற்ற இடம்…
கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொறிச்சு, அதுக்கு சிறகு முளைச்சு பறக்கப் பழகினதும், குடும்பத்தோட எங்க நாட்டுக்குப் போயிடுவோம் என தன் கதையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தது வெளிநாட்டுப் பறவை.
அடடா… இவ்வளவு பெரிசா உங்களுக்கு உடம்பு இருக்கிறதுனாலதான் இதெல்லாம் முடியுது. எங்களைப் பாரு சின்ன உடம்பு… அச்சப்பட்டு அச்சப்பட்டு வாழறோம், எங்க தலைவிதி அப்படி…
அதெல்லாம் தப்பு… எங்களால செய்ய முடிஞ்ச எல்லாமே எல்லாராலேயும் செய்ய முடியும்.
அதுக்கு உடல் வலிமையை விட உள்ளத்து வலிமைதான் முக்கியம்.
விதியை நம்பி வேதனைப் படாம மதியை நம்பிச் செயல்படணும் என்று சொல்லிவிட்டு தன் பட்டுச் சிறகை விரித்துப் படபடத்துப் பறந்தது வெளிநாட்டுப் பறவை.
காடை அதை மரியாதையுடன் பார்த்தபடி சொன்னது…
“உள்ளத்து வலிமையே!
அவரவர்க்கு உள்ள வலிமை!”