காரணமின்றி ஏற்காதீர்கள்:இலக்கணப் பிழையுடன் எழுதலாமா?பேசலாமா?
மொழிக்கு இலக்கணம் கட்டாயம். மொழி உருவானபோதே இலக்கணம் உருவாக்கப் படவில்லை. வழக்கத்தில் மொழி பேசப்பட்ட, எழுதப்பட்ட நிலையில் அது எதிர்காலத்தில் சிதையாமல் இருக்க உருவாக்கப்பட்டதே இலக்கணம்.
சிறந்த ஓவியம் காகிதத்தில் வரையப்பட்ட நிலையில் அது பாதுகாப்பாக இருக்க சுற்றிலும் சட்டம் வைத்து, முன்பக்கம் கண்ணாடி வைத்து பின்பக்கம் தகடுவைத்து (பிரேம் போட்டு) பாதுகாக்கிறோம். அப்படித்தான் மொழிக்கு இலக்கணம் பாதுகாப்பரணாக அமைகிறது.
வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து, நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் போன்றவை இன்றியமையாதவை.
பல்லி என்றால் சுவற்றில் செல்வது, பள்ளி என்றால் படிக்கும் இடம். இரண்டும் இடையெழுத்து என்றாலும் பொருளுக்கு ஏற்ப அதை எழுத வேண்டும்.
கரி _ என்றால் அடுப்புக்கரி
கறி – என்றால் இறைச்சி
எழுத்து மாறினால் பொருளே மாறிவிடும்.
கோருதல் என்றால் வேண்டுகோள்.
கோறுதல் என்றால் கொல்லுதல்.
எழுத்து மாறினால் என்னாகும்?
அதேபோல் அவர் ஊருக்குப் போனார் என்றால் இறந்த காலம். போவார் என்றால் எதிர்காலம். போகிறார் என்றால் நிகழ்காலம். காலம் மாறினால் நிகழ்வே மாறிவிடும். எனவே, நிகழ்வு எந்தக் காலத்தில் என்பது உறுதியாகத் தெரிய காலம் (Tense) கட்டாயம்.
உயர்திணை, அஃறினை வேறுபாடு உண்டு. அந்த வேறுபாடு இல்லாமல் பேசுதல், எழுதுதல் பிழை.
எங்கள் அம்மா வந்தார் என்பதே சரி. எங்கள் அம்மா வந்தது என்றால் பிழை. ஆடு, மாடு இவற்றைக் குறிப்பிடும்போதுதான் அது, இது என்று குறிப்பிட வேண்டும்.
உயர்திணையான மனிதர்களை அவர், இவர், அவள், இவள், அவன், இவன் என்றுதான் கூற வேண்டும்.
அதேபோல் ஒருமை, பன்மை வேறுபாடும் கட்டாயம்.
அவர்கள் வந்தனர் என்பது சரி.
அவர்கள் வந்தார் என்பது பிழை.
இரண்டு பசுக்கள் என்பது சரி.
இரண்டு பசு என்பது பிழை.
ஒன்றா பலவா என்பதை ஒருமை, பன்மைதான் வேறுபடுத்திக் காட்டும்.
சில இலக்கணங்கள் பிழைபட எழுதப் பட்டாலும் பேசப் பட்டாலும் பொருள் மாறாