தேசியக் கல்விக் கொள்கை குறித்து வாசகர்கள் கருத்து
ஏழ்மை வரையரையிலும் பல்வேறு ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தேன். அதனால் எனக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டுமே சரியாக வரவில்லை. ஆறாம் வகுப்பில் எனது தந்தை, அரசுப் பள்ளியில் சேர்த்தார். பிறகுதான் என்னால் மூச்சுவிட முடிந்தது. இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் இரண்டாமாண்டு படிக்கிறேன். எதிர்காலத்தில் அய்.ஏ.எஸ் பயிலவேண்டும், சட்டம் பயில வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருக்கிறேன்.
இந்த புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால், என்னைப் போன்றவர்கள் மூன்றாம் வகுப்பில், அய்ந்தாம் வகுப்பில், எட்டாம் வகுப்பில் என்று அடுத்தடுத்து பொதுத்தேர்வுகள் எழுதினால் என்னாகும்? தோல்வி அடைந்து என்னைப் போன்றவர்களின் கல்விக்கான எதிர்காலமே கேள்விகுள்ளாகும்.
– வ.ம.வேலவன், சென்னை
கிராமப்புறத்தில் முதல் தலைமுறையைச் சார்ந்த மாணவர்கள் தான் அதிகப்படியாக இருக்கிறார்கள். அவர்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியவர்கள். இத்திட்டத்தினை திணித்தால் ஒருவர் கூட அடுத்த வகுப்புக்கு முன்னேற முடியாத சூழ்நிலை ஏற்படும். இது ஒரு மறைமுக குலக் கல்வித் திட்டம் ஆகும். எனவே, இத்திட்டத்தினை ஆதரிக்கவில்லை.
– அருள், வேலூர் கிராமம், விழுப்புரம் மாவட்டம்
கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு இடம் இல்லை. சமூகநீதி, இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் உரிமைக்கு இடம் இல்லை. 5, 8 பொதுத் தேர்வு, 9, 10, 11, 12 Semester முறை, கல்லூரியில் இடம் பெற மீண்டும் பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
– த.கோ.ஓவியா, சென்னை
திராவிட மொழிகளையே சாராத சமஸ்கிருத மொழியை இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது என்றும் பண்பாட்டு மொழி என உருவகப்படுத்துவதிலிருந்தே தெரிகிறது. இது தெளிவற்ற, ஒருதலைப்பட்சமான கொள்கை என்று.
தனியார் பள்ளிகளின் கட்டணங்களை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றால், இதனால் அனைவருக்கும் சமமான கல்வியும், கற்போர் எண்ணிக்கையும் கேள்விக்குறியாகிவிடும். முடிவில் கல்வி வியாபாரமாக்கப்படும்.
– செ.அன்புச்செல்வி, திண்டுக்கல்