யாச்சியின் குமிழி ஆசை
குமிழி செய்யவேண்டும் என்ற ஆசை எப்படியோ யாச்சிக்கு வந்துவிட்டது. யாச்சி பள்ளிக்கு செல்லும் ஒரு முயல்குட்டி. நூலகத்தில் இருக்கும் புத்தகத்தில் குமிழி இருப்பதைப் பார்த்துவிட்டது. நாட்டில் சிறுவர்கள் ஏதோ சோப்புத் தண்ணீரில் குழலை முக்கி எடுத்து ஊதினால் குமிழி வரும் என போட்டிருந்தது.
தன் தோழமையான வாசியா வாத்திடம் தன்னுடைய ஆசையைக் கூறியது. வாசியா ஒரு தேர்ந்த வாசகி. நூலகத்தில் குமிழி பற்றிய மேலும் செய்திகளை சேகரித்தது. தன் நண்பன் முயல் யாச்சிக்கு உதவ முயன்றது. ஊதுவதற்கு குழல் வேண்டும் அடுத்ததாக அந்த குழையும் நீர் வேண்டும். ஒரு பப்பாளி மரத்தின் கிளையை உடைத்து அதனைக்கொண்டு சின்னதாக குழல் செய்துகொண்டன யாச்சியும் வாசியாவும். அடுத்ததாக அந்தக் கலவை நீரை செய்ய வேண்டும். அவர்களுடைய நண்பன் முதலையிடம் விசாரித்தார்கள். அது குளத்திற்கு அருகே இருக்கும் ஒரு விசேஷமான இலை இருக்கும், அதாவது பாதி மஞ்சள் நிறத்திலும் மீது பச்சை நிறத்திலும் இருக்கும். அந்த இலையை நன்றாக குழைத்தால் கலவை தயார் என்றது முதலை.
யாச்சியும் வாசியாவும் அந்த இலையைத் தேடி அலைந்தார்கள், கண்டுபிடித்தும்விட்டார்கள். எண்ணி இருபது இலைகள் மட்டுமே இருந்தன. அதனைப் பறித்து எடுத்துவந்து நன்றாக குழைத்தார்கள். யாச்சி அந்த பப்பாளிக் குழலைக் எடுத்து, கலவையில் முக்கி ஊத முயன்றது. ஆனால் குமிழி வரவில்லை. இருவரும் சோர்ந்தனர். மீண்டும் முதலையிடம் சென்று விசாரித்தனர்.
ஓர் இரவு அந்தக் கலவையை காய வைக்கவேண்டும் என்றது முதலை. அப்படியே செய்தார்கள். ஓர் இரவு காத்திருந்தார்கள். இதனை தன் நண்பர்கள் யாரிடத்திலும் சொல்லவே இல்லை. ஒரே ஒரு நண்பன் பாகாவிடம் மட்டும் யாச்சி கூறியது. பாகா ஒரு குட்டி யானை. அதே பள்ளியில் தான் பாகாவும் படிக்கின்றது. எல்லோரிடமும் நன்றாகப் பழகும்.
ஹே, நானும் குமிழி ஊதும்போது வரேன்பா என்று ஆசையாக கேட்டது. சரி வா என யாச்சி அழைத்துச்சென்றது. திட்டம் இது தான். வாசியா, குழலைக்கொண்டு குமிழியை ஊதும். பாகாவின் மேல் அமர்ந்து மேலே வரும் குமிழிகளை யாச்சி உடைக்கும். அவ்வளவு தான். அது தான் அவர்களுக்கு மகிழ்ச்சி. இன்று குமிழிகள் நன்றாகவே வந்தன. ஒன்று, இரண்டு, மூன்று.. பத்து குமிழிகள் குழலில் இருந்து வந்தன. ஒன்பது குமிழிகளையும் பாகாவும் யாச்சியும் உடைத்துவிட்டன. பத்தாவது குமிழி தான் மிகப்பெரியதாக வந்தது. பாகா மீதிருந்து தாவி அந்த குமிழியை உடைக்க முயன்றது யாச்சி முயல்.
அப்போது நடந்தது அந்த அதிசயம். டமாலென யாச்சி குமிழிக்குள் சென்றுவிட்டது. குமிழி மேலே மேலே பறக்க ஆரம்பித்தது. சில நொடிகள் என்ன நடக்கின்றது என பாகாவிற்கும் வாசியாவிற்கு புரியவே இல்லை. பாகாவின் உயரத்தையும் தாண்டி மேலே சென்றது குமிழி. மேலே மேலே மேலே..
பதறியபடியே குமிழி செல்லும் திசையில் பாகாவும் வாசியாவும் ஓடின. குமிழிக்கு உள்ளே இருந்து காப்பாத்துங்க காப்பாத்துங்க என யாச்சி கத்தியது வெளியே கேட்கவே இல்லை.
பதறிக்கொண்டு யானை ஓடி வருவதைப்பார்த்த பருந்து நண்பன் என்ன என விசாரிக்க, அதோ யாச்சி என்றது. யாச்சி உயரப்பறந்து கொண்டிருந்தது. இல்லை மிதந்துகொண்டு இருந்தது. பருந்து நண்பன் சிறகடித்து பறந்து மேலே சென்றது. குமிழிக்கு அருகே சென்றதும் யாச்சிக்கு உயிர் வந்தது. அதுவரை பதட்டமாக இருந்த யாச்சி கொஞ்சம் நிதானித்து கீழே அந்த காட்டினைப் பார்த்தது. ஆஹா, என்ன அழகு என்ன அழகு என வியந்தது. பருந்து தன் கூரிய அலகுகளால் டொக் என குமிழி மீது குத்த படால் என குமிழி வெடித்தது. சர்ர்ரென மேல இருந்து யாச்சி விழ ஆரம்பித்தது. அது விழவும் கீழே பாகா வரவும் சரியாக இருந்தது. லபக் என பாகா யாச்சியை பிடித்துக்கொண்டது.
அன்று இரவு, முதலை எல்லோருக்கும் விருந்து வைத்திருந்தது. குமிழியில் பறந்த கதையை ஆயிரத்தி முப்பதாவது முறையாக யாச்சி சொல்லிக்கொண்டு இருந்தது.
அங்க மேல எனக்கு பயமே இல்லை…