இளம் சாதனையாளர்கள் – தண்ணீரால் இயங்கும் ஊர்தி
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ரெங்கசாமிபுரத்தைச் சேர்ந்த மாணவர் முருகன், மதுரை அரசு அய்.டி.அய்.யில் 2ஆம் ஆண்டு படிக்கிறார். சிறு வயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் மிகுந்தவர். தனது கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளார்.
அண்மையில் கோவையில் நடந்த ஹேக்கத்தான் எனும் அறிவியில் நிகழ்ச்சியில் பங்கேற்று, தான் உருவாக்கிய நீரினால் இயங்கும் இரு சக்கர ஊர்தியை அங்கு காட்சிப்படுத்தினார்.
‘தண்ணீர் பைக்’ குறித்து இளம் விஞ்ஞானி முருகன் கூறுகையில், “இரு சக்கர ஊர்தியை ‘ஸ்டார்ட்’ செய்வதற்கு ஒருபுறம் 1 லிட்டர் நீருடன் 200 கிராம் உப்பைப் போட்டு கலந்து வைக்க வேண்டும். அதற்கு ‘சோலார் பேனலுடன்’ கூடிய ‘பேட்டரி’ இணைக்கப்படும். இதன்மூலம் உப்பு கலந்த நீரில் இருந்து ஆக்ஸிஜன் தனியாகப் பிரிந்து வெளியேறி, ஹைட்ரஜன் இன்ஜினுக்குச் சென்று வாகனத்தை இயக்குகிறது. இந்த பைக்கில் 40 கி.மீ தூரம் வரை செல்லலாம்” என்கிறார்.
இதற்கு முன் 2017இல் வேர்க் கடலை உரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து சிறந்த ‘இளம் விஞ்ஞானி’ விருதை சென்னையில் பெற்றார். மாற்றுத் திறனாளிகளுக்காக ‘வீடர் கார்’ ஒன்றை உருவாக்கினார். போதிய பணம் இல்லாததால் அதை முழுமைப்படுத்த முடியவில்லை என ஆதங்கப்படும் முருகன்,
“என்னிடம் இதுபோல பல செயல்முறைத் திட்டங்கள் உள்ளன. அரசு உதவி செய்தால், என்னால் மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு வர முடியும்’’ என்று வருந்துகிறார். அரசு இவர் போல ஏழ்மையிலும் சாதனை செய்ய முயல்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது கடமையாகும்
– ச.மலர்விழி
வருங்கால விஞ்ஞானி
தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த நித்தியன் ஊத்தங்கரையில் உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். அண்மையில் இஸ்ரோ அறிவித்த ‘Space Tourism’ என்னும் தலைப்பில் ஆங்கில கட்டுரைப் போட்டியை நடத்தியது. “சுமார் 200 பேர் இந்தப் போட்டியில் கலந்துகிட்டாங்க. அதில் ஜூனியர் பிரிவில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தார்” நித்தியன்.
அதன் பயனாக “ஒரு நாள் முழுக்க குடும்பத்துடன் இஸ்ரோவைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது” என்கிறார் நித்தியனின் தந்தை சவுந்தர்ராஜன்.
“இஸ்ரோவுக்குள்ளே எங்க செல்போனை எல்லாம் வாங்கி வெச்சுட்டாங்க. ராக்கெட்டை எப்படி தயார் செய்வாங்க? அதுக்கு என்னென்ன தேவைன்னு சொன்னாங்க. அங்கே போய்ட்டு வந்ததும், வருங்காலத்தில் ‘சயின்டிஸ்ட்’ ஆகி நிறைய சாதிக்கணும்னு முடிவெடுத்திருக்கேன்” என உணர்வு பொங்கக் கூறினார் நித்தியன். நித்தியனின் லட்சியம் வெற்றி பெற வாழ்த்துவோம் பிஞ்சுகளே
– மகிழ்