பொங்கல் விழா !
ஆரிய விழாக்களின் சாத்திரம் சடங்குகள்
அண்டாது பிறக்கும்தைத் திங்கள் விழா!
பாரினில் பகுத்தறி வோடுநம் தமிழரின்
பண்பாடு பரப்பும்மெய்ப் பொங்கல் விழா!
போரிடும் ஜாதிகள் மதங்களின் பகைத்தலைப்
போகியில் கொளுத்தும்தைத் திங்கள் விழா!
கூரைமண் குடிசையும் கோட்டையும் மகிழ்ச்சியில்
கூடியே திளைக்கும்மெய்ப் பொங்கல் விழா!
ஏரிகள் குளத்துநீர் இறைத்துநெல் விளைத்தவர்
இனித்துளம் களிக்கும்தைத் திங்கள் விழா!
மாரியைப் பொழிந்தவிண் முகிலுக்கு நன்றியை
மதித்தவர் அளிக்கும்மெய்ப் பொங்கல் விழா!
ஏருடன் உழவர்கள் எருதுகள் சிறப்பினை
எடுத்துமே உரைக்கும்தைத் திங்கள் விழா!
ஊருழல் பசிப்பிணி ஒழிப்பதில் புகழ்க்கொடி
உயர்த்தியே பொறிக்கும்மெய்ப் பொங்கல் விழா!
காரிருள் கலைகிற காலையில் குலவையும்
கடுந்துயில் துடைக்கும்தைத் திங்கள் விழா!
சூரியன் எழுகிற வேளையில் கரும்பினைச்
சுவைத்தே மிடுக்கும்மெய்ப் பொங்கல் விழா!
சீறிடும் காளையை வீறுடன் வாலிபச்
சிங்கங்கள் அடக்கும்தைத் திங்கள் விழா!
ஈரடிக் குறளாருக் கோர்திரு நாளென
என்றென்றும் நடத்தும்மெய்ப் பொங்கல் விழா!
– தளவை இளங்குமரன், இலஞ்சி, தென்காசி