சிறப்பு
சின்னச் சின்னக் கதைகள்
கதை: மு.கலைவாணன்
ஓவியம்: மு.க.பகலவன்
இரை தேடி வெ-கு தூரம் பறந்து வந்தது ஒரு மீன் கொத்தி.
பெரிய கால்வாயில் தண்ணீர் ஒடிக் கொண்டிருந்தது. ஏதோ ஓர் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் என்பதால் மிக வேகமாக வந்தது.
கால்வாய் நடுவில் இருந்த பட்டுப்போன மரக்கிளையில் உட்கார்ந்தது மீன்கொத்தி…
சூரிய வெளிச்சத்தில் தண்ணீர் பளிங்குபோல் பளபளத்தது.
கெண்டை மீன்கள் கூட்டங்கூட்டமாய் நீந்திக் கொண்டிருப்பது மீன்கொத்தியின் பார்வையில் பட்டது.
நீந்தும் மீன்கள் அனைத்துமே தண்ணீர் போகும் போக்கில் போகாமல் எதிர்த்தே நீந்திக் கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் பசியை மறந்து ஆராய்ச்சியில் இறங்கியது மீன்கொத்தி.
நீரின் வேகத்தை எதிர்த்து மிகுந்த சிரமப்பட்டு மீன்கள் நீந்துவதைப் பார்த்து -ஏன் இத்தனை சிரமத்துடன் எதிர்நீச்சல் போட வேண்டும்? நீர் போகும் போக்கிலே போனால்தான் என்னவாம்? என்று உரக்கக் கேட்டது.
பக்கத்துப் பாறைமேல் உட்கார்ந்திருந்த தவளை பட்டென பதில் சொன்னது,
சற்று தூரத்தில் இந்த ஆறு கடலில் கலக்கிறது. நீர் போகும் போக்கிலேயே இந்த ஆற்று மீன்கள் போனால் உப்புக் கடலில் விழுந்து, உயிர்விட வேண்டியதுதான். அதனால்தான் இப்படி எதிர்நீச்சல் போட்டுப் போராடி தம் இன்ப வாழ்வை இனிதாய் வாழ்கின்றன இந்த மீன்கள்.
அந்த நேரத்தில் செத்து மிதந்த சில மீன்கள், ஆற்று நீர்போ-கும் போக்கில் போய்க் கொண்டிருந்தன.
அதைப் பார்த்ததும் தெளிவுபெற்றது மீன்கொத்தி…
வயிற்றுப் பசியைவிட, அறிவுப் பசிக்கு விடை கிடைத்த மகிழ்வுடன் சொன்னது…
“போகிற போக்கில் போவது இறப்பு…
போராடி வாழ்வதே வாழ்க்கையின் சிறப்பு”