பெரியார் – காந்தி – மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..
பாசத்திற்குரிய அருமை பேத்தி, பேரன்களே!
என்ன, எல்லோரும் திராவிடர் திருநாளான பொங்கல் விழாவை -மகிழ்ச்சியுடன் கொண்டாடினீர்களே, புத்துருக்கு நெய் போட்ட புதுப் பொங்கலை அம்மா, அப்பா, பாட்டி, தாத்தாக்களுடன், உடன்பிறப்புகளுடன், புத்தாடை உடுத்தி _ சாப்பிட்டு மகிழ்ந்தீர்களா?
நாம் கொண்டாட வேண்டிய ஒரே விழா பொங்கல்தானே! உழைப்பின் பெருமையை இந்த அறுவடைத் திருநாள்தானே உணர்த்துகிறது!
அடுத்து, அமெரிக்காவுக்குப் போவோமா?
2019, செப்டம்பர் 22, 23 ஆகிய நாள்களில் மேரிலாண்ட் மாநிலத்தில் பெரியார் பன்னாட்டு அமைப்பும், அமெரிக்க மனிதநேய அமைப்பும் இணைந்து நடத்திய மாநாட்டில் உங்களைப் போன்ற குழந்தைகளும்கூட மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டார்கள் என்பது தெரியுமா?
சிறு பிள்ளைகளான அவர்கள் மாநாட்டுப் பணிகளில் சிறு சிறு உதவிகளைச் செய்தனர் என்பது மெய்சிலிர்க்கும் சேதி அல்லவா?
ஆங்கிலத்தில் பெரிதும் 2 நாள் கருத்தரங்க மாநாடு என்றாலும் தமிழிலும் ஒரு பகுதி அமைந்திருந்தது.
அமெரிக்காவில் உள்ள கருப்பின மக்களில் பலர் அதில் கலந்துகொண்டு அருமையாகப் பேசினார்கள்.
அந்த மாநாட்டு அரங்கத்தினை தூய்மையுடன் வைத்திருக்கும் பொறுப்பாளரான ஒரு கருப்பினத்தவர் மாநாடு தொடர்பாக நம் தோழர் ஒருவரிடம் கருத்து பகிர்ந்தார். அவர்கள் தங்களை ‘ஆப்ரோ_அமெரிக்கர்கள்’ (Afro Americans) என்றே அழைத்துக் கொள்ளுகின்றனர். கருப்பு என்பதை பெருமிதத்திற்கான அடையாளம் என்றே அவர்கள் எண்ணி மகிழ்கின்றனர்.
இவர்களை, சிறிது காலம் முன்புவரை, “நீக்ரோ’’கள் என்றுதான் மற்றவர்கள் அழைத்தனர். அது ஓர் அவமானச் சொல். சூத்திரர், பஞ்சமர் என்று நம்மை மிகக் கேவலமாக பார்ப்பன உயர்ஜாதிக்காரர் திமிரோடு அழைத்ததுபோலவே அவர்களை (‘நீக்ரோ’) அழைத்ததை அவர்கள் மாற்றி விட்டார்கள். அந்த பணித்தோழர், நம் மாநாட்டுக்கு வந்து, இரண்டாம் நாள் மாநாடு முடிவடையும் தறுவாயில் புறப்பட்டுக் கொண்டிருந்தவரைப் பார்த்து, “ஹலோ, உங்கள் மாநாட்டில் பேசிய பேச்சுகளில் சிலவற்றைக் கேட்டேன். “Oh my god!, (அவர்களுக்கு ஏதாவது ஓர் ஆச்சரியம், அதிர்ச்சியான தகவல் என்றால் இப்படிக் குரல் எழுப்புவது அவர்களது வாடிக்கையான வேடிக்கை) இப்படி ஒரு ஜாதிமுறை _ தொட்டால் தீட்டு என்பதுபோல் சகமனிதர்களைக் கேவலமாகக் கருதும் நிலை இருப்பதாக சிலர் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததோடு, நல்ல வேளை நான் அங்கே பிறக்காமல் தப்பித்தேன்” என்று பலமாகச் சிரித்துவிட்டுச் சொன்னாராம்!
ஆம். கருப்பர்களை, வெள்ளை நிறத்தவர்கள் வேறுபடுத்தி அடிமைகளாக நடத்தியபோதுகூட, (அது எவ்வளவு பெரிய தவறு?) படிக்காதே, அறிவு பெறாதே என்று அவர்களைத் தடுக்கவில்லை.
ஆனால், நம் நாட்டிலேதான் தனியாகக் கூட படிக்கவே கூடாது என்று மனுதர்மம் சொல்லி, அதை நம்மை ஆண்டவர்கள் நடைமுறைப்படுத்தியதால் நம்மவர்கள் முன்பு படிப்பறிவு இல்லாதவர்களாக ஆனார்கள்.
பெரியார் தாத்தாதான் அதைக் கடுமையாக எதிர்த்து, தனது கடைசி மூச்சு உள்ளவரை 94 வயதிலும் போராடிக்கொண்டே இருந்தார்!
வைக்கம் என்னும் ஊரிலே _ அது இன்றைய கேரளாவில் உள்ளது _ அப்போது ராஜாக்கள் ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் _ தனி ராஜ்யம் _ ‘ஹிந்து ராஜ்யம்’ என்கிற நடைமுறையால், அங்குள்ள கோயிலைச் சுற்றி உள்ள கோயிலின் அருகே இருந்த தெருக்களில் நடமாடக்கூடிய உரிமை, கீழ்ஜாதி மனிதர்களுக்குக் கிடையாது என்று கூறி மேல் ஜாதியினர் அடித்து உதைத்து விரட்டினர்.
அதை எதிர்த்து அவ்வூர் தலைவர்கள் 1924ஆம் ஆண்டு _ 96 ஆண்டுகளுக்கு முன் சத்தியாகிரகம் செய்தார்கள்.
அவர்களைப் பிடித்து உள்ளே ஜெயிலுக்குள் போட்டார்கள். அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த ஆளில்லை. பெரியாருக்கு (தமிழ்நாட்டுக்கு)க் கடிதம் எழுதினார்கள்.
பெரியார்தான் வைக்கம் சென்று போராடி ஜெயிலுக்குள் கை விலங்கு, கால் விலங்குடன் அடைக்கப்பட்டு, பிறகு அத்தெருக்களைத் திறந்து விடும் நிலையை உண்டாக்கினார்.
இதேபோல் அங்கே மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் என்ற பாதிரியார் கருப்பின மக்களுக்குப் போராடினார். அமெரிக்காவில் பேருந்துகளில் ஏறிச் செல்ல வெள்ளையர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு; கருப்பின மக்களை ஏற்ற மறுத்த நிலையில், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போராடி வெற்றி பெற்றார்.
இங்கே தேசப்பிதா காந்தியாரை கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனர் மதவெறியினால் சுட்டுக் கொன்றது பற்றித் தெரியுமா? அதே போல அங்கேயும் நடந்தது!
அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் என்ற அந்த மனித உரிமைப் போராளியும் வெற்றி பெற்றார். அதற்கு அவர் கொடுத்த விலை… அவரைப் பற்றியும் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
ஆசிரியர் தாத்தா
கி.வீரமணி