அறிவியல்: செயற்கைக் கோளின் வெளிப்புறத்தில் தங்கமா? நமது குரலைக் கேட்கும் வேற்றுலக உயிரினங்கள்
தொலைக்காட்சிகளில் ஒவ்வொரு முறையும் செயற்கைக் கோள் ஏவப்படும் என்ற செய்தியை வாசித்து, ஏவப்படும் செயற்கைக்கோளை நமக்கு காண்பிப்பார்கள். இந்தச் செயற்கைக்கோள் ராக்கேட்டின் மேல் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு விண்ணில் ஏவப்படும் அவ்வளவு நீளமான ராக்கெட்டுகள் அனைத்தும் தனித்தனியாகப் பிரிந்து எரிந்து சாம்பலாகவும், சிறிய துண்டுகளாகவும் பெருங்கடல் பகுதியில் விழுந்துவிடும். டிவியில் காண்பித்த செயற்கை கோள் மட்டும் குறிப்பிட்ட தூரத்தில் பூமியைச் சுற்றிவரும். எப்படி நிலவு என்னும் துணைக் கோள் பூமியைச் சுற்றி வருகிறதோ, அது போன்று செயற்கையாக ஏவும் செயற்கைக் கோள்களும் பூமியின் ஈர்ப்புவிசையின் காரணமாக சுற்றிவருகிறது,
அப்படி அந்த செயற்கை கோளைக் காண்பிக்கும் போது அது பொன்னிறத் தகடுகளால் மூடப்பட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அனைத்து செயற்கை கோள்களும் இந்த பொன்னிறத் தகடுகளால் தான் வெளி உறை செய்யப்பட்டிருக்கும்.
இந்த பொன்னிற தகடுகள் ஏன் என்பதைப் பார்ப்போம்.
`செயற்கைக் கோள்களின் பெரும்பான்மையான வெளிப்புறப் பகுதிகள் தங்கத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது போல் தெரிந்தாலும் அது தங்கம் அல்ல. அது ஒரு பல-அடுக்கு வெப்பத்தடுப்பு பொருள் (-Multi-Layer Insulation) ஆகும். இது சுருக்கமாக MLI என அழைக்கப்படுகிறது.
இது நன்கு எதிரொளிக்கும் திறன் கொண்ட, எடை குறைவான, பல மெல்லிய அடுக்குகளால் ஆனது. கடைகளில் உணவு வைத்துக்கொடுக்கும் அலுமினியத் தகடுகளை விட மிகவும் மெல்லியதான தகடுகள் பல அடுக்குகளில் மிக மெல்லிய அலுமினிய பூச்சு பூசப்பட்ட பாலிமைடு (Polyimide) அல்லது செயற்கை இழைநார்களால் ஆனவை. நமது குளிர்கால ஆடைகள் போன்றது. இந்த மென் படலத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் பாலிமைடு, பொதுவாக தங்க நிறத்தை கொண்டிருக்கும். இந்த பல்ல-டுக்கு வெப்பக்காப்பு மென் படலத்தின் பின் பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இந்த பல்ல-டுக்குகு வெப்பத்தகட்டின் தடிமனும், பல அடுக்குகளின் எண்ணிக்கையும், செயற்கைக்கோள் செயல்பட வேண்டிய இடத்தினைப் பொறுத்து மாறுபடும்.
விண்வெளியில் நிலவும் அதீத வெப்ப நிலையில் இருந்து, செயற்கைக்கோள்களின் கருவிகளைப் பாதுகாக்க, இந்த பல்ல-டுக்கு வெப்பத்தடுப்பு உதவுகிறது.
செயற்கைக்கோளின் சுற்றுப் பாதையைப் பொறுத்து இந்த வெப்ப நிலை மாறுபடும். பொதுவாக, செயற்கைக்கோள்கள் -130 பாகை செல்சியஸ் முதல் 150 பாகை செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பொதுவாக, சூரியனை நோக்கி உள்ள செயற்கைக்கோளின் பகுதி மிக அதிக வெப்ப நிலையையும், சூரிய ஒளி படாத பகுதி மிகக் குறைவான வெப்ப நிலையையும் எதிர்கொள்ளும்.
மேலும், செயற்கைக்கோள் புவியின் நிழல் பகுதியில் சுற்றிவரும்போது மிகக் குறைவான வெப்ப நிலையை எதிர்கொள்ளும். இந்தப் பல்ல-டுக்கு வெப்பத்தகடு, செயற்கைக்கோளுக்கு, வெப்பக் கடத்தல் (Conduction வெப்பச் சலனம் (Convection) ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்காது. வெப்பக் கதிர்வீச்சில் (Radiation) இருந்து மட்டுமே பாதுகாப்பு அளிக்கும்.
மேலும் விண்வெளியில் வெற்றிடமாக உள்ளதால், அங்கு வெப்பக் கதிர்வீச்சு மூலமே வெப்பப் பரிமாற்றம் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பல-அடுக்கு வெப்பக்காப்பு, சூரியனிடம் இருந்து வரும் வெப்பக் கதிர்வீச்சினை முழுவதுமாக எதிரொளித்து, அதனை சிதறடிக்கிறது. இதனால் வெப்பம் உட்புகுவது தடுக்கப்படுகிறது. இதனால் வெளிப்புறம் அதிக வெப்பநிலையில் இருந்தாலும், செயற்கைக்கோளின் கருவிகள் தேவையான குளிர் நிலையிலேயே இருக்கும். விண்வெளியில் நாம் பூமியில் உணருவது போல் இல்லாமல் அங்கு ஆபத்தான கதிர்வீச்சோடு கூடிய வெப்பம் செயற்கைக் கோளைத் தாக்கும். இதை இந்த பொன்னிறத் தகடுகள் மீண்டும் எதிரொளித்துவிடுவதால் அந்த வெப்பம் செயற்கைக் கோளின் உள்ளே நுழைவதில்லை.
