இளம் வயதில் தென் அமெரிக்கச் சிகரத்தைத் தொட்ட இந்திய மாணவி!
மும்பையைச் சேர்ந்த மாணவி காம்யா கார்த்திகேயன் என்பவர் மும்பை கொலாபாவில் உள்ள இந்திய கப்பற்படை பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவி தென் அமெரிக்காவில் இருக்கும் மிக உயர்ந்த மலைச்சிகரமான அக்கோன்காகுவாவில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சிகரத்தின் உயரம் 6962 மீட்டர் ஆகும். ஆசியாவிற்கு வெளியே இருக்கும் மிக உயரமான சிகரம் இதுவாகும்.
பிப்ரவரி 1ஆம் தேதி இந்த சிகரத்தை அடைந்த மாணவி காம்யா அங்கு இந்தியக் கொடியை நட்டு நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். காம்யாவின் இந்த வெற்றி குறித்து கப்பற்படை குடியிருப்பில் இருப்பவர்கள் வெகுநாள்களாக காம்யா இந்த இலக்கை எட்டுவதற்காக அயராது உழைத்திருக்கிறார். மன அளவிலும் உடல் அளவிலும் தன்னை இத்தனை ஆண்டுகளாக ஆயத்தப்படுத்தி வந்தார் என்று கூறியுள்ளனர். மும்பையைச் சேர்ந்த இந்த மாணவி உலகிலேயே மிகவும் இளம் வயதில் இந்தச் சிகரத்தை அடைந்தவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
– சரா