கோமாளி மாமா – எத்தனுக்கு எத்தன்!
கதை, ஓவியம் – மு.கலைவாணன்
விடுமுறை நாட்களில் கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க பூங்காவிற்கு மல்லிகாவும், செல்வமும் முன்கூட்டியே வந்துவிட்டனர்.
“மாணிக்கமும், கோமாளி மாமாவும் வரும் வரை நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றியா மல்லிகா” என்றான் செல்வம்.
“சரி” என பதில் அளித்தாள் மல்லிகா. “நான் கேட்ட கேள்விக்கு பதில் தெரியலேன்னா உன் தலையில நான் ஒரு கொட்டு கொட்டுவேன். அப்பறம் நீ ஒரு கேள்வி கேட்கலாம். அதுக்கு எனக்கு பதில் தெரியலேன்னா, என் தலையில் நீ ஒரு கொட்டு கொட்டிக்க! முதல்ல நான்தான் கேள்வி கேட்பேன்” என்றான் செல்வம். அதற்கு “சரி” என்றான் மல்லிகா.
“எட்டுத் தலை, பதினாறு கை, முப்பத்திரெண்டு காலு அது என்ன?” என்றான் செல்வம்.
இதுவரை அப்படி எதையும் பார்த்தும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லையே… அது என்னவாக இருக்கும் என யோசித்தாள் மல்லிகா.
“பதில் தெரியுமா… தெரியாதா?” என்றான் செல்வம்
“நீ கேக்குற கேள்வியே புதுசா இருக்கு… அப்படி என்ன இருக்குன்னு எனக்குத் தெரியலே” என மல்லிகா சொல்லி முடிப்பதற்குள், ‘நறுக்’கென அவள் தலையில் கொட்டினான் செல்வம்.
கலங்கிப் போன மல்லிகா “அது என்னதுன்னு நீ சொல்லுடா” எனக் கேட்டாள் மல்லிகா.
“அது என்னன்னு எனக்கும் தெரியாது. சும்மா ஒரு டூப்பு” என பதில் சொன்னான் செல்வம். மல்லிகா அவன் தலையில் கொட்ட, கையை மடக்கியபடி அருகில் சென்றாள்.
செல்வம் தலையை உயர்த்தியடி அங்குமிங்கும் ஓடினான். அந்த நேரத்தில் மாணிக்கமும் கோமாளியும் அங்கே வந்தனர்.
“என்ன… ரெண்டு பேரும் ஓடிப் புடிச்சி விளையாடுறிங்களா?” என்றார் கோமாளி.
நடந்ததைக் கண் கலங்கியபடி சொன்னாள் மல்லிகா. அதைக் கேட்ட கோமாளி சிரித்தபடி, “இப்படித்தான் சில பேரு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி நம்மளை ஏமாத்துவாங்க. நாமதான் எப்பவும் கவனமாக இருக்கணும். இன்னைக்கு அது தொடர்பா ஒரு நாடோடிக் கதையைச் சொல்றேன்” என்றார்.
மாணிக்கத்துடன் சேர்ந்து மல்லிகாவும், செல்வமும் நடந்ததை எல்லாம் மறந்து கதை கேட்க அமர்ந்தனர்.
“ஒரு குளிர் பிரதேசத்திலே… காலையிலயிருந்து கடுமையான குளிரிலே அலைஞ்சு திரிஞ்ச நாடோடி ஒருத்தன்… இரவானதும் ஒரு வீட்டோட கதவைத் தட்டினான். குண்டா… தாடி மீசையோட இருந்த அந்த வீட்டுக்காரர் கதவைத் திறந்தாரு.
“அய்யா… காலையிலேயிருந்து ரொம்ப தூரம் நடந்து களைப்போட வந்திருக்கேன். எனக்கு சாப்பிட எதாவது கொடுத்து இன்னைக்கு ஒரு ராத்திரி மட்டும் தங்க இடம் கொடுத்தா போதும்… அதுக்கு நீங்க கேக்குற பணத்தைத் தந்துடுறேன்” என்றான் நாடோடி
“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தாராளமாக தங்கி இருந்துட்டுப் போகலாம். ஆனா ஒரே ஒரு நிபந்தனை. எனக்குப் பணம் வேணாம். அதுக்கு பதிலா… நான் சில கேள்வி கேட்பேன் அதுக்கு நீ சரியான பதில் சொல்லணும். சொல்லத் தவறினா உன் கன்னத்திலே ஒரு அறை விடுவேன்…” என்றார்.
அப்படி என்ன பெருசா கேட்டுப் போறார்னு நினைச்சுக்கிட்டு “சரி”ன்னு ஒத்துக்கிட்டான் நாடோடி.
ரெண்டு பேரும் வயிறாற சாப்பிட்டாங்க. அதுக்குப் பிறகு உக்காந்து ரெண்டு பேரும் பேசத் தொடங்குனாங்க. அப்போ வீட்டுக்காரர் வீட்டு மூலையில படுத்திருந்த பூனையை சுட்டிக் காட்டி “அது என்னது?” ன்னு கேட்டாரு.
நாடோடி எதார்த்தமா “பூனை” அப்படின்னு பதில் சொன்னான் உடனே அவன் கன்னத்திலே ‘பளார்’னு ஒரு அறைவிட்டு “உன் பதில் தப்பு. அது பூனையில்லே வெண்மை” ன்னு சொன்னாரு வீட்டுக்காரர்.
கன்னத்தைத் தடவியபடி அமந்திருந்தான் நாடோடி. அடுத்து மேசை மேலிருந்த கண்ணாடிக் குவளைக்குள் இருக்கும் தண்ணீரைக் காட்டி “இந்த குவளைக்குள் இருப்பது என்ன?” என்று கேட்டார் வீட்டுக்காரர்.
“தண்ணீர்” என்று பதிலளித்த நாடோடியின் கன்னத்தில் மறுபடியும் ‘பளார்’ என அறை விழுந்தது. “அது தண்ணியில்லே சுத்தம்” என்றார் வீட்டுக்காரர்.
அடுத்து குளிர் காய்வதற்காக எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் காட்டி, “அது என்ன?” என்று வீட்டுக்காரர் கேட்க “நெருப்பு” என்று பதில் சொன்ன நாடோடியின் கன்னத்தில் மீண்டும் ஒரு அறை விழுந்தது.
“அது நெருப்பில்லே… ‘சுகம்” என்றார் வீட்டுக்காரர்.
‘அய்யோ… தவறான ஆளுகிட்டே வந்துமாட்டிக்கிட்டோமே இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது?’ என மனதில் நினைத்துக் கொண்டிருந்தபோதே, அடுத்த கேள்வியைக் கேட்டார் வீட்டுக்காரர். “அது என்ன?” என்று வீட்டுக்குள்ளிருந்த பரணைச் சுட்டிக்காட்டினார். அதை நாடோடி “பரண்” என்று கூறினான். ‘பளார்’ என அறைந்த வீட்டுக்காரர், “அது உயரம்” என்று சொல்லிச் சிரித்தார்.
இனி இங்கிருந்தால் இந்த ஆளிடம் அடிவாங்கியே செத்துப்போவோம் என எண்ணிய நாடோடி… “அய்யா… நான் அலைந்து திரிந்து வந்ததால் மூளை கொஞ்சம் குழம்பியிருக்கிறது. சிறிது நேரம் வெளியில் உலவி விட்டு வந்தால் போதும் பிறகு சொல்வேன்…” என்று தந்திரமாகக் கூறினான். “சரி” என்றார் வீட்டுக்காரர்.
‘அப்பா தப்பிச்சோம்…’ என நினைத்தபடி வீட்டைவிட்டு வெளியே வந்தான் நாடோடி. மூலையில் படுத்திருந்த பூனையும் அவன் பின்னாலேயே வந்தது.
பூனையைப் பார்த்ததும் நாடோடிக்கு எரிச்சலாக இருந்தது. வீட்டுக்காரன் மேல் இருந்த கோபத்தை தீர்த்துக் கொள்ள இதுதான் வாய்ப்பென்று பூனையைப் பிடித்து அதன் வாலில் ஓர் எண்ணெய்த் துணியைச் சுற்றி, தீ வைத்தான். நெருப்பு எரிவதைக் கண்டு பயந்துபோன பூனை வீட்டுக்குள் ஓடி பரண்மேல் தாவியது.
நாடோடி வீட்டுக்குள் எட்டிப் பார்த்து… “அய்யா உன் வெண்மை சுகத்தை எடுத்துக் கொண்டு உயரத்தில் போயிருக்கு. நீங்க உடனே சுத்தத்தை ஊத்தி சுகத்தை அணைங்க”… என்று கத்தினான்.
வீட்டுக்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. எடக்கு மடக்கா எதையாவது சொல்லி, நாடோடியை அடிக்கிறதிலேயே குறியா இருந்த அவருக்கு, எதுக்கு என்ன விளக்கம் சொன்னோம் என்பதே மறந்து போயிருந்தது. அதனால் என்ன செய்வதேன்றே தெரியாமல் விழித்தார்.
நாடோடி வீட்டுக்குள் வந்து வீட்டுக்காரர் கன்னத்தில் ‘பளார்… பளார்’ என ஆத்திரம்தீர அறைந்துவிட்டு “இவ்வளவுதானா உன் புத்திசாலித் தனம். உன் பூனை நெருப்போட பரணுக்குப் போயிடுச்சு இப்ப உன் வீடு தீப் புடிச்சி எறியுது. தண்ணி ஊத்தி அணை” என்று சொல்லி விட்டுத் தெரு வழியே நடக்கத் தொடங்கினான்.
“வீட்டுக்காரரின் அலறல் சத்தத்தில் ஊரே விழித்துக் கொண்டது,” என்று கதையை சொல்லி முடித்தார்.
மல்லிகா இப்படி ஏதாவது செய்துவிடுவாளோ என்று பயத்தில் செல்வம் விழித்தான். ‘அந்தப் பயம் இருக்கட்டும்’ என்ற தொனியில் ஒரு பார்வை பார்த்து “பொழச்சுப் போ” என்று வலது கையை ஆட்டிச் சொன்னாள். அவள் மன்னிப்பில் மகிழ்ச்சி பூத்தது அங்கே! <