கோமாளி மாமா – 13 : ’நட்பு’ன்னா என்ன தெரியுமா?
ஓவியம், கதை: மு.கலைவாணன்
விடுமுறை நாளில் தோட்டத்தில் கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க முதலில் வந்தாள் மல்லிகா. அடுத்து வந்தான் செல்வம். அவனிடம், “எங்கே மாணிக்கத்தைக் காணோம்?’’ என்றாள் மல்லிகா.
“அவனைப் பத்தி எங்கிட்ட கேக்காதே… லூசுப் பய… ‘தோட்டத்துக்குப் போகும்போது எங்க வீட்டுக்கு வா… நாம ரெண்டு பேரும் சேந்து போகலாம். வீட்டுலெ யாருமே இல்லே… எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் அத்தை வீட்டுக்கு போயிருக்காங்க. நீ வந்தா கொஞ்ச நேரம் செஸ் விளையாட்டிட்டு போலாம்னு நேத்து சொன்னான். அவன் பேச்சை நம்பி அவன் வீட்டுக்குப் போனா… கதவு திறந்தே இருக்கு ஆளைக் காணோம். அக்கம் பக்கம் தேடிப் பாத்தேன். யாருமே இல்லே. கோபத்தில தெருவுல ‘முட்டாள்’னு பெரிசா எழுதி வச்சுட்டு வந்துட்டேன். மாணிக்கம் எங்கே போயிருந்தாலும் திரும்பி வந்து வீட்டுக் கதவை பூட்டிட்டுதானே இங்கே வருவான். அதைப் பாத்துட்டு கோபமா வருவான் பாரேன்.’’ என்று சொல்லி முடித்தான் செல்வம்.
அந்த நேரத்தில் மாணிக்கம் சிரித்தபடி தோட்டத்திற்குள் வந்தான்.
கோபமாக வரவேண்டிய மாணிக்கம் எதனால் சிரித்தபடி வருகிறான் எனப் புரியாமல் விழித்தனர், செல்வமும் மல்லிகாவும்.
“என்னடா செல்வம்… எங்க வீட்டுக்கு வந்துட்டு என்னை தேடிப் பாத்துட்டு நேரா இங்கே வந்துட்டியா?’’ என்று சிரித்த முகத்துடன் கேட்டான் மாணிக்கம்.
“அது எப்படி அவ்வளவு சரியாச் சொல்றே?’’ என, புரியாமல் கேட்டாள் மல்லிகா.
“அதான் அவன் வந்ததுக்கு அடையாளமா எங்க வீட்டுக் கதவுல அவன் பேரைப் பெருசா எழுதி வெச்சுட்டு வந்திருந்தானே…’’ என கேலியாகச் சொன்னான் மாணிக்கம்.
மல்லிகாவோ கலகலவென சத்தமாகச் சிரித்தாள். கோபப்பட்ட செல்வம், “இப்ப எதுக்குச் சிரிக்குறே… வீட்டுல யாரும் இல்லே, வாடான்னு கூப்பிட்டுட்டு இவன் வீட்டில இல்லாமே எங்கேயோ போயிட்டான்’’ என்றான் செல்வம்.
“அதுக்காக நீ ஏன் உன் பேரை பெருசா கதவுல எழுதிட்டு வந்தே?’’ என மறுபடி கேலியாகக் கேட்டான் மாணிக்கம்.
“ஆமா! இவனை ‘வீட்டுக்கு வாடா செஸ் விளையாடிட்டுப் போலாம்’னு கூப்பிட்ட நீ எங்கே போயிட்டே?’’ என்று கேட்டாள் மல்லிகா.
“ஆங்… அதைத் தெரிஞ்சுக்காம… என் மேலே கோபப்பட்டா எப்படி? இவன் வருவான்னு ஆசையா காத்துக்கிட்டிருந்தேன். அந்த நேரத்தில எங்க பக்கத்து வீட்டு பாட்டியம்மா வாசல்ல வழுக்கி விழுந்துட்டாங்க. அதைப் பாத்த நான் ஓடிப்போயி அவங்களைத் தூக்கிவிட்டு ஒரு நாற்காலியில உக்கார வைச்சேன். அவங்க வீட்லயும் யாருமில்ல. வழுக்கி விழுந்ததுல கால் விரல்ல மட்டும் சின்ன காயம். மற்றபடி ஒன்னும் ஆகலே. அதுக்கு மருந்து வாங்க பக்கத்துல இருக்கிற மருந்துக் கடைக்குப் போனேன். அதுக்குள்ள செல்வம் எங்க வீட்டுக்கு வந்து பாத்துட்டு, கோபத்துலே அவன் பேரை எங்க வீட்டுக் கதவுல பெரிசா எழுதி வச்சுட்டு இங்கே வந்துட்டான். இதுதான் நடந்தது” என நடந்தைச் சொல்லி முடித்தான் மாணிக்கம். இதையெல்லாம் மரத்தின் பின்னாலிருந்து கேட்டுக் கொண்டிருந்த கோமாளி மாமா….
