டிம்போ கொண்டு வந்த அம்மிக்குட்டி
விழியன்
(முன்குறிப்பு : இக்கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே)
“அம்மா இதுக்குப் பேரு அம்மிக்குட்டின்னு வெச்சிருக்கேன்” என்று அதனை டிம்போ காட்டினான்.
“பேரு வெச்சிருக்கியா? அது என்னன்னு தெரியுமா?”
“தெரியும்” என்றான்.
தான் ஏரிக்கரையில் குளித்துக் கொண்டிருந்த-போது கரையில் காலில் ஏதோ சொரசொரப்பாகப் பட்டதாகவும் அதனை எடுத்துப் பார்த்தபோது இந்த ஓணானை எடுத்ததாகவும் கூறினான் டிம்போ. அவன் மூன்றாம் வகுப்பு படிக்கின்றான். அவனும் அவன் அம்மாவும் தனியாக கிராமத்தில் வசிக்கின்றார்கள். “டிம்போ, நீ எடுத்து வந்திருப்பது ஓணான் இல்ல; குட்டி முதலை” என்றதும் டிம்போ கொஞ்சம் பதறினான் இதுவரையில் அவன் முதலைகளைப் பார்த்ததே இல்லை. அந்த ஏரியில் வெகு தூரத்தில் முதலைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கின்றான். “உடனே போய் ஏரியில் போட்டுவிட்டு வா” என்றார் அம்மா. ஆனால், ஏரிக்குச் செல்வதற்குள் இருட்டிவிடும். மேலும் அந்தச் சமயம் கிராமங்களுக்கு எல்லாம் மின்சார வசதிகள் கொடுக்கப்படவில்லை. ஓரத்தில் இருந்த தன் பாட்டியின் மரப்பெட்டியில் அந்த அம்மிக்குட்டியை வைத்தான். ஏற்கெனவே அதன் வாய்ப் பகுதியைக் கயிற்றால் கட்டி இருந்தான். காலை எழுந்ததும் தன் நண்பர்களிடம் காட்டிவிட்டு ஏரியில் விட்டுவிடுவதாக வாக்களித்தான்.
இனி கதை, அந்த மரப்பெட்டிக்குள்..
‘டங் டங் டங்’ என தன் வாலினை அடித்துப் பார்த்தது அம்மிக்குட்டி. வாயும் கட்டப்பட்டு இருந்தது. தான் ஓர் இருட்டு அறையில் மாட்டிக் கொண்டது புரிந்தது. அந்த மரப்பெட்டி ஒரு குட்டி எலியின் கூடாரம். பெட்டியின் பின் பக்கமாக ஓர் ஓட்டை போட்டு அதற்குள் குடி இருக்கின்றது. இரவு சாவகாசமாக தன் இருப்பிடத்திற்குத் திரும்பியபோது, அழையாத விருந்தாளி இருந்ததைக் கவனித்தது. அதுவும் தன் அறை முழுவதையும் அடைத்துக் கொண்டு இருந்தது. அன்பின், “நண்பரே, நீங்கள் யார்?” எப்படி வந்தீர்கள்?”
“ம்ம்ம்ம்.. ம்ம்ம்.. அம்ம்ம்ம்”
“என்னைய்யா மொழி பேசுகின்றீர்கள். எங்க பள்ளியில் இப்போதைக்கு ஒரு மொழிதான் சொல்லித்தர்றாங்க. அதுவே போதுமா இருக்கு”
“ம்ம்ம்.. ம்ம்ம்”
“அட போயா ஒன்னும் புரியல”
முதலையின் வாய் கட்டப்பட்டு இருந்ததால் அதனால் சரியாகப் பேச முடியவில்லை. கொஞ்சம் சிரமப்பட்டு வாயினை அசைத்துத் தாழ்ந்த குரலில் பேசியது. “நான் பெரிய ஏரியில் வசிக்கிறேன். எப்போதும் வற்றாத ஏரி அது. என்னுடைய அம்மா, “அந்தப் பக்கம் போகாதே, அங்கே விஷச்செடிகள் இருக்கு” என்று சொன்னார்கள். ஆனால், அதனைக் கேட்காமல் சென்று செடிகளைச் சாப்பிட்டேன். அது ஒரு வித மயக்கம் கொடுத்தது. கரையில் ஒதுங்கும் போது இந்தச் சிறுவன் கையில் சிக்கிவிட்டேன். என்னை ஓணான் என நினைத்து வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டான். வாயினைக் கட்டி இந்த மரப்பெட்டியில் போட்டுவிட்டான்.”
‘ஓ முதலையா!’ எனக் கேட்டது எலியார். அதன் பெயர் ‘எலியா’ என்று அறிமுகம் செய்துகொண்டது. “நிலத்தில் வந்தால் மீன்கள் இறந்துபோகுமே நீ எப்படி இறக்கவில்லை” என விசாரித்தது. “நாங்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய பிராணி இனம்” என்றது.
