களஞ்சியம்
தங்க மங்கை மேரி கோம்
இந்தியாவின் மேரிகோம் 48 கிலோ எடைப் பிரிவில் உலக குத்துச் சண்டை வாகையர் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார். 35 வயதாகும் மேரிகோம் தனது 18ஆவது வயதில் சர்வதேச குத்துச்சண்டையில் களமிறங்கினார். முதலில் அதே ஆண்டில் நடந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்ற, பின் 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் உலக வாகையர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். நவம்பரில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை வாகையர் போட்டியில் பங்கேற்று ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். 2020இல் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு பயணித்துக் கொண்டிருக்கும் மேரிகோமின் வெற்றி வாசகம் மேடையில் ஏறிவிட்டால் எதைப் பற்றியும் கவலைப்-படுவதில்லை என்பதாகும்.
பாட நூல்கள் இணைய தளத்தில்
தமிழ்நாட்டில் புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் உள்ள பாடநூல்களை அப்போதும் படிப்பதற்கு வசதியாக அவை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்திலும் (www.tnscert.org) வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த இணைய தளத்தை பயன்படுத்தி அதிக பயன் பெறலாமே! கையடக்க பாடப் புத்தகமாய் எல்லோருக்கும் பயன்படும்.
வாள் வீச்சுப் போட்டியில் தமிழ்ப் பெண் சாதனை
காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டி ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் மகளிர் சேபர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் பவானி தேவி, இங்கிலாந்தின் எமிலியை 15_12 என்கிற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். 44 வருட காமன்வெல்த் வாள் வீச்சுத் தொடரில் ஓர் இந்திய வீராங்கனை தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். சென்னையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான பவானி தேவி, கடந்த ஆண்டு உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதல் பெண் அதிபர்
எத்தியோப்பியாவின் முதல் பெண் அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் சாஹ்லே – வொர்க் செவதே. ஆப்பிரிக்கக் கண்டத்தில் அதிபராகப் பதவியேற்கவிருக்கும் முதல் பெண் அதிபர் இவரே. பாலின சமத்துவக் கொள்கைகளில் அதிக நம்பிக்கையுடைய எத்தியோப்பிய பிரதமர் அபிய் அஹ்மத்தின் 20 நபர் கேபினட்டில் பாதிப்பேர் பெண்கள்தாம். இந்தப் பிரதமர் _ அதிபர் கூட்டணி உலக நாடுகளின் மொத்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதிபர் பதவிக்கு மட்டுமல்ல, இதற்கு முன்பாக ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதியாகவும், ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கான ஐ.நா. அலுவலகத் தலைமையாகவும் தேர்வான முதல் பெண்ணும் சாஹ்லேதான். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.