ஜூலை – 15 – கல்வி வளர்ச்சி நாள்

ஜூலை – 15 – கல்வி வளர்ச்சி நாள்
சிரிப்புடன் முகத்தினில்
சிறிதேனும் அறிவொளி
சேர்ந்திடார்க் கிருப்பவை
சீழுடைப் புண்கள்!
விருப்புடன் படிப்பதில்
விருதுகள் பெறுவதில்
வீம்புளார்க் கிருப்பவை
வீறுடைக் கண்கள்!
உருட்டுடன் புரட்டினை
ஒழித்திடும் கல்வி
ஓர்விலார்க் கிருப்பவை
ஊனமாப் புண்கள்!
மறுப்புடன் எதிர்ப்பிலா
மதிப்புடைக் கல்வி
மாண்புளார்க் கிருப்பவை
மானமாக் கண்கள்!
பிறப்பினில் கல்வியால்
பெறும்பேறு அடைந்திடாப்
பேதையர்க் கிருப்பவை
பீடிலாப் புண்கள்!
இறப்பிலும் கல்வியால்
இறும்பூது அடைந்திடும்
ஏறுகட் கிருப்பவை
ஈடிலாக் கண்கள்! <
– தளவை இளங்குமரன், இலஞ்சி