ஆருயிர் காத்திடும் ஆறுயர் கவசங்கள்!
தெருவினில் கிடக்கும் கழிவுகள் தப்பித்
தெரியாமல் நடக்கும் கால்களில் பட்டுப்
பரவிடும் ‘கரோனா’ தடுத்துக் ‘காலணி’
பலருயிர் காத்திடும் பாதக் கவசம்!
ஒருவரின் அருகில் ஒருவரும் நெருங்கி
உட்கார்ந்து தொட்டுப் பேசிடும் பொழுதில்
இருவரின் உடலையும் கிருமியின் தாக்கம்
எட்டாது காத்திடும் இருகைக் கவசம்!
விரலது தவறி விழியிலும் படாமல்
வியாதியும் நுழைய வழியையும் விடாமல்
அரணெனக் கண்ணாடி அதும்விழிக் கிடையாய்
அமைந்ததைக் காத்திடும் அரும்விழிக்கவசம்!
இருமலில் தும்மலில் எழும்0நீர்த் துளிபோய்
எதிரினில் உள்ளவர் களின்மேல் விழாமல்
சரிவர மூக்குடன் சளிவாய் மூடியே
சமூகத்தைக் காத்திடும் சகமுகக் கவசம்!
அரசினர் போட்டிடும் ஊரடங் காணையை
அறியாது மதியாது ஆங்காங்கு மோதியே
இருசிறு சக்கர வாகன ஓட்டிகள்
இறவாது காத்திடும் இடும்தலைக் கவசம்!
மருத்துவர், காவலர், செவிலியர் யாவரும்
மரணத்தைத் துச்சமாய் மதித்துயிர் நேசமாய்ப்
பொறுப்புடன் பொதுப்பணி புரிந்திட உதவியே
புவனத்தைக் காத்திடும் புகழ்உடற் கவசம்!
– தளவை இளங்குமரன், இலஞ்சி