வெளிப்புறம் அதி குளிர் வெப்பநிலையில் இருந்தாலும், செயற்கைக்கோளின் கருவிகள் குளிரால் பாதித்துவிடாமல் இந்தத் தகடுகள் பாதுகாக்கும். அதாவது, செயற்கைக்கோளின் கருவிகள் வெளியிடும் வெப்பம், வெளியே செல்லாதவாறு தடுக்கிறது.
மேலும், இந்த பல்லடுக்கு வெப்பத்தடுப்புத் தகடுகள், விண்வெளித் தூசுகளிடமிருந்தும் செயற்கைக்கோளைப் பாதுகாக்கின்றன.
இந்த பல்லடுக்கு வெப்பத்தடுப்புத் தகட்டில் தங்கம் பயன்படுத்தபடா விட்டாலும், சில செயற்கைக்கோள்களின், சில கருவிகளில் தங்க முலாம் பூச்சு (Gold Coating) பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தங்க முலாம் பூச்சு, செயற்கைக்கோள் கருவிகளைப் புற ஊதா (Ultraviolet) ஒளிக் கதிர்களிடம் இருந்தும், எக்ஸ் கதிர்களிடம் இருந்தும் பாதுகாக்கிறது. மேலும் சில கருவிகளின் மின் இணைப்புகளிலும் தங்கம் பயன்படுத்தப்-படுகிறது.
மேலும் நாசா விண்வெளி வீரர்கள், விண்வெளியில் அணியும் உடையுடன் இணைந்த தலைக் கவசத்தில், சிறிதளவு தங்கம் பயன்-படுத்தப்படுகிறது. இந்த தலைக் கவசத்தின் கண்ணாடியில் உள்ள மிக மெல்லிய தங்க படலம், விண்வெளி வீரரின் கண்பார்வைக்கு தேவையான ஒளியினை (Visible Light) மட்டும் உட்புக அனுமதிக்கிறது, அகச் சிவப்பு (Infrared)) கதிர்களை எதிரொளிக்கிறது. இதனால் கண்கள் பாதிப்படைவது தடுக்கப்படுகிறது.
கோல்டன் ரிக்கார்ட்
ஆனால் விலை உயர்ந்த தூய தங்கத்தால் செய்யப்பட்ட குரல் பதிவு (வாய்ஸ் ரெக்கார்ட் டிஸ்க்) தகடுகள் விண்வெளியில் பறந்துகொண்டு இருக்கிறது. வொயேஜர்1 என்பது அய்க்கிய அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் உருவாக்கப்பட்டு, செப்டம்பர் 5 ஆம் தேதி 1977 ஆண்டு இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்கலம் ஒன்றை ஏவியது. 722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம், ஜூன் 15 ஆம் தேதி 2020 வரை 43 ஆண்டுகள், 7 மாதங்கள், 15 நாள் காலத்தை விண்வெளியில் நிறைவு செய்துள்ளது. சூரியனில் இருந்து 125 ஒளி ஆண்டு தூரத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரே விண்கலம் இதுதான். பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்குச் சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு முதல் விண்கலம் ஆகும்.
வொயேஜர் விண்கலத்தில் தான் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் பொறுத்தப்பட்டுள்ளது.இதில் மனித இனத்தைப் பற்றியும் பூமியைப் பற்றியும் பல தகவல்கள் ஃபோனோகிராஃப் பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அணுசக்தி மற்றும் ஒளியின் மூலம் கிடைக்கும் ஆற்றலில் பயணப்படுகிறது. இது நமது சூரியமண்டலத்தை விட்டு மிகவும் நீண்ட தொலைவு சென்றுவிட்டது, ஒருவேளை எதிர்காலத்தில் விண்வெளியில் எங்காவது அறிவார்ந்த உயிரினங்கள் ஒருவேளை இருந்தால் அவர்கள் கையில் இது கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் பூமியைப் பற்றியும் அதில் உள்ள உயிரினங்கள் பற்றியும் அறிந்து-கொள்வார்கள். இந்த குரல் பதிவுத் தகடுகளை எவ்வாறு இயக்கி பூமி பற்றி அறிந்து-கொள்ளவேண்டும் என்று வரைபடமும் அதில் உள்ளது.
நமக்கு அருகில் உள்ள விண்மீனான ஆல்பா செஞ்சுரிக்கு இந்த செயற்கைகோள் சென்று சேரவே 700 ஆண்டுகள் வரை ஆகிவிடும், அதற்கும் தொலைவில் உள்ள விண்மீன் திரள்களைச் சென்று சேர்வதற்கு 3000 ஆண்டுகள் வரைக்கூட ஆகிவிடும். இந்த விண்மீன் திரள்கள் வரை உயிரினம் இருப்பதற்கான எந்த ஓர் அறிகுறியும் இல்லை. ஆகவே இதை அனுப்பிய மனித இனம் இன்னும் சில ஆயிரம் நூற்றாண்டுகள் வரைதான் இருக்கும். ஒரு வேளை பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இது எங்கோ உள்ள அறிவார்ந்த உயிரினத்தின் கையில் கிடைக்கும் போது பூமியில் உயிரினங்கள் அழிந்து செவ்வாய்க் கோளைப் போன்ற வறண்ட கோளாக மாறியிருக்கும்.