மழைத்துளி முத்து ஆகிறதா? – சிகரம்
படித்தவர்கள்முதல் பாமரர்கள்வரை பல மூடநம்பிக்கைகள், அறியாமைகள், தவறான நம்பிக்கைகள் உள்ளன. அவற்றுள் இவையும் அடங்கும்.
திரப்படக் கவிஞர்கள் மழைத்துளி சிப்பியுள் வீழ்ந்து முத்தாகிறது என்ற கருத்தை, கவிதைகள் மூலம் தவறாகப் பரப்பியுள்ளனர். அதுவே சரியென்று மக்களும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது தவறு.
முத்து உருவாவது எப்படி?
முத்துச் சிப்பிகள் கடலின் அடிஆழத்தில் வாழக்கூடியவை. முத்துக் குளிக்கின்றவர்கள்கூட கடலின் அடிக்குச் சென்றுதான் முத்து எடுப்பர். இதனை முத்துக் குளித்தல் என்று அழைப்பர். எனவே, முத்துச் சிப்பிக்குள் மழை நீர் விழ வாய்ப்பே இல்லை. மழைநீர்த் துளிகள் கடலின் மேற்பரப்பில் விழக்கூடியது. வீழ்ந்தவுடனே கடல்நீரில் கலந்துவிடும். அடியாழத்தில் உள்ள சிப்பிக்குள் மழைநீர் செல்லாது. எனவே, மழைநீர் முத்தாகிறது என்ற கருத்து தவறானது.
கடலின் அடியில் வாழும் முத்துச் சிப்பியினுள் செல்லும் சிறு மணல், சிப்பியின் உடலில் சிறு உறுத்தலை ஏற்படுத்தும். அந்த உறுத்தலின் விளைவாய் சிப்பியுள் சுரக்கும் சுரப்பு நீர் அந்த மணலின்மீது படியும். தொடர்ந்து சுரக்கும் சுரப்பு நீர் அடுத்தடுத்து படிந்து முத்தாக மாறுகிறது. ஆக, முத்து என்பது மணலின்மீது படியும் சிப்பியின் சுரப்பி நீரின் படிமமே ஆகும்.