அறிவுச்சுட்டியின் அதிரடிக் கேள்வி
மகன்: அப்பா! விநாயகருக்கும் முருகனுக்கும் சிவபெருமான் அப்பா. அந்த சிவபெருமானுக்கு அப்பா யாரு?
அப்பா: கண்ணா! அவர் முழுமுதற் கடவுள்! அவர் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி. அவரே அம்மையப்பர்!
மகன்: அப்போ சிவபெருமான் அப்பா அம்மா இல்லாத அனாதையா?
அப்பா: அய்யையோ… இந்த உலகத்து நாயகனை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. அது சாமி நிந்தனையாக மாறி தெய்வக் குற்றமாகிவிடும்.
மகன்: அப்பா யானையை ஏன் எல்லோரும் கையெடுத்துக் கும்பிடுறாங்க!
அப்பா: சிவபெருமானின் தலைமகனாகிய கணபதியார் ஏதோ ஒரு காரணத்தால் தலையை இழந்தபோது, தந்தையார் யானையின் தலையை வெட்டி கணபதியாருக்குப் பொருத்தினார். அன்றிலிருந்து, மக்கள் யானையைக் கண்டால் கணபதியாகவே கருதி கையெடுத்துக் கும்பிட்டு வர்றாங்க!
மகன்: யானை தெய்வ அம்சம் பொருந்தியது ஆயிற்றே, அப்புறம் எதுக்கு யானையை கடை கடையாய் பிச்சை எடுக்க வைக்கிறாங்க!
அப்பா: மகனே முன்பெல்லாம் இப்படியெல்லாம் கேள்வி கேட்கமாட்டியே…உன்னை யார் இப்படி கேள்வி கேக்க வைக்கிறாங்க!
மகன்: அப்பா! நம்ம ஊரு சிவன் கோவிலில் சிவராத்திரி அன்னிக்கு, சாமிக்குப் போட்ட நகையெல்லாமே, விடியற்காலை திருட்டுப் போயிருச்சு! நகையைத் திருடர்கள் திருடும்போது சிவபெருமான் தன் சூலாயுதத்தால் அவங்க கண்ணை ஏன் குத்தாம விட்டாரு!
அப்பா: மகனே அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்.
மகன்: திருடன் நகையைக் கொண்டுபோய் கடையிலே வித்து, சந்தோஷமாக வாழ்ந்திடுவான். அப்புறம் அவர்களைக் கொன்றால் என்ன? கொல்லாமல் விட்டால் என்ன?
அப்பா: ??????
அப்பா: நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
மகன்: கடவுள்தானே நம்மை வாழ்த்தணும் நீங்க எதுக்குக் கடவுளை வாழ்த்துறிங்க.
அப்பா: மகனே! நாம் வாழ்வதற்காகவே அவரை வாழ்த்துகிறோம். நாம் பாடும் மந்திரமொழிகள் அவன் செவியில்பட்டால், அவன் உள்ளம் குளிரும். அவன் உள்ளம் குளிர்ந்தால் நம் வாழ்வு செழிக்கும்.
மகன்: மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாமுனு ஒரு பக்தர்தான் சொல்லியிருக்கிறாரே!
– ஈரோடு மே.அ.கிருஷ்ணன்