சின்னச் சின்னக் கதைகள் : மூடத்தனம்
ஊருக்கு ஒதுக்குப்புறம்,
பாழடைந்த மண்டபம்.
அதில் வௌவால் ஒன்று குடியிருந்தது.
அது இருட்டியதும் வெளியில் சென்று சுற்றித் திரிந்து இரைதேடித் தின்னும். விடியும் நேரத்தில் திரும்பி வந்து இருட்டு மண்டபத்தின் உத்திரத்தில் தலைகீழாய்த் தொங்கும்.
அங்கே தனியாகத் தங்கியிருக்கப் பயந்தது வௌவால்.
யாரையாவது ஏமாற்றி துணைக்கு அழைத்து வர முடிவு செய்தது.
விடியற்காலை நேரத்தில் ஊருக்குள் போனது.
ஒரு காகத்திடம் சென்று “காகமே, அதோ தெரியும் அற்புதமான வேலைப்பாடு நிறைந்த அந்த மண்டபத்தைப் பார்…
அது ஓர் அதிசயமான இடம்… அங்கு ஒருநாள் இரவு தங்கினால் போதும்… நம் வாழ்வில் நினைத்ததெல்லாம் நடக்கும்…
அந்த மண்டபத்தின் உள்ளிருக்கும் உத்திரத்தில் தலைகீழாய் தொங்கினால் போதும் அடுத்த பிறவியிலும் ஆனந்தம் கிடைக்கும், மோட்சம் பெறலாம், வாழ்க்கையே வளமாகும்.
அப்படிப்பட்ட அதிசய மண்டபத்தில் தங்கியிருக்க நீ வருகிறாயா?’’ என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது.
அதற்கெல்லாம் மயங்காத கறுப்புக் காகம்,
“அட மண்டு வௌவாலே! பாழடைந்த அந்த இருட்டு மண்டபம் பலன் தரும், நலம் தரும்னு யாருக்கிட்ட கதை விடுறே… நீ போயி அதிலே தங்கு, தொங்கு. என்னை எதுக்குக் கூப்பிடுறே?… உன்னோட மூடப் பேச்சை நம்ப நான் முட்டாள் இல்லே…
இருட்டு அறையிலே தொங்குனாலும் சரி, தங்குனாலும் சரி, எந்த மாற்றமும் வராது…
இவ்வளவு காலமாத் தொங்குற நீ, இன்னும் வாய்வழியாகத்தானே மலங்கழிக்கிறே! உனக்கே எந்த மாற்றமும் நடக்கலே….
இதுலே என்னையும் எதுக்குக் கூப்பிடுறே? மரியாதையா ஓடிப்போயிடு! இல்லே… உன்ன கொத்தியே கொன்னுப்புடுவேன்…’’
என்று கோவமாகத் திரும்பியது காகம்.
வௌவால் அதற்குள் வெகுதூரம் பறந்து போனது.
“தன்னை ஏமாற்ற நினைத்த வௌவால் வேறு யாரையும் ஏமாற்றிவிடக் கூடாது’’ என நினைத்த காகம், மற்றவரை எச்சரிக்க உரத்த குரல் எழுப்பியபடி பறந்தது.
“மூடத்தனத்தை நம்பாதே!
மூளைக்கு விலங்கிட்டுக் கொள்ளாதே!’’