மாமழை போற்றுவோம்!
நிலவுலகின் நீரெல்லாம் நீராவியாய் எழும்பியே
நீலவானப் பரப்பினையே மேகமாகி மூடுமே!
உலவுகின்ற காற்றுமாங்கே உரசுகையில் கரைந்துமே
உதிருகின்ற நீரிழையை மழையென்று சொல்வமே!
கட்டியான பாளமேகம் முட்டும்போது ஒலியுடன்
கண்ணிருள வைக்கின்ற மின்னிலொளி தோன்றுமே!
வெட்டுமந்தக் கீற்றுமின்னல் ஒளிதெரியும் முன்னாலே
விளைவுதந்த இடியினோசை கேட்குமதன் பின்னாலே!
மண்மீது மழைத்துளிகள் பட்டவுடன் மணக்குமே;
மண்ணிறத்தில் நீர்மாறி வெள்ளமாகி ஓடுமே!
தன்னுருவை ஏரிகுளம் குட்டையென ஆக்குமே!
தவிக்கின்ற உயிர்களுக்குத் தாகமதைத் தீர்க்குமே!
வீழ்ந்துபட்ட விதைகளெல்லாம் முளைவிட்டுத் துளிர்க்குமே!
வெளிறிவிட்ட நிலப்பரப்பு பசுமையாகிக் களிக்குமே!
சூழ்ந்திருக்கும் மரங்களெங்கும் பூமலர்ந்து மிளிர்க்குமே!
சூலாகிச் சுவைமிகுந்த காய்கனிகள் அளிக்குமே!
விதைப்பவரின் பயிர்களுக்கும் உணவிலொன்றாய்க் கூட்டுமே!
வியர்வைக்குக் கைம்மாறாய் விளைச்சலைத்தான் காட்டுமே!
எதற்கும்மே ஈடிலாத இயற்கைதரு மழையினால்
இன்பமின்றித் துன்பமில்லை என்றுநாமும் போற்றுவோம்!
– கவிஞர் பெரு.இளங்கோ