காரணமின்றி ஏற்காதீர்கள்! : கணவன் பெயரைச் சொல்லக்கூடாது
சிகரம்
கணவன் பெயரை மனைவி சொல்லக்கூடாது என்னும் சம்பிரதாயம் இன்றளவும் கிராமப்புறங்களில் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.
சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தால்கூட சாடை மாடையாகத்தான் சொல்வார்களே தவிர, நேரடியாகச் சொல்ல மாட்டார்கள்.
ஒரு பேருந்தில் நடந்த நிகழ்ச்சி என்னவென்றால், நடத்துநர் எல்லோரிடமும் காசு பெற்று, பயணச்சீட்டு வழங்கிக் கொண்டு வந்தார்.
அப்போது ஒரு பெண், “எங்க வூட்டுக்காரர் பேருக்கு ஒரு டிக்கட் கொடு” என்றாள். நடத்துநர் உள்ளிட்ட எல்லோரும் புரியாமல் குழம்பினர்.
“என்னம்மா சொல்ற” நடத்துநர் கேட்டார்.
“அதான்… எங்க வூட்டுக்காரர் பேருக்கு ஒரு டிக்கட் கொடு” என்றாள்.
நடத்துநர் கடுப்பாகிப் போய், “என்னம்மா…? கிண்டல் பண்றியா?” என்று கடுப்படித்தார்.
உடனே, “ஏம்மா, நீங்க சிதம்பரம் போகணுமா? என்றார்.
“ஆமாம்” என்று அந்தப் பெண் தலையாட்டினாள்.
“அட, ஏம்மா! அதைச் சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே!” என்றார் நடத்துநர் அலுப்புடன்.
“எங்க வூட்டுக்காரர் பேர எப்படிச் சொல்றது?” என்றாள் அவள்.
பேருந்தில் ஒரே சிரிப்பு.
அந்தப் பெண்ணின் கணவர் பெயர் சிதம்பரம். சிதம்பரத்திற்கு டிக்கட் கொடு என்றால், கணவர் பெயரைச் சொன்னதாக ஆகிவிடும் என்பதால் அவள் சொல்லத் தயங்கினாள். இவ்வழக்கம் பெண்களிடம் ஆழப் பதிந்திருந்தது.
கணவன் பெயரை மட்டுமல்ல பெரியவர்கள் பெயரையும் பெண்கள் சொல்ல மாட்டார்கள். சொல்லக் கூடாது என்று வற்புறுத்தப்பட்டது.
பெரியவர்கள் பெயரைச் சிறியவர்கள் சொல்லக் கூடாது என்பது மரியாதையின் பொருட்டு என்று சொல்லப்படுவதுண்டு.
இதில் ஆண் பெண் இருவரும் சொல்லக்கூடாது என்று கூறியிருந்தால்கூட அது
வயது சார்ந்து இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், பெண்கள் மட்டுமே சொல்லக் கூடாது என்று வழக்கத்தில் கொள்வது ஆண் ஆதிக்கப் போக்கின் விளைவு.
பெரியவர்களுக்கு வயதையொட்டி சிறியவர்கள் மரியாதை தரவேண்டும் என்கிற மரபு உள்ளது. சமுதாய இயக்கம்கூட சுமூகமாக இயங்கத் தேவையான உயர்வு வழக்குகளில் இதுவும் ஒன்று.
ஆனால், பெரியவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை உளப்பூர்வமாக வரவேண்டும். கட்டாயப்படுத்தி பெறக் கூடியதாக அமையின் பயனில்லை.
மேலும் இந்த நியதி பெண்களுக்கும் பொருந்த வேண்டும். வயதில் பெரிய பெண்ணுக்கு வயதில் சிறிய ஆண்கள் மரியாதை செலுத்த வேண்டும்.
சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்று ஆண்களுக்கு மாத்திரம் மரியாதை அளிக்கக்-கூடாது.
மரியாதை என்பது இன்னொருவர் தாழ்வில் மற்றவருக்குக் கிடைக்கக் கூடாது, பெரியவர்களுக்கு முன் நின்று கொண்டிருக்க வேண்டும், காலில் விழவேண்டும், கூனிக் குறுக வேண்டும் என்பனவெல்லாம் விரும்பத் தக்கன அல்ல.
ஆணும் பெண்ணும் சமமாக அமர்ந்து உரையாடலாம். அதே போல் பெரியவர்களும் சிறியவர்களும் சமமாக அமர்ந்து உரையாட வேண்டும்.
மரியாதை, உணர்வுகளில் வெளிப்பட வேண்டுமே தவிர உடல் வளைவு நெளிவுகளில், உட்கார்ந்து எழுந்திருப்பதில் அல்ல. அவையெல்லாம் வேடதாரிகளின் செயல்பாடுகள்.
அதிகார வரம்பிற்குட்பட்ட பணிகளில், தனி மனித மரியாதைக்குப் பழுதில்லாமல், சில மரியாதைக்குரிய செயல்பாடுகள் கட்டுப்பாட்டின் நிமித்தம் இருக்கலாம்.
ஆனால், அன்றாட சமுதாய வாழ்வில் இயல்பு வாழ்க்கையே இதமளிக்கும்; கட்டுப்பாடுடன் கூடிய கலகலப்பான பழக்கமே மகிழ்வளிக்கும்.