“நண்பா, என் வாயில் கட்டி இருக்கும் கயிற்றினை உன் பற்களால் கடித்து என்னை விடுவிப்பாயா?”
“ஆங், ஆசை தோசை, என்னை கடிச்சிச் சாப்பிடவா?”
“அய்யோ இல்லை நண்பா, நான் சிங்கம்_எலி கதையினைக் கேட்டிருக்கேன். அதுபோல உதவு. எனக்கு இந்த அறைக்குள் சிறைப்பட்டதால் வியர்வை வருகின்றது. ஆனால், எங்கள் வியர்வை நாளங்கள் எங்கள் வாயில் இருக்கின்றன. மேலும் நான் வாயைத் திறந்து வைத்தால்தான் எனக்குத் தூக்கமே வரும். இத்தனை நேரம் நான் தூங்கவில்லை. ஆனால், மயக்கத்தில் இருந்தேன்.”
எலியா அம்மிக்குட்டிக்கு உதவச் சம்மதித்தது. ஆனால், எலிக்கு இரவில் கண் தெரியாது, அம்மிக்குட்டிக்கு நன்றாகக் கண் தெரியும். கண் தெரியாமல் எப்படி சரியாக கயிற்றினைக் கடித்து விடுவிப்பது என்கிற ஆலோசனை நடந்தது. “கொஞ்ச நேரம் பொறு, எனக்கு ஒரு யோசனை இருக்கு” என பொந்தின் வெளியே சென்றது. கால்மணி நேரத்தில் வந்தது. “அம்மிக்குட்டி, எனக்கு நல்ல நேரம் துவங்குது” என்றது. சில நிமிடங்களில் அந்த அறை வெளிச்சம் பெற்றது. ஆமாம், எலியா வெளியே சென்று உயிரோடு இருக்கும் மின்மினிப் பூச்சிகளிடம் கோரிக்கை வைத்தது. வெகு குறைந்த மணி நேரங்களே உயிரோடு இருக்கும் மின்மினிப் பூச்சிகள், தங்கள் வாழ்நாளில் உதவ ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என சம்மதித்தன. இப்போதுதான் எலியா அம்மிக்குட்டியைத் தெளிவாகப் பார்த்தது. கொஞ்சம் பயந்தும்போனது. ஆனால், பயத்தைக் காட்டாமல் மெல்லமெல்ல கயிற்றினைக் கடித்தது.
கயிறு விடுவிக்கப்பட்டு முதலை வாயைத் திறந்தது. அதற்கு அவ்வளவு நிம்மதி.
“அம்மிக்குட்டி, நீ என்ன சாப்பிடுவாய்? என்னையே வேண்டும் எனக் கேட்காதே! உனக்குச் சில கீரைகளை எடுத்து வருகிறேன். அதனைச் சாப்பிடு” என்று வெளியே சென்று டிம்போவின் அம்மா வாங்கி வைத்திருந்த கீரைக்கட்டில் சிறிது பகுதியினை எடுத்து வந்து கொடுத்தது. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் பத்து பத்து மின்மினிப்பூச்சிகள் வந்து வெளிச்சமூட்டின. எலியாவும் அம்மிக்குட்டியும் தங்கள் கதைகளைப் பகிர்ந்தன. “தூக்கம் வருது தூங்கலாமா” என்று கேட்டது எலியா.
“உன் வாயினை நன்றாகத் திற! உனக்குப் பரிசு ஒன்றைத் தருகின்றேன்” என்றது எலியா. ஆவென வாயினைத் திறந்ததும் அம்மிக்குட்டியின் வாய்க்கு நடுவே ஒரு கட்டையினை வைத்துவிட்டது எலியா. “நண்பா, என்னதான் நீ நண்பனாக இருந்தாலும் கொஞ்சம் பயமா இருக்கு. இப்ப உன்னால் வாயை மூட முடியாது. நானும் நிம்மதியாகத் தூங்குவேன்” எனச் சொல்லி, தூங்கிவிட்டது.
காலை எழுந்ததும், “டிம்போ உன்னை ஏரியில் விடத் தயாராகின்றான். அவனை எதுவும் செய்துவிடாதே! அவன்தான் உன்னை எனக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளான். மகிழ்ச்சியாக இரு நண்பா”. வாய்க்குள் நிற்க வைத்திருந்த கட்டையில் ஒரு சின்ன நூலினைக் கட்டி பொந்துக்கு வெளியே சென்றது எலியா. ‘டக்’கென நூலினை இழுக்கவே, கட்டையும் வாயிலிருந்து வெளியே வந்தது. ‘பச்’சென முதலையின் வாய் மூடியது. ஓர் இரவிலேயே நண்பனான எலியாவைப் பிரியப்போவது நினைத்துக் கண்ணீர் வடித்தது அம்மிக்குட்டி. அது நிச்சயம் முதலைக் கண்ணீர் அல்ல!<