பாடம் படிச்ச பண்ணையார்
கொ.மா.கோ.இளங்கோ
பட்டுச் சட்டை பளபளக்க
பொன் கழுத்தும் மினுமினுக்க
எட்டூர் பட்டி பண்ணையார்
ஏறிச் சென்றார் பல்லக்கில்
பல்லக் கொன்றும் பருந்தல்ல
பறந்து வானில் இறங்கிவிட
சொல்லப் போனால் கூலிபெற்று
சுமப்பவர் நால்வர் தேவையே
அப்ப டித்தான் பண்ணையாரும்
அயலூர் பயணம் செய்தாராம்
சப்பரத்தில் ஊரைச் சுற்றும்
சாமிக் கிணை தானென்றே
அந்தி சாய்ந்த அவ்வழியில்
அடர்ந்த இருளும் கவ்வியதால்
செந்தூர் எல்லைச் சத்திரத்தை
சென்ற டைந்தார் அவரும்தான்
நீளப் படுக்கை தரைவிரித்தே
நித்திரை கொள்ளச் செல்கையில்
தோள்சு மந்த நால்வரையும்
“தூங்காமல் காக்கணு” மென்றாராம்
சோர்வு மிகுதியில் அதிலொருவர்
சாய்ந்து தூங்குவதைக்கண்டார்
பார்வைக் கணைகொண்டு முறைத்தாராம்
பணியில் இருந்தே நீக்கினராம்
“தூக்கம் இங்கே குற்றமெனில்
தீயிலிடுங்கள் இயற்கைதனை
தாக்கும் விலங்குக் கூட்டத்தின்
தலைவன் தானிவர் காணீரே!
பல்லக்கு சுமப்பவர் பாவியென
பாவிக்கும் உம்மிடம் ஒருகேள்வி
அல்லலுடன் பயணித்த பாதையிலே
அவரது சுமைகணம் அறிவீரா?
சுமைகூலி சொன்ன சொற்கணைகள்
சுருக்கென உரைத்தது மூளைக்குள்
“தமையனாய் எனையும் திருத்திட்டீர்
தவறெலாம் உணர்ந்திட்டே” னென்றார்
திருவாய் திறந்திட்ட பண்ணையார்
தீர்வு இதற்கொன்று சொன்னாரே
திரும்பும் வழியெங்கும் பல்லக்கில்
தமையனைச் சுமக்கத் தயாரானார்.
குறிப்பு: பல்லக்கு என்பது போக்குவரத்து வசதிகள் பெருகாத காலத்தில் மனிதர்கள் மற்றொரு மனிதனைச் சுமந்து செல்லும் வாகனம் ஆகும். இதில் அரச-குடும்பத்தினர், பணக்காரர்கள், மதகுருக்கள் போன்றோர் செல்வதுண்டு. இன்று போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்டதாலும் அரச குடும்பங்கள் இல்லாததாலும் இப்பல்லக்கு தூக்குதல் பெரிதும் இல்லை. ஆனால் மதம், கடவுள், மதகுருக்கள், அர்ச்சகர்கள் இன்றும் இம்முறையில் பவனி வருகின்றனர். இது சமத்துவத்திற்கும் மனிதத்திற்கும் எதிரானதாகும். இப்பண்ணையார்கள் பாடம் படித்தாலும், மதத்தின் பெயரால் மடத்தனம் பரப்பும் பலர் இன்றும் பாடம் படிக்கவில்லை.
– பொறுப்பாசிரியர்