காரணமின்றி ஏற்காதீர்கள்: விழிக்கும் முகராசிக்கு ஏற்ப நல்லது கெட்டது நடக்குமா?
சிகரம்
இரவு உறக்கத்திற்குப் பின் விடிந்து விழிக்கும் போது யார் முகத்தில் முதலில் விழிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அன்றைக்கு நல்லதும் கெட்டதும் நடக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகிறது.
காலையில் எழுந்தவுடன் சிலர் தங்களின் உள்ளங்கைகளில் விழித்தால் நல்லது என்று நம்பி, காலையில் தங்கள் உள்ளங்கைகளில் விழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிலர் விழித்தவுடன் பசுமாட்டைப் பார்க்க வேண்டும் என்று அதன் முகத்தில் விழிப்பர். சிலர் காலையில் விழித்தவுடன் சூரியனைப் பார்ப்பர்.
சிலர் இராசியான முகத்தில் விழிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை வரச் சொல்லி அவர்கள் முகத்தில் விழிப்பர்.
சிலர் ஏதாவது கெட்டது நடந்தால், இன்றைக்கு விழித்த முகம் சரியில்லை என்று கவலைப்படுவதும்; அவர்களைக் கடுமையாகத் திட்டுவதும்கூட உண்டு.
இவை சரியா? இவற்றில் உண்மை உள்ளதா? இவை அறிவுக்கு உகந்தவையா? என்றால், நிச்சயமாக இல்லை. இவை அனைத்தும் சுத்த மூடநம்பிக்கைகள்.
ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு நடக்கும் நல்லது கெட்டதுக்கும், அன்றைக்கு அவர் விழித்த முகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருவர் முகத்தில் தொடர்ந்து பத்து நாள்கள் விழித்தால், அந்த பத்து நாள்களில் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். நல்ல இராசியுள்ள முகம் என்றால் 10 நாள்களும் நல்லதே நடப்பதில்லை. அதே போல், இராசியில்லாத முகம் என்றால் பத்து நாள்களும் கெட்டதே நடப்பதில்லை.
இராசியுள்ள முகம் என்றால் அவர் முகத்தில் விழிக்கும் நாள்களில் எல்லாம் நல்லதுதானே நடக்கவேண்டும்? அதே போல் இராசியில்லாத முகம் என்றால் அவர் முகத்தில் விழிக்கும் எல்லா நாள்களிலும் கெட்டதுதானே நடக்க வேண்டும்? ஆனால், அப்படி நடப்பதில்லையே! யார் முகத்தில் விழித்தாலும் நல்லதும் கெட்டதும் கலந்தே நடக்கிறது என்றால், விழித்த முகத்திற்கும், நடக்கும் நல்லது கெட்டதுக்கும் தொடர்பே இல்லை என்பதுதானே பொருள்?
அப்படியென்றால் இராசியான முகம், இராசியான பொருள் என்பதெல்லாம் உண்மை இல்லை என்றுதானே அர்த்தம்?
எனவே, “இராசியில்லா முகத்தில் விழித்துவிட்டோமே, என்ன கேடு வருமோ” என்று கவலை கொள்வதும், அச்சப்படுவதும் அறியாமை; அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கை.
எனவே, நடப்பது எல்லாம் இயல்பாய் நடப்பவை; ஒருவர் முகராசியைப் பொறுத்தது அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு அறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகளை ஒதுக்கித்தள்ளி, அறிவுவழி நடக்க வேண்டும்.