சாதனை : உசேன் போல்ட் ஆகணும்!
சர்வேஷின் கனவு
79 மெடல்கள், 71 சான்றிதழ்கள், 4 பரிசுகள், 7 விருதுகள் என 82 மாரத்தான் போட்டிகளில் இதுவரை 1205 கிலோ மீட்டர்களைக் கடந்திருக்கிறான் ஒரு 7 வயதுச் சிறுவன். தாம்பரம், நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விசு, விஜயலட்சுமி ஆகியோரின் மகன் சர்வேஷ். மழலை மாறாத சர்வேஷ் தனது 4 ஆம் வயதில் கடலூரில் நடந்த குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டியில் பங்கேற்று முதன் முதலாக இரண்டாம் பரிசு பெற்றார். ஏவிடி நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் தன் தந்தையோடு, சர்வேஷ் படிக்கும் சாய்ராம் பள்ளித் திடலில் தினமும் 2 கிலோ மீட்டர் ஓடுவாராம்.
குழந்தையின் ஆர்வத்தை பார்த்து மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள அழைப்புகளும் தேடி வந்ததுண்டு. சில முறை தோல்வியடைந்து துவண்டுபோய் ‘அப்பா வேண்டாம்பா’ என்று அழுதாலும், ஒரு நாளும் ஆர்வத்தையும், உழைப்பையும் விட்டதில்லை. சென்னையில் நடந்த மாரத்தான் போட்டில் முதலில் தோற்றாலும், பின் விடாமுயற்சியால், 100 நாளில் ஓடும் சவாலில் 206 கிலோ மீட்டர் ஓடி முடித்தார். இது போல் 7 முறை அல்ட்ரா ரன்னிங் போட்டிகளில் பல சவால்களை எளிதாக எதிர்கொண்டவர்.
தமிழகத்தின் மாரத்தான் வீரர்களின் பட்டியலில் சர்வேஷ் பெயர் இடம்பெற்றிருக்கிறது. பெசன்ட் நகரில் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தானில் பங்கேற்று பெறியவர்களையும் தாண்டி முதல் பரிசை வென்றார். ஓட்டத்தில் இருக்கும் ஆர்வத்தைப் போல் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் அதிகம். கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.
மாரத்தான் இருக்கிறதோ இல்லையோ தினமும் பயிற்சியை விடாத சர்வேஷின் கனவு உசேன் போல்ட் போல் ஆவதாம்.!.
– செ.அன்புச்செல்வி