“உன் மேலே உள்ள கோபத்திலே செல்வம் உன்னைத் திட்டி முட்டாள்னு உன் வீட்டுக் கதவுல எழுதுனதை, ‘அவன் பேரை எழுதி வச்சுட்டு வந்துட்டான்னு’ அவனை கேலி செய்யறதுக்கு மாத்திக்கிட்ட உன் திறமையைப் பாராட்டுறேன். அதே நேரத்திலே ஒருத்தர் மேலே ஒருத்தர் கோபப்பட்டு எந்தக் காரணத்துக்காகவும் நட்பை இழந்துடாதிங்க’’ என்று சொல்லிக்கொண்டே மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் இருக்கும் இடத்திற்கு வந்தார்.
“ஓ… இவ்வளவு நேரமா இங்க இருந்து நாங்க பேசுனதையெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்திங்களா?’’ என்றாள் மல்லிகா.
“செல்வம்! மாணிக்கம் நடந்ததை சொன்ன பிறகு நிலைமை உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நட்புங்கிறதை விளக்க ஒரு அருமையான சம்பவம் ஒண்ணு சொல்றேன் கேளுங்க’’ என்றபடி வழக்கமாக அமரும் சின்ன பாறை மீது அமர்ந்து,
“உலகத்தின் முதல் தத்துவ ஞானின்னு போற்றப்படுற சாக்ரடீஸ் பத்தி உங்களுக்குத் தெரியுமா?’’ என்றார் கோமாளி.
“கொஞ்சம் கொஞ்சம் தெரியும் மாமா… அவரு கிரேக்க நாட்டிலே உள்ள ஏதென்ஸ் நகரத்துல பிறந்தவரு” என்றாள் மல்லிகா.
“மக்களை… குறிப்பா இளைஞர்களைச் சந்திச்சு, கேள்வி கேக்கிறது மூலமா சிந்திக்க வச்சாரு.
அதனால வயசான சாக்ரடீஸ் பின்னாலே நிறைய இளைஞர்கள் கூட்டம் கூட்டமா சூழ்ந்திருப்பாங்கன்னு எங்க அப்பா சொன்னாங்க மாமா… அது மட்டுமில்ல, இப்படி இளைஞர்களை விழிப்புணர்வு அடைய வைக்கிறாருன்னு பொறாமைப்பட்டு அவரை சிறையில அடச்சு, அவருக்கு மரண தண்டனை கொடுத்து… அதுவும் விஷம் குடிக்க வச்சு சாகடிச்சாங்கன்னும் சொன்னாரு மாமா” என்றான் செல்வம்.
“அடடே…. இவ்வளவு செய்தி தெரிஞ்சிருக்கே. ரொம்ப மகிழ்ச்சி.
கிரேக்க நாட்டிலே ஏதென்ஸ் நகரத்திலே அய்ந்தாம் நூற்றாண்டிலெ வாழ்ந்த கிரேக்க நாட்டின் தத்துவ ஞானிதான் சாக்ரடீஸ்.
கொஞ்ச நாள் இராணுவத்திலே வேலை செய்த சாக்ரடீஸ் அதுல ஈடுபாடு இல்லாததால வேலையெ விட்டு வந்துட்டாரு. அவருடைய எழுத்தும் பேச்சும் மக்களைச் சிந்திக்க வச்சுது. பொது இடங்களிலே மக்களைச் சந்திச்சு பேசுறத்துக்கு அதிக நேரத்தைச் செலவிட்டாரு. ஒரு பிரச்சினையை மய்யமா வச்சுக்கிட்டு கேள்வி மேலே கேள்வி கேட்டு… மக்கள்கிட்ட இருந்தே பதிலைக் கேட்டு அந்தப் பிரச்சனையை எழுப்புனவங்களே காரணத்தைப் புரிஞ்சுக்கிற மாதிரி செய்வாரு சாக்ரடீஸ். இதனால பொதுமக்கள் தெளிவடைஞ்சாங்க. பிரச்சினையைப் புரிஞ்சுக்கிட்டு அதைப் போக்குறதுக்காக… தாங்கள் செய்ய வேண்டியதையும் உணர்ந்தாங்க.
எல்லா பிரச்சினைகளுக்கும் சாக்ரடீஸ் கிட்ட விடை கிடைக்கும்ன்னு இளைஞர்கள் நம்புனாங்க. அதனால இளைஞர்கள் கூட்டம் எப்பவும் அவரைச்சுத்தி இருந்தது.
