கோமாளி மாமா-14 : கவனி
ஓவியம், கதை: மு.கலைவாணன்
விடுமுறை நாள். தோட்டத்தில் கதை கேட்க மல்லிகா, மாணிக்கம், செல்வம் மூவரும் கோமாளி மாமாவுக்காகக் கத்திருந்தனர். அந்த நேரத்தில் செல்வம் தான் வரும் வழியில் பார்த்த ஒரு மாம்பழ வியாபாரி, எப்படி குரல் கொடுத்து மாம்பழத்தை விற்பனை செய்தார் என்பதை, அதே போல் குரல் கொடுத்தபடி நடித்துக் காட்டிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து மாணிக்கமும், மல்லிகாவும் சிரித்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
அந்தச் சூழலை, தூரத்திலிருந்தே பார்த்துக்கொண்டே தோட்டத்திற்குள் வந்தார் கோமாளி.
அருகில் வந்ததும், “என்ன செல்வம், அருமையா ஏதோ நடிச்சுக் காட்டிக்கிட்டிருந்தியே ஏதாவது புது சினிமா பாத்தியா?’’ என்றார்.
“இல்லிங்க… மாமா. வர்ற வழியிலே மாம்பழம் விக்கிற ஒருத்தர் எப்படி குரல் கொடுத்து மாம்பழத்தை வித்தாருன்னு எங்களுக்கு நடிச்சுக் காட்டுனான் செல்வம்’’ என்றான் மாணிக்கம்.
“அதைச் சொல்லி செல்வம் நடிச்சுக் காட்டும் போதே சிரிப்பு வந்துடுச்சி மாமா’’ என்றாள் மல்லிகா.
“தோட்டத்துக்குள்ள நுழையும் போதே அதைத் தான் பார்த்துக்கிட்டே வந்தேன்… நடிக்கிற எல்லாரும் இப்படி மத்தவங்க செய்யிற செயல்பாட்டைப் பார்த்துதான் தன் நடிப்புத் திறமையை வளத்துக்கிறாங்க இதை நாடக மொழியிலெ ‘போலச் செய்தல்’னு சொல்லலாம்.
இப்படி நாம பாக்குற கேக்குற நல்ல செய்திகள்லே இருந்து நிறைய தகவல்கள் கிடைக்கும். அதை நாம் நம்ம கருத்தைச் சொல்றதுக்கான வடிவமா ஒழுங்கு படுத்துனா அது நாடகமாயிடும். அதுக்கு கூர்ந்து கவனிக்கிற திறன் இருக்கணும். இல்லேன்னா அதை வளர்த்துக்கணும். ‘போலச் செய்தல்’னு சொன்னனே, அது தொடர்பாவே இன்னைக்கு ஒரு கதை சொல்றேன்’’ என்றார் கோமாளி.
“அப்படியா! சொல்லுங்க, சொல்லுங்க’’ என்றபடி மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் வழக்கமாக உட்காரும் மரத்தடியில் அமர்ந்தனர்.
கோமாளியும் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்து கதையைத் தொடங்கினார்.
“இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகக் கருதப்பட்ட இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வுன்னு ஒரு கதை சொல்வாங்க ஆனால், அது அவர் வாழ்வில் நடந்ததில்லை. வெறும் புனைகதைதான்னு உறுதிப்படுத்தியிருக்காங்க. இப்படி நிறைய பிரபலங்களைப்பற்றி கதை உலவிக்கிட்டிருக்கு உலகத்தில. கற்பனையாக இருந்தாலும் நாம அதை ஒரு கதையாகவே பார்ப்போம்.
அறிவியல் அறிஞர் ஒருத்தரு, தான் கண்டு உணர்ந்த அறிவியல் கருத்துகளை _ கண்டுபிடிப்புகளை அறிவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியிலே விளக்கிப் பேசுவாரு,
ஒரு முறை தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிப் பேச காரிலே போயிக்கிட்டிருந்தாரு. அந்த அறிவியலாளர்.
அவருக்கு உடம்பு சரியில்லே. அதனாலே சோர்வா இருந்தாரு. இதைப் பாத்த அவருடைய கார் ஓட்டுநர் டாம், “அய்யா உங்களுக்கு உடம்பு சரியில்லே, அதனாலே இன்னைக்கு நிகழ்ச்சியை ரத்து செய்துட்டு வீட்டுக்கு திரும்பி போயிடலாமா’’ன்னு கேட்டாரு.
“அது முடியாது டாம். ஏகப்பட்ட பேரு அங்கே காத்துக்கிட்டிருப்பாங்க. எல்லாருமே புது ஆள்கள். அவங்களை நான் இதுவரையிலே பார்த்ததே இல்லை. கட்டாயம் நாம் அங்கே போயித்தான் ஆகணும். அவங்களை நான் ஏமாத்த விரும்பல’’ அப்படின்னு அறிவியலாளர் சொன்னாரு.
