காரணமின்றி ஏற்காதீர்கள்: கனவுகள் பலிக்குமா?
சிகரம்
உறங்கும் போது கனவுகள் வருவது இயற்கை. கனவுகள் பலவிதங்களில் வரும் வயதுக்கு, ஏற்ப கனவுகள் மாறுபடும்.
இப்படிக் கனவுகளில் வரும் நிகழ்வுகள் வாழ்க்கையில் பலிக்கும் (நடக்கும்) என்று மக்கள் நம்புகின்றனர். பகலில் காணும் கனவு பலிக்காது என்பர். விடியற்காலையில் காணும் கனவு பலிக்கும் என்று நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கைகள் சரியா? உண்மையா? என்றால் இல்லை என்பதே அறிவியல் உண்மை.
கனவு என்பது நாம் எண்ணுவது, அடிக்கடி செய்வது, பார்ப்பது, கற்பனை செய்வது இவற்றோடு தொடர்புடையது. உறங்கும் போது காட்சிகளாக வரும். கனவுகளோடு ஒன்றிவிடுபவர்கள் கனவுக் காட்சிகளுக்கு ஏற்ப சிரிப்பர், அழுவர், கோபப்படுவர். சிலர் கனவில் அடித்துக் கொள்வது போன்ற காட்சிகளால் உணர்ச்சிவயப்பட்டு, அருகில் படுத்திருப்பவரை அடித்துவிடுவதும், உதைப்பதும் உண்டு.
எனவே, கனவுகள் நம் நினைவுகளோடு, அனுபவத்தோடு தொடர்புடைய வெளிப்பாடுகள். மற்றபடி இதில் வருவதுபோல் நடக்கும் என்று எண்ணுவது அறியாமையாகும்.
ஒருவர் இறப்பது போல் கனவுகண்டால் அவர் இறந்துவிடுவார் என்பது தப்பு. அப்படி எவரும் இறப்பதில்லை. விபத்தில் அடிபடுவது போல் கனவு வந்தால் அப்படி வாழ்வில் விபத்து வருவதில்லை.
காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக ஏதாவது ஒன்றிண்டு நடந்துவிட்டால், கனவு பலிக்கும் என்று நம்புவது கண் மூடித்தனம்.
மேலும், கனவுகளை ஒட்டிய மூடநம்பிக்கைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, பாம்பு கடிப்பது போல கனவுகண்டால் கனவு கண்டவருக்குள்ள துன்பங்கள் நீங்கிவிடும் என்றும், நீரில் மூழ்குவதாகக் கனவு வந்தால் துன்பம் வரும் என்றும், மலை ஏறுவது போல் கனவு வந்தால் வாழ்வில் உயர்வு வரும் என்றும், பள்ளத்தில் வீழ்வது போல் கனவுகண்டால் வாழ்வில் வீழ்ச்சி வரும் என்றும் இன்னும் இப்படிப்பல நம்பிக்கைகள் உள்ளன. ஆனால், கண்ட கனவுகளுக்கும், வாழ்வில் நிகழக்கூடியவற்றிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தொடர்புபடுத்திக் கொண்டு அச்சப்படுவது அல்லது மகிழ்வது மூடநம்பிக்கையாகும்.
கனவுகள் எதிர் காலத்தில் நடக்கவிருப்பதைக் முன் கூட்டியே தெரிவிக்கக் கூடியவை என்பது மூடநம்பிக்கையேயாகும்.
கனவுகளின் பலன்கள் என்று புத்தகங்களே போட்டு விற்கிறார்கள். இப்படிப்பட்ட மூடநம்பிக்கை வளர்க்கும் நூல்களைப் பிஞ்சுகள் விலக்கிவிட வேண்டும். அறிவுக்கு உகந்த கருத்துகளைக் கூறும் நூல்களைப் படிக்க வேண்டும்.