தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்
கே. பாண்டுரங்கன்
VOICE [வினை வகை]
தை மாதத்தில் பொங்கல் தயார் செய்வதைப் பார்த்திருப்பீர்கள்!
பொங்கலுக்கு என்னென்ன வேண்டும்?
பால், சர்க்கரை, வெல்லம், பச்சரிசி, ஏலக்காய், உலர் திராட்சை, பாசிப்பருப்பு என பல உள்ளிடு பொருள்கள் தேவைப்படுமல்லவா?
அதுபோல, தமிழ் அல்லது ஆங்கில மொழி பேசுவதற்கு இம்மாதிரியான Tense, Voice, Articles, Noun, Pronoun மற்றும் Verb போன்ற பல உள்ளிடு பொருள்கள் தேவைப்படுகின்றன.
இவற்றை எப்போது பயன்படுத்துவது? எப்படிப் பயன்படுத்துவது என்பதில்தான் ஒரு மொழி முழு உருவம் பெறுகிறது _ பொங்கல் சமைப்பது போல.
நெருப்பு என்பது கற்றுக்கொள்ளல்.
பாத்திரம் என்பது Subject (எழுவாய் அதாவது செய்பவர்).
பால் என்பது Object (பயனிலை அதாவது பயன்படுத்தப்படுவது).
அரிசி என்பது Tense (காலம்).
சர்க்கரை என்பது Voice (குரல்)
உலர் திராட்சை, ஏலக்காய் என்பவற்றை Noun, Verb, Pronoun, Preposition, Articles, Adjective… போன்றவையாகக் கற்பனை செய்து கொள்வோம்.
இவற்றை வைத்துத்தான் மொழியை சமைக்கப் போகிறோம்.
அதாவது பேசுவதற்கும், எழுதுவதற்கும் சொற்றொடரை உருவாக்கும்போது இவையெல்லாம் கண்டிப்பாகத் தேவைப்படுகின்றன.
Voice என்பதை சர்க்கரை என்று ஏன் சொன்னேன் தெரியுமா? உப்பில்லாத பண்டம் குப்பையிலே… அதுபோல சர்க்கரை இல்லாத பொங்கலும், பாலும் சுவை தராது…
Voice இல்லாத மொழியும் பேச இயலாது.
புரிகிறதா? Voice என்றாலே குரல்தானே… குரலில்லாவிட்டால் மொழி பேச முடியுமா?
அதுபோல்தான் வினைவகை எனப்படும் இந்த Voice_உம்!
போன இதழில் Tense என்றால் காலம் என்று பார்த்தோம்.
Tense எதற்கு? Voice எதற்கு?
Tense என்றால் எப்பேது நடந்தது என்பதனை சொற்றொடரில் காட்டுவதாகும். Voice என்றால்
(1) யார் செய்தார்கள், (2) என்ன நடந்தது என்பதனை சொற்றொடரில் காட்டுவதாகும்.
விரிவாகப் பார்ப்போம்…
[Voice] வினை வகை இரண்டு:
1. Active Voice
2. Passive Voice
Active Voice என்றால் செய்வினை வாக்கியம் (மூடப்பழக்கத்தைக் குறிப்பதல்ல)
முன்பு அட்டவணையில் 12 Tense எடுத்துக்காட்டுகள் பார்த்தோமல்லவா? அவை எல்லாம் Active Voice ஆகும்.
தற்போது ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
முதலில் ஆங்கிலத்தில்…
I eat sugarcane
I eat sugarcane
(Subject) (Verb) (Object)
[Doer]
இது தமிழில் சற்று மாறி வரும்.
நான் கரும்பு சாப்பிடுகிறேன்.
நான் கரும்பு சாப்பிடுகிறேன்
(எழுவாய்) (பயனிலை) (வினைச்சொல்)
(செய்பவர்) (பயன்படுத்தப்படுவது) (செயல்)
* இது சாதாரண நிகழ்காலம்.
* அது மட்டுமல்ல; இது செய்வினை சொற்றொடரும் (Active Voice-சும்) கூட.
* இங்கே Tense-இல் உள்ளபடி மாற்றம் ஏதும் இல்லாமல் அப்படியே வாக்கியம் வரும்.
அ யார் செய்கிறார்கள்? என்று கேள்வி கேட்டால் அதற்குச் சரியான பதிலை இந்தச் சொற்றொடரின் முன்பகுதியிலுள்ள Subject (எழுவாய் அல்லது செய்பவர்) சொல்லும். அதாவது, யார் சாப்பிடுகிறார்கள்? என்னும் கேள்வியைக் கேட்டால்… ‘நான் சாப்பிடுகிறேன்’ என்கிற பதில் அச்சொற்றொடரின் முற்பகுதியில் வருகிறது அல்லவா? அதாவது செய்வினை (நான் செய்வதால் செய்வினை)
Passive Voice என்றால் செயப்பாட்டுவினை.
ஆனால், Passive Voice இல் என்ன நடந்தது என்பது மட்டும் விளக்கமாகக் காட்டப்படும். பின்வரும் எடுத்துக்காட்டைப் பாருங்கள்.
முதலில் ஆங்கிலத்தில்…
Sugarcane is eaten [by me] Sugarcane is eaten [by me] [Object] ‘Be’ form verb & [verb] [Subject] [DOER]
இப்போது தமிழில்…
கரும்பு சாப்பிடப்படுகிறது (என்னால்)
கரும்பு சாப்பிடப்படுகிறது (என்னால்)
(பயனிலை) (வினைச்சொல்) (எழுவாய்)
(பயன்படுத்தப்படுவது) (செயல்) (செய்பவர்)
மேலே கண்ட இச்சொற்றொடரில் யார் செய்கிறார்கள்? என்று கேள்வி கேட்டால் அதற்கான பதிலை இச்சொற்றொடரின் முன்பகுதியிலுள்ள பயனிலை (கரும்பு) சொல்லாது.
_இது என்ன நடந்தது, என்ன செய்யப்-பட்டது என்பதை விளக்கும் சொற்றொடர். எனவே, இது செயப்பாட்டு வினை சொற்றொடர் (Passive Voice).
சில இடங்களில் எழுவாய் (Subject) பயன்படுத்தத் தேவையிருக்காது. நீங்கள் ஆங்கில _ தமிழ்ப் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். அங்கே யார் செய்தார்கள் என்பது தேவைப்பட்டிருக்காது. அது மாதிரியான சொற்றொடர்கள் செயப்பாட்டு வினையில்(Passive Voice) வந்திருக்கும்.
எடுத்துக்காட்டாக,
Periyar statue was erected at Anna Salai [by Government]
தமிழில்…
பெரியார் சிலை அண்ணா சாலையில் நிறுவப்பட்டது (அரசாங்கத்தால்)
மேற்கண்ட வாக்கியத்தில் (அரசாங்கத்தால்) அல்லது [by Government] என்பது அவ்வளவு முக்கியமாகத் தேவைப்படவில்லை. செய்யப்படும் நிகழ்வு மட்டும் முக்கியமாகிறது. எனவே, இது (Passive Voice) செயப்பாட்டு வினை.
Active Voice, Passive Voice இரண்டையும் ஓர் அட்டவணை மூலம் அடுத்த இதழில் தெளிவாகப் பார்க்கலாம்.
காத்திருங்கள்.
(தொடரும்…)