“சரிங்க நாம அந்த இடத்துக்குப் போவோம். உடம்பு சரியில்லாத நிலையில நீங்க அங்க போயி பேசமுடியாதே, அதுக்கு நான் ஒரு யோசனை சொல்றேன். நீங்க கோபப்பட மாட்டீங்களே’’ என்றார் ஓட்டுநர் டாம்.
“என்ன யோசனை அதைச் சொல்லு’’ என்றார் அறிவியலாளர்.
“அய்யா, உங்க பேச்சை நான் பல இடங்கள்ல கேட்டுக்கிட்டே இருக்கேன். நீங்க எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரிதான் பேசுறிங்க. அந்தப் பேச்சு எனக்கு நல்லா மனப்பாடம் ஆயிடுச்சு. அதுவும் நாம போற இடத்துல உங்களை யாருக்கும் தெரியாதுன்னு வேற சொல்றிங்க. அதனாலே உங்களுக்குப் பதிலா நான் மேடை ஏறிப் பேசிடவா’’ என்று தயக்கத்தோட கேட்டார் ஓட்டுநர் டாம்.
அறிவியலாளருக்கு இந்த யோசனை பிடிச்சிருந்துது. உடனே சரின்னும் சொல்லிட்டாரு. நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்கு கொஞ்சம் முன்னாடியே காரை நிறுத்தி அறிவியலாளர் தான் போட்டிருந்த கோட்டைக் கழட்டி டிரைவர் டாமுக்குக் கொடுத்து, காரில், தான் உக்காந்திருந்த இடத்துல அவரை உட்கார வச்சிட்டு, அவரோட தொப்பியை வாங்கி தான் போட்டுக்கிட்டு, காரை ஓட்டிக்கிட்டுப் போய் விழா நடக்கிற இடத்துல நிறுத்துனாரு.
ஓட்டுநர் டாம்தான் அறிவியல் அறிஞர்னு நினைச்சு விழா ஏற்பாட்டாளர்கள் அவரை மேடைக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க.
மேடைக்குப் போன ஓட்டுநர் டாம், தன்னம்பிக்கையோட அந்த அறிஞர் மாதிரியே பேசுனாரு. கூட்டத்துலே உள்ள எல்லாருக்குமே அந்த அறிவியல் அறிஞரைத் தெரியாததாலே ஓட்டுநர் டாம்தான் அந்த அறிவியல் அறிஞர்னு நம்பி பேச்சைக் கேட்டுக்கிட்டிருந்தாங்க. அவரும் ஆச்சரியத்தோட டாம் பேசுறதைக் கேட்டுக்கிட்டிருந்தாரு. திடீர்னு ஒரு எதிர்பாராத சிக்கல் வந்துடுச்சு கூட்டத்திலிருந்து ஒரு பேராசிரியர் எழுந்து பேச்சில் ஒரு செய்தியைப் பற்றிய சந்தேகத்தை பெரிய கேள்வியாகக் கேட்டு அதை விளக்கமா சொல்லுங்கன்னு சொன்னாரு.
இவரும் பயந்துட்டாரு. “போச்சுடா நம்ம ஓட்டுநர் டாம் மாட்டிக்கிட்டாருன்னு நினைச்சாரு.
ஆனால் டாம் தன்னை சுதாரிச்சுக்கிட்டு “இது ரொம்ப ரொம்ப சின்ன பிரச்சனை. இதை நான் விளக்க வேண்டியதில்லை. அதோ, கடைசி வரிசையில உட்கார்ந்திருக்காரே என்னோட ஓட்டுநர் அவரே இதுக்கு விளக்கம் சொல்லுவாரு’’ன்னு சொல்லிட்டு ஓட்டுநரை மேடைக்கு வாங்கன்னு கூப்பிட்டாரு டாம்.
ஓட்டுநர் வேடத்திலிருந்த அந்த அறிவியல் அறிஞர் மேடைக்குப் போய் அந்தப் பேராசிரியர் கேட்ட கேள்விக்கு விரிவான பதிலைச் சொன்னாரு. அப்படின்னு கதை.
இந்த திறமையான செயல் ஓட்டுநர் டாமுக்கு எப்படி வந்தது?
கூர்மையா கவனித்ததாலே.
போலச் செய்தல்னு சொன்னனே அந்தச் செயல்பாட்டாலே வந்தது.
உங்களைப் போன்ற குழந்தைகளுக்கு இது போன்ற திறமைகள் இருந்தா நல்ல கருத்து எங்கே கிடைச்சாலும் அதைக் கொண்டு போய் எல்லாருக்கும் சொல்லலாமில்லியா?’’
“ஆமா மாமா, செல்வம் மாம்பழ வியாபாரி போல நடிச்சுக்காட்டுனது சிரிப்பா இருந்துது. நீங்க சொன்ன உண்மைச் சம்பவம் சிந்திக்க வைக்குது’’ என்றாள் மல்லிகா.
“கூர்ந்து கவனித்தால் அறிவும் திறமையும் கூடும்னு புரிஞ்சுக்கிட்டோம்’’ என்றான் மாணிக்கம்.<