காரணமின்றி ஏற்காதீர்கள் : தமிழ்ப் புத்தாண்டு தை முதல்
அன்புக்குரிய பிஞ்சுகளே! இது கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய _ தெரிந்து தெளிவடைய வேண்டிய ஒன்று. அதற்கு முன் நம் தமிழ் இனத்தின் சிறப்புகளையும் நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
தமிழர்கள் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நாகரிகத்திற்கு உரியவர்கள். அவர்களிடையே ஜாதியில்லை, மதம் இல்லை; கடவுள் நம்பிக்கை இல்லை; மூடச் செயல்கள் இல்லை. அதேபோல், தமிழ் மொழியும் சற்றேறக்குறைய 20 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலே பழமையுடைய தொன்மையான மொழி.
ஆங்கிலம், ஜப்பான் மொழி, கொரிய மொழி, சமஸ்கிருதம் போன்ற பல மொழிகள் தமிழிலிருந்து வந்தன. கணிதம், வானியல், கட்டடக்கலை, நகர நாகரிகம், கடல் பயணம், கப்பல் கட்டுதல், அணை கட்டுதல், மருத்துவம் என்று எல்லாத் துறைகளிலும் உலகிற்கு முன்னோடிகள்.
பித்தகரஸ் தேற்றம் கூறப்படுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதைக் கூறியவர்கள் தமிழர்கள். வட்டத்தின் சுற்றளவு, பரப்பளவு போன்றவற்றைக் காணும் எளிய முறைகளை 3000 ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர்கள் தமிழர்கள்.
அதேபோல் உலகிற்கு ஆண்டுக்கணக்கை முதலில் கூறியவர்களும் தமிழர்களே. தமிழர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள். இயற்கையை முழுமையாகப் பயன்படுத்தி பலவற்றைச் செய்துள்ளனர். அவ்வகையில் காலக்கணக்கீட்டையும் இயற்கை நிகழ்வுகளைக் கொண்டே செய்தனர்.
நாள்: சூரியன் தோன்றி மறைவதை வைத்து நாள் கணக்கிட்டனர். சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள் என்று கணக்கிட்டனர்.
மாதம்: முழுநிலவு தோன்றி மீண்டும் முழுநிலவு வர ஆகும் காலத்தை ஒரு மாதம் என்றனர். நிலவுக்கு திங்கள் என்று வேறு பெயர் உண்டு. திங்களை வைத்து மாதம் கணக்கிடப்பட்டதால் மாத்திற்கு திங்கள் என்று ஒரு பெயரும் உண்டு.
ஆண்டு: சூரியன் இருப்பை வைத்து ஆண்டு கணக்கீட்டைச் செய்தனர். சூரியன் இருப்பு எப்போதும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. தென்கோடியில் சில நாள்கள் இருக்கும். பின் வடக்கு நோக்கி மெல்ல நகர்ந்துதலை உச்சிக்குபோன பின் மேலும் நகர்ந்து வடகோடிக்கு செல்லும். பின் அங்கிருந்து மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து தலை உச்சிக்கு வந்து மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து வடகோடிக்கு செல்லும்.
சூரியன் நகராமல் ஒரே இடத்தில்தான் உள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால் பூமி சுற்றுவதில் சூரியன் நகர்வதாய் நமக்குத் தெரிகிறது.
நாம் ஓடும் பேருந்தில் பயணம் செல்லும்போது, நிலையாக உள்ள மரங்கள் ஓடுவது போல் தெரியும். ஆனால், உண்மையில் பேருந்துதான் ஓடும். மரம் நிலையாகத்தான் இருக்கும். இப்படித்தான் சுற்றுகின்ற பூமியில் நாம் இருப்பதால், நிலையாக உள்ள சூரியன் சுற்றுவது போல் நமக்குத் தெரிகிறது.
சூரியன் தென்கோடி முனையில் இருந்து வடகோடிக்குச் சென்று மீண்டும் தென்கோடிக்கு வர ஆகும் காலத்தை ஓர் ஆண்டு என்று தமிழர்கள் கணக்கிட்டனர்.
தை மாதம் முதல் நாள் சூரியன் தென்கோடியிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும். அதை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டனர். எனவே, தமிழர்களின் ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாள்.
நீங்கள் மதிய நேரத்தில் சூரியவொளியில் நின்று உங்கள் நிழலைப் பார்த்தால் உங்கள் நிழல் வடக்குப் பக்கமாக நிழலாக வரும். சூரியனைப் பார்த்தால் அது தென்கோடியில் இருக்கும். இரண்டு மாதம் கழித்து சித்திரை மாதத்தில் சூரியன் தலைக்கு நேர் இருக்கும். ஆடி மாதத்தில் வடகோடியில் இருக்கும். கார்த்திகை இறுதியில் மீண்டும் தலைக்கு நேர் வரும் மார்கழி கடைசியில் தென்கோடிக்கு மீண்டும் வரும்.
இப்படி தென்கோடியிலிருந்து வடகோடிக்குச் சென்று மீண்டும் தென்கோடிக்கு வர ஆகும் காலத்தை ஓர் ஆண்டு என்று தமிழர்கள் கணக்கிட்டனர்.
சூரியன் வடக்கு நோக்கி நகரும் நாளை (தை முதல் நாள்) ஆண்டின் தொடக்கமாகக் கொண்டனர்.
மாறாக, சித்திரை முதல் நாள் ஆண்டின் தொடக்கம் என்பது தப்பு. சித்திரையில் சூரியன் தலைக்கு நேர் இருக்கும் ஒரு முனையில் இருந்துதான் கணக்கிடுவோமே தவிர, மத்தியில் இருந்து கணக்கிட மாட்டோம். நாள் கணக்கிடும்-போது கீழ் (கிழக்கு) முனையிலிருந்துதான் கணக்கிடுகிறோம். மாறாக, தலை உச்சியில் சூரியன் இருப்பதிலிருந்து கணக்கிடுவதில்லை. எனவே, சித்திரை என்பது ஆண்டின் தொடக்கமே அல்ல. சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு அல்ல. தமிழரின் சிறப்பை மறைக்க ஆரியப் பார்ப்பனர்கள் சதி செய்து சித்திரையிலிருந்து ஆண்டு கணக்கிட்டு சமஸ்கிருத ஆண்டுகளான ‘பிரபவ’ தொடங்கி ‘அட்சய’ முடிய உள்ள 60 ஆண்டுகளைத் தமிழ் ஆண்டுகள் என்று கூறி தமிழர் மீது திணித்தனர்.
எனவே, தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு. தமிழர் ஆண்டுக் கணக்கீட்டை ஒட்டியே ஆங்கிலப் புத்தாண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலப் புத்தாண்டு சித்திரையில் தொடங்கவில்லை என்பதை பிஞ்சுகள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.