பாய்ச்சல் 3D: அனிமேஷனில் வந்தார் பெரியார் தாத்தா
அ.சி.கிருபாகரராஜ்
என்றென்றைக்கும் புதுப்புது தேடல்களோடு நாளும் புதுப்புதுக் கனவுகளோடு பயணம் செய்பவர்கள் குழந்தைகள். அவர்கள் உலகில் தேடல்களும் அவற்றை அடையும் வழியாக கேள்விகளுமே நிறைந்திருக்கின்றன. தங்களுக்கு எழும் கேள்விகளின் மூலமாகவே சிந்திக்கும் எல்லையை குழந்தைகள் விரிவாக்குகின்றனர். ‘அறிவை விரிவு செய்’ என்பதற்கான தொடக்கப்புள்ளியே குழந்தைகள், தாங்கள் காண்கிற யாவற்றைக் குறித்தும் கேட்கும் கேள்விகளிலிருந்தே தொடங்குகிறது. அவ்வாறு கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகளை அறிவதன் மூலமே பட்டறிவையும், மேலும் ஆர்வம் ஏற்பட்டு படிப்பறிவையும் அதன் தொடர்ச்சியாக அறிவார்ந்த முறையில் சிந்திக்கும் நிலையை அடையும் பகுத்தறிவையும் பெறமுடியும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
நாளைய சமுதாயத்தின் கட்டமைப்பாளர்களாக விளங்கவிருக்கும் அவர்களுக்கு அதன் அடித்தளமாக அமையவிருப்பது நம் வரலாறு தான் _ அந்த வரலாற்றைச் செதுக்கிய, செம்மைப்படுத்திய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை தான்.
எனவே, குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக, புத்துணர்ச்சியாக, ஆர்வமுள்ளவர்களாக உள்ள அப்பருவத்திலேயே அவர்களின் தனி மனித வளர்ச்சிக்கும் அதன் பயனாக அவர்கள் வளரும் சமூக வளர்ச்சிக்கும் தக்க வகையில் அவர்களை உருவாக்குவதே தலையாய கடமையாகும். குழந்தைகளின் மனம் உயர்வு தாழ்வு பேதம் அறியாத கள்ளங் கபடமற்ற, களங்கமற்ற உன்னதமானது; உயிர்கள் யாவற்றிடமும் அன்பு செலுத்தும் குணமுடையது; பாகுபாடு உணராதது; பக்தி அறியாதது; கறந்த பாலினும் தூய்மையானது. அவர்கள் அறிவும் மனமும் துடிப்புடன் இயங்கும் காரணத்தால் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு மிக முக்கியமானதாகும். அது அவர்கள் மனதில் ‘பசுமரத்தாணி போல’ பதிந்து ‘தொட்டில் பழக்கம் வாழ்நாள் வரை’ தொடர்ந்து நீடிக்க உறுதுணை புரியும்.
‘இனி வரும் உலகம்’ சமூகத் தளத்திலும் அறிவியல் தளத்திலும் எத்தகைய முன்னேற்றங்-களைக் கொண்டிருக்கும் என சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்து உரைத்தவர் தந்தை பெரியார். அத்தகைய புதுமை உலகு படைக்க இயல்பிலேயே அறிவார்வம் கொண்டு புத்தாக்கப் பூங்காவென பூத்துக் குலுங்கும் குழந்தைகளுக்கு பகுத்தறிவுப் பகலவனாம் பெரியார் தாத்தாவைக் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாய் அதுவும் குழந்தைகளின் உலகைக் கண் முன்னே கொண்டு நிறுத்தும் நோக்கோடு கற்பனைக் கார்ட்டூன் களத்தில் முப்பரிமாண உருவில் “பெரியார் தாத்தா’’ என்னும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
தந்தை பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வுகளில் ஒன்றாய் குழந்தைகளிடத்தில் பெரியார் தாத்தாவைக் கொண்டுசேர்க்கும் அற்புத முயற்சியாகக் கடந்த 20.09.2020 அன்று திராவிட கழக இளைஞரணியினர் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தாத்தா வெளியிட ‘பெரியார் பிஞ்சு’களுக்கு Periyar Kids ‘யூடியூப் சேனலில்’ ‘பெரியார் தாத்தா’ முப்பரிமாண (3D) இயங்குபடம் (Animation) கிடைத்திருக்கிறது. “சின்னச் சின்ன பாப்பா’’ எனத் தொடங்கும் அப்பாடல் தந்தை பெரியார் என்னும் மாமனிதரை மழலையருக்கு அறிமுகம் செய்துவைக்கும் விதமாகப் பாடலாசிரியர், இயக்குநர் பேராசிரியர் எழிலரசன் அமைத்திருக்கிறார். கேட்ட உடன் உதடுகளை முணுமுணுக்கச் செய்யும்படியாக இசையமைத்திருக்கிறார் சரவணன். சுட்டிக் குழந்தைகளைச் சுண்டியிழுக்கும் விதத்தில் 3ஞி-முப்பரிமாண முறையில் காட்சியமைத்திருக்கின்றனர் _ சிறீதர் மற்றும் அவரது குழுவினர்.
காட்சிகளை மிக உன்னிப்பாகக் கவனித்து அதை மிகத் தெளிவாக ஆழ்மனதில் நிலைநிறுத்தும் ஆற்றல் இயல்பாகவே குழந்தைகளிடம் மிகுந்திருக்கும். அதை மிகச் சரியாக உணர்ந்திருப்பதாக குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும் வண்ணம் பெரியார் தாத்தாவை அறிமுகப்படுத்துவதாய் அமைத்திருப்பது மிகச் சிறப்பு. வெண்தாடியையும் கைத்தடியையும் அவரிடத்தில் அளவற்ற அன்பு செலுத்திய ‘சீட்டா’வையும் பிஞ்சுகளின் மனத்தில் அழுத்தமாகப் பதியும்படியாக வடிவமைத்திருக்கின்றனர். அத்துடன் தந்தை பெரியார் அவர்களின் தலையாய பணியான _ அவர் மிக முக்கியமாக வலியுறுத்திய ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதை ‘இன மானத்தைக் காத்தார்’ என பாடலில் குறிப்பிட்டிருப்பது குழந்தைகளுக்கு அது குறித்து அறிவதற்கான அடிப்படையாக அமையும்.
‘பெரியார் தாத்தா’வை உருவ அளவில் அறிமுகப்படுத்துவதோடு குறுக்கிக்கொள்ளாமல் இன்றைய -_ நாளைய _ இளைய தலைமுறையினருக்கு அவர்தம் சீற்றமான குரலையும் அறிமுகப்படுத்தும் நோக்கோடு பாடலின் இடையில் அய்யா அவர்களின் சொற்பொழிவின் சாற்றையும் தெளித்திருப்பது மிகுந்த பாராட்டுக்-குரியது. குழந்தைகளை மிகவும் கவர்ந்த ‘அனிமேஷன்’ காட்சி முறையில் பாடலை வடிவமைத்து வெளியிட்டிருப்பது தந்தை பெரியாரை _ ‘பெரியார் தாத்தா’வை அவரது பேரன் பேத்திகளிடத்தில் கொண்டு சேர்க்கும் என்பது உறுதி.