பெரியார் பிஞ்சு வாசகரின் கடிதம் – பரிசு பெற்றேன்; தொகையைக் கொடுத்தேன்!
அன்புள்ள ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு,
உங்கள் பேத்தியின் வணக்கம். நலம். நலம் அறிய அவா. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் வழியில் தங்கள் வழிகாட்டுதலின் படி நடக்கும் குடும்பத்தில் நான்காம் தலைமுறை தான் நானும் (வை.கவின்மதி-5ம் வகுப்பு) எனது தம்பியும் (வை.நற்குணநிதி-3ம் வகுப்பு). கொரோனா ஊரடங்கு காலத்தில் நாள்தோறும் காலை எழுந்தவுடன் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்வோம். காலை உணவுக்கு பின் நானும் தம்பியும் சிறிது நேரம் விடுதலை, முரசொலி, தி இந்து தமிழ் நாளிதழ்கள், பெரியார் பிஞ்சு, சிறுவர் கதைப் புத்தகங்கள் வாசிப்போம். இடையிடையே கேரம் போர்டு, செஸ், தாயம், பல்லாங்குழி விளையாடுவோம். வாய்ப்பு கிடைத்தால் எங்களது பெற்றோரும், பாட்டியும் இணைந்து கொள்வார்கள்.
மாலை சிற்றுண்டிக்குப் பின் மொட்டை மாடிக்குச் சென்று செடிகளுக்குத் தண்ணீர் விட்ட பின், பட்டம் விட்டு விளையாடுவோம். பிறகு பாடங்களை மறந்து விடாமல் நினைவுபடுத்துவதற்காக தமிழ் – ஆங்கில இலக்கணம், கணிதப்பயிற்சி, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தகவல்கள் போன்றவற்றைப் படிப்போம். சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்த பின் இரவு உணவுக்கு முன்பு அப்பாவுடன் சேர்ந்து “You Tube” வலைக்காட்சி மூலம் கலைஞர் தாத்தா, பேராசிரியர் அன்பழகன் தாத்தா, ஆசிரியர் தாத்தா, பேராசிரியர் சுப.வீ தாத்தா, தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உரைகளைக் கேட்போம். இரவு உணவுக்கு பின் அப்பாவுடன் அந்த உரைகள் குறித்து உரையாடுவோம். எங்களுக்கு எழும் சந்தேகங்களை அப்பா தீர்த்து வைத்து திராவிடத்தின் தேவையை எடுத்துரைப்பார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் ஊரடங்கில் குழந்தைகளுக்காக நடத்திய “களை கட்டட்டும் வீடு கற்பனைத் திறத்தோடு’’ கதைப் போட்டியில் பங்கேற்று “இன்னா செய்தார்க்கு’’, “பிறந்தநாள் பரிசு’’ என இரண்டு கதைகளை எழுதி அனுப்பினேன். இரண்டு கதைகளும் தலா ரூ.250/– பரிசு பெற்றன. பரிசுத் தொகையான ரூ.500/–அய் நமது நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினேன். இது குறித்த செய்தி 30.04.2020 அன்று ‘விடுதலை’ நாளிதழில் வெளியானது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னையும், என் போன்று பரிசுத் தொகையை நலிந்தோர்க்கு உதவிட நன்கொடையாக வழங்கிய மற்ற குழந்தைகளையும் பாராட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் தனது முகநூல் பக்கத்தில் “குழந்தைகளிடம் கற்றுக் கொள்வோம்’’ என்ற வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்தார். இது தொடர்ந்து இயன்ற அளவு உதவிட வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது.
தங்கள் அன்பு பேத்தி
வை.கவின்மதி,
த/பெ வழக்குரைஞர் இராம.வைரமுத்து, மதுரை-11