கதைப்பாடல்- சிறு பறவையும் பெரு முதலையும்
ஆற்றங் கரையின் ஓரத்திலே
அழகிய பறவை வந்ததுவாம்
சேற்றைக் கிளறி கிடைத்தவற்றை
தின்றது சின்ன அலகாலே
நிலத்தில் பறவையைக் கண்டவுடன்
நீந்தியே வந்தது பெருமுதலை
நலமது கேட்டிடக் கரையோரம்
நகர்ந்தே குருவியைக் கண்டதுவாம்
ஆவென வாயைத் திறந்ததுவே
அடடா பற்கள் பயங்கரமே!
போயது முதலையின் வாய்க்குள்ளே
புதுமைச் சிகிச்சை செய்ததுவாம்
எதையும் படக்கென விழுங்கிவிடும்
இயல்புடை அந்த முதலையுமே
சதைத்துகள் நீக்கிய பறவையதை
தன்குட்டி போல நினைத்ததுவாம்
பற்கள் இடையே பெருகிவரும்
பாழும் புழுக்களை அகற்றியதால்
உற்ற நட்பெனக் குருவிதனை
உணர்ந்தே மெச்சி மகிழ்ந்ததுவாம்
அலகால் சிகிச்சை செய்துதவி
ஆனந்தக் களிப்பில் சிறகசைத்தே
உலகின் உயர்குணம் நட்பெனவே
உணர்ந்தே பறந்தது சிறுபறவை!
– கொ.மா.கோ.இளங்கோ