இது சிலருக்கு பொறாமையை உண்டாக்குச்சு. அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ்ங்கிற கலைஞனும், லைகோன்ங்கிற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மேலே வழக்கு போட்டாங்க. இளைஞர்களைத் தூண்டிவிடுறாரு… மத எதிர்ப்பைக் கிளப்பிவிடுறாரு… தனக்குப் பெருமை வர்றதுக்காக இளைஞர்களை ஈடுபடுத்துறதால அரசாங்கத்துக்கு ஆபத்தை உண்டாக்குறாருன்னு பழி சுமத்துனாங்க.
நீதிபதிங்க சாக்ரடீஸ் குற்றவாளிதான்னு தீர்ப்பு சொல்லி அதுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு சாக்ரடீஸையே சொல்லச் சொன்னாங்க.
ஆனா… அவரு, “தான் எந்தக் குற்றமும் செய்யலே. தாய்நாட்டுக்கு தன்னோட செயல் மூலமா நன்மைதான் செய்தேன். அதனாலே நீதிமன்றம் தண்டனைக்குப் பதிலா பாராட்டும் பரிசும்தான் கொடுத்திருக்கணும்’’னு வாதிட்டாரு.
நீதிமன்றம் தண்டனை கொடுக்கணும்னு முடிவு செய்ததாலே மரண தண்டனை கொடுக்கணும்னு சொல்லி விஷம் குடுத்தாங்க சாக்ரடீசுக்கு. அதுக்காக எந்த வருத்தமும் நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்காமல் விசாரணை நடந்தபோது அவர் பேசுன மூன்று சொற்பொழிவுகளும் அவருடைய அறிவுத் திறனையும், அஞ்சாத தன்மையும் உலகத்துக்கு வெளிப்படுத்துறதா அமைஞ்சுது.
அவருடைய தத்துவங்களையும், போதனை-களையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வச்சாரு. அதுதான் சாக்ரடீஸை இன்னைக்கும் நாம தெரிஞ்சுக்க உதவியா இருக்கு.
அப்படிப்பட்ட புகழ்வாய்ந்த சாக்ரடீஸ் ஒரு முறை ஓய்வா படுத்துக்கிட்டிருக்கும்போது ஒருத்தர் வந்து சாக்ரடீஸோட நண்பரைப் பத்தி ஏதோ சொல்ல வந்தாரு.
எப்பவும் கேள்வி கேட்டு பழக்கப்பட்ட சாக்ரடீஸ்… அவர்கிட்ட “என் நண்பரைப் பத்தி எங்கிட்டே சொல்ல விரும்புனா அதுக்கு முன்னாடி நான் கேக்கிற மூணு கேள்விக்கும் ‘ஆம்’னு பதில் சொன்னா மட்டுந்தான் நீங்க அவரைப்பத்தி எங்கிட்ட சொல்லலாம்”ன்னு சொல்லிட்டு, முதல் கேள்வியைக் கேட்டாரு. “என் நண்பர் செய்த செயலை நேரடியா பார்த்துட்டுதான் அவரைப் பத்தி எங்கிட்ட சொல்ல வந்திங்களா?”ன்னாரு.
“இல்லை”ன்னு பதில் சொன்னாரு வந்தவரு.
“அவரைப் பத்தின நல்ல விஷயத்தை எங்கிட்ட சொல்லப் போறீங்களா?”ன்னு இரண்டாவது கேள்வி கேட்டாரு. அதுக்கும் ‘இல்லை’ன்னு பதில் சொன்னாரு வந்தவரு.
“என் நண்பரைப் பத்தி எங்கிட்ட சொல்றதாலே யாராவது பயன் அடைவாங்களா?”ன்னு மூன்றாவது கேள்வியெ கேட்டாரு… அதுக்கும் “இல்லை”ன்னு பதில் வந்தது.
உடனே சாக்ரடீஸ் “யாருக்கும் பயனில்லாத, நல்ல விஷயமும் இல்லாத, நேரடியா நீங்க பார்க்காத என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை, தயவு செய்து எங்கிட்ட சொல்லாதிங்க”ன்னு சொல்லி முடிச்சாரு. வந்தவரு வந்த வழியே திரும்பி போயிட்டாரு.
“நல்ல நட்பு, ஆரோக்கியமான பயன்தரக்கூடிய நல்ல விவாதங்களை மட்டுமே செயல்படுத்தும்…. புரிஞ்சுதா?” என்று ஒரு வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தார் கோமாளி மாமா.
நட்பின் இலக்கணத்தை உணர்ந்த மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் மகிழ்வுடன் புறப்பட்டனர்.
– மீண்டும் வருவார் கோமாளி