காரணமின்றி ஏற்காதீர்கள் – கொரோனா எப்போது ஒழியும்? கடவுளுக்குத்தான் தெரியுமா?
சிகரம்
கடவுள் நம்பிக்கை என்பது பகுத்தறிந்து பார்க்காமல் ஏன்? எப்படி? என்று வினா எழுப்பி விடை காணாமல், அப்படியே ஏற்றுக் கொள்வதால் வருவதாகும்.
இப்படி ஒரு கொரோனா வைரஸ் உலகை முடக்கி, லட்சக்கணக்கில் உயிர்களை இழக்கச் செய்யும்போது கடவுள் உண்டு என்று நம்புவது நகைப்பிற்குரியது ஆகும்.
எல்லாம் கடவுள் செயல் என்றால்
கொரோனாவும் கடவுள் செயல் என்று தானே பொருள்?
இப்படி ஒரு கொடிய நோயைக் கொடுப்பது கடவுள் ஆகுமா? கொரோனா இயற்கை என்றால், உலகில் நடப்பது எல்லாம் கடவுள் செயல் என்பது தப்பு என்று ஆகிறது; கடவுள் இல்லை என்றும் ஆகிறது அல்லவா?
கொரோனாவுக்கு பயந்து கோயில்களே அடைக்கப்பட்டு, கடவுள் சிலைக்கே முகக் கவசம் போடப்படுகிறது என்றால், கடவுள் இல்லை என்பது உறுதியாகிறது அல்லவா?
கடவுள் எல்லா சக்தியும் உடையவர் என்றால் கொரானாவை ஒழித்து, கோயில்களைத் திறக்கச் செய்யாதது ஏன்?
எல்லா மத வழிபாட்டுத்தளங்களும் மூடப்பட்டன. திருவிழாக்கள், பண்டிகைகளுக்குக் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அர்ச்சகர்கள், குருமார்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், மிகத்தெளிவாகத் தெரிந்தது தான். கடவுளால் காப்பாற்ற முடியாது என்பது அனைவருக்கும் புரிகிறது.
எனவே, கடவுள் என்பதும், அது எல்லா சக்தியும் உடையது என்பதும், அது நம்மைக் காப்பாற்றும் என்பதும் தப்பு என்று இதன் மூலம் உறுதியாகிறது.
உலகத்தில் எல்லா நோய்களும் இயற்கையாகவோ, செயற்கையாகவோ தான் வருகின்றன. மனிதன் முயற்சி செய்து, மருந்து கண்டுபிடித்து நோயை ஒழிக்கிறான். அப்படி இருக்க கடவுள் நோய் தீர்க்கும் என்று கடவுளை வேண்டிக் கொள்வது முட்டாள் தனம், அறியாமை, மடமை அல்லவா?
கடவுள் நோய் தீர்க்கும் என்றால் மருத்துவர்-களிடம் செல்லாமல், மருந்து சாப்பிடாமல், சிகிச்சை செய்யாமல் நோய் குணமாகுமா? நோய் வந்தபின் கடவுளை வேண்டிக் கொண்டு வீட்டிலேயே இருந்தால் நோய் குணமாகுமா? இறந்து தானே போவான்.
அப்படி இருக்க, நோய் வந்தால், கடவுளை வேண்டிக் கொள்வதும், காப்பாற்றுவது கடவுள் கையில் தான் உள்ளது என்பதும் தப்பல்லவா?
கொரோனா ஒழிய வேண்டும் என்று கடவுளுக்கு பூசை நடத்தி, யாகம் செய்தார்களே கொரோனா ஒழிந்ததா? இல்லையே! மாறாக கொரோனா கோரமாக அல்லவா அதிகரித்து உயிர்களைக் கொள்ளை கொள்கிறது.
ஆக, கொரோனாவுக்குப் பயந்து கோயில்களே சாத்தப்பட்டு மூடிக் கிடப்பது கடவுள் இல்லை என்பதைத் தானே அறிவிக்கிறது. கடவுளே இல்லை எனும் போது, ‘கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்’ என்பது தப்பு அல்லவா? முதல்வரே சொன்னாலும் அது தப்புதானே?
கொரோனா ஒழிய வேண்டுமென்றால் நாம் பாதுகாப்பாக, தூய்மையாக இருக்க வேண்டும். முகமூடி அணிதல், சானிடைசர் அல்லது சோப்புப் போட்டுக் கை கழுவுதல் போன்றவற்றை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உலகெங்கும் நடக்கும் மருத்துவ ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்கப்-போகும் தடுப்பூசிகளை, மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம்தான் தொற்றை ஒழிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.<