அறிவியல்: கூகுளின் அக்காவும் குறளமுதனும்
சா.மூ.அபிநயா
“குறளமுதா, கழுத்து வலிக்கவில்லையா?’’…
“இல்லை’’. மீண்டும் மகிழினி அமுதனை அழைத்தாள். இப்போது சோகத்துடன் அமுதன் பேச ஆரம்பித்தான். “ஏன் அக்கா, நட்சத்திரங்களை எண்ண முடியல? பாரு, 70 வரைக்கும் எண்ணினேன் அப்புறம் முடியல.’’
சிரித்தபடி மகிழினி, “உன்னால நட்சத்திரங்களை எண்ண முடியாது. ஏன்னா?, நம் அண்டத்தில் கோடிக்கணக்கில் நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவை மட்டுமில்லாமல் புது நட்சத்திரங்கள் பிறந்து கொண்டும், அதன் வாழ்நாள் முடிந்ததும் கருந்துளையாகவோ, வொய்ட் ட்வார்ஃபாகவோ, நியுட்ரான் ஸ்டாராகவோ மாறிவிடுகின்றன’’ என்றாள்.
“கருத்துளையா???’’ என்றபடி முழித்துக் கொண்டு இருந்தான் குறளமுதன்.
குறளமுதனின் முகத்தில் இருந்த பெரிய கேள்விக்குறியைப் பார்த்ததும், சிரித்துக் கொண்டே ஆரம்பித்தாள் மகிழினி. “நட்சத்திரம் இறந்ததும் அடையும் நிலைகளில் ஒன்றுதான் கருந்துளை. நாம் எப்படி குழந்தையாப் பிறந்து, பெரியவராகி, வயதாகி இறக்கிறோமோ அப்படித்தான் நட்சத்திரங்களும்’’.
“அப்படியா?’’ என்றான் குறளமுதன் “ஆமாம், அமுதா’’ என்றபடி கையசைத்தாள். நட்சத்திரங்களைப் பற்றிய மனவரைபடம் கொண்ட ஒரு கரும்பலகையும் கோலும் தோன்றியது! அட ஆமாங்க நிஜமாகவே தோன்றியது.
“இப்போ அம்மாவின் கருவறையில் இருக்கும் குழந்தைதான் நெபுலா. பிறந்த குழந்தையான நெபுலா இரண்டு வகைப்படும். ஒன்று ஆவரேஜ் நட்சத்திரம். இது சின்ன நட்சத்திரம்னு வச்சுக்கோயேன். இன்னொன்று மாசிவ் நட்சத்திரம்._இது பெரிய ஆள் போல என்று முடிக்கும் முன்னரே குறளமுதன்’’, நட்சத்திரத்திலும் வகையா? என்றான்.
“ஆமாம் நம்ம குட்டி நட்சத்திரமான ஆவரேஜ் நட்சத்திரம் ரெட் ஜயண்டாக (Red Giant) மாறும் பின்னர் பிளானெட்டரி நெபுலா (Planetary Nabulla) என்று மாறி கடைசியா அதன் ஆயுட்காலம் முடிந்ததும் வொய்ட் ட்வார்ஃபாக (White Dwarf), இல்லனா பிரௌன் ட்வார்ஃப் (Brown Dwarf) ஆகிவிடும் இதே நம்ம பெரிய்ய அண்ணன் மாசிவ் நட்சத்திரம் ரெட் ஜயண்டாக மாறி, சூப்பர் நோவாவாக உருவெடுத்து. கடைசியில் நியுட்ரான் ஸ்டாராக இல்லனா கருந்துளையாக மாறிவிடும்’’ என்று தனது நீண்ட வகுப்பை முடித்து கோலைக் கீழே வைத்தாள். மாயமில்லே, மந்திரமில்லே, காணாமல் போய்விட்டது கரும்பலகையும் கோலும்!
உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த குறளமுதன், திடீரென்று, “கருந்துளை… பெயரே வித்தியாசமாக இருக்கே!’’ என்றான் “அப்போதிலே இருந்து கருந்துளை பற்றியே கேக்கிறியே, இப்போ அது வித்தியாசமாகத் தெரியலாம். ஆனால் அதை பற்றித் தெரிந்ததும், அதன் பெயரைக் கேட்டாலே சும்மா அதிரும் போ’’ என்று மகிழினி சொன்னதும் அமுதனுக்கு ஆர்வம் அதிகரித்துவிட்டது. மகிழினி எதையும் கண்டு கொள்ளாமல் நிற்க அவன், “அக்கா, சொல்லுக்கா’’ என்றான். ஆனால் மகிழினியோ “போ நான் சொல்ல மாட்டேன்’’ என்று திரும்பிக் கொண்டாள்.
அமுதன் அவளிடம் சென்று “அக்கா… அக்கா… ப்ளீஸ்… நான் உனக்குக் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தாரேன். என் செல்ல அக்காதானே நீ’’ என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டான். “சரி சரி, ரொம்பக் கெஞ்சாதே சொல்றேன்’’ என்றதும் 1000 வாட்ஸ் பல்ப் போல் ஆகிவிட்டது அமுதனின் முகம்.
“சரி சொல்லு, நாம் எதனால நிற்கிறோம்?’’ “கால் வலிக்கல அதனால நிற்கிறோம்’’. “ஹே… புவியீர்ப்பு விசையால் நிற்கிறோம். பூமியின் ஈர்ப்பு விசை (Gravitational Force) ஒப்பீட்டளவில் கொஞ்சம் இருப்பதால் நம்மால நிற்க முடிகிறது. ஆனால், நம்ம கருந்துளை சாதாரண ஆள் இல்ல. அதனுடைய ஈர்ப்பு விசை எந்தளவிற்கு என்றால், ஒளிக்கதிர் (Light Rays) கூட தப்ப முடியாது. நீ பெயரைக் கவனித்து இருந்தால் அதில் கருப்பு இருக்கிறது இல்லையா?’’
“ஹ்ம்ம்’’
“அடுத்த கேள்வி இதோ: நாம் ஏதேனும் பார்க்கவேண்டும்னா என்ன தேவை?’’ உடனே அமுதன், “இரண்டு கண்கள், பொருள், ஒளி’’ என்றான். “வெரி குட். ஏதேனும் பார்க்க ஒளி தேவை. ஆனால் கருந்துளைதான் ஒளியையும் இழுத்துக் கொள்கிறதே! அதனால் தான் அதன் பெயரில் கருப்பு உள்ளது’’ என்று முடித்தாள் மகிழினி.
“அப்போ ரொம்ப கருப்பா -_ இருட்டா இருக்குமா?’’ என்ற பயம் கலந்த அமுதனின் கேள்விக்கு, ஆம் என்பது போல் தலையை ஆட்டினாள் மகிழினி. “அக்கா, கருந்துளை கதைதானே? என்ன நான் சின்ன பையன்னு என்னை ஏமாத்தப் பாக்குறியா?’’ என்று சட்டென்று முறைத்தான் குறளமுதன். உடனே மகிழினி, “அட நீ வேற, இவ்வளவு ஆண்டுகளாக உலகமே கருந்துளை தத்துவார்த்த (Theoretical) கதைதான் என்று நம்பிக்கொண்டிருந்தது. கருந்துளை என்று ஒன்று இருக்கும் என்ற ஆய்வு 18ஆம் நூற்றாண்டிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆய்வின் மைல்கல்லாக ஏப்ரல் 10, 2019 விளங்கியது. அன்றுதான் எம்87 (M87) என்னும் கேலக்சியின் நடுவில் இருக்கும் கருந்துளையின் படத்தை அறிவியலாளர்கள் வெளியிட்டனர்’’. என்றபடி சொடுக்குப்போட்டாள். அமுதனின் கையில் கருந்துளையின் புகைப்படம் விழுந்தது. எங்கிருந்தாம்? ஆகாயத்திலிருந்து! (ஆமாம்!)
“அக்க்கா, இது அவ்வளவு கருப்பா இல்லையே? “நினைச்சேன், என்னடா இன்னும் இந்தக் கேள்வி வரலியேன்னு. நாம சாப்பிட்டதும் ஏப்பம் விடுவதுபோல், கருந்துளைக்குள் ஒரு பொருள் விழும்போது, வெப்பநிலை மாறுபட்டு ரேடியோ அலைகளை வெளியிடும்’’. ஏதோ கேட்க வந்த அமுதனைப் பார்த்து, “இரு, இரு ரேடியோ அலை என்றால் என்ன? அதானே?’’ என்றதும் அவன் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தான்.
“நம்மைச் சுற்றிப் பல அலைகள் இருக்கு. கடல் அலை இல்லப்பா; மின்காந்த அலை. ஏன் நாம் பார்க்கும் ஒளியும் ஒரு வகை மின்காந்த அலைதான்; ரேடியோ அலையும் ஒரு வகை மின்காந்த அலைதான். சரியா? இப்போ கருந்துளைக்கு வருவோம். இப்படி ரேடியோ அலைகளை அது வெளியிடும்போது கருந்துளை ரொம்ப பிரகாசமாகிவிடும். அதான் புகைப்படத்தில் கருந்துளையில கருப்பா இல்லை’’ என்ற மகிழினியை மூச்சு வாங்க விடாமல் தொடர்ந்தான் குறளமுதன்.
“இந்தக் கருந்துளையால் நமக்கு ஒன்றும் ஆகவில்லை. அப்போ ரொம்ப தூரத்தில் இருக்கும் இதை எப்படி போட்டோ எடுத்தாங்க?’’ என்றான். “எனக்குப் பசிக்குது. இதுதான் கடைசிக் கேள்வி சரியா?’’ “சரி சரி சொல்லு’’ “விண்வெளியில் ஒளி ஓர் ஆண்டில் கடக்கும் தூரத்தை ஓர் ஒளியாண்டு என்று சொல்வார்கள். இந்த M87 கேலக்சியில் உள்ள கருந்துளை நம்மிடம் இருந்து சுமார் 55 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அதனால் உலகத்தின் பல இடங்களில் உள்ள தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து ஒரு மெய்நிகர் (Virtual) தொலைநோக்கியாக்கி அதனை வைத்து இந்தப் படத்தைப் பிடித்தனர். அடுத்த இலக்கு. பால்வெளி மண்டலத்தில் உள்ள சஜிடேரியஸ். இது நம்மிடம் இருந்து 26,000 ஒளியாண்டு தொலைவில் உள்ளது’’. என்று மகிழினி முடிக்கும் போது அம்மாவின் குரல் கேட்டது. “இதோ வரோம்மா’’ என்று கோரஸ் பாடியபடி கீழே இறங்கினார்கள் அமுதனும் மகிழினியும்.
குறளமுதன் “அக்கா, உன் மூளையே மூளைதான். கூகுளுக்கு அக்கா (!) என்பதை நிருபிச்சுட்டக்கா. என்னை இனிமே அடிக்க வந்த, கருந்துளைக்குள்ள உன்ன அனுப்பிடுவேன் பார்த்துக்கோ’’ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான். அவனை அடிக்க மகிழினியும் கிளம்பிவிட்டாள்.
பின் குறிப்பு: 1 ஒளியாண்டு என்றால் விண்வெளியில் ஒளி ஓர் ஆண்டில் கடக்கும் தூரம்
1 ஒளியாண்டு = 9.4605284 X கிலோ மீட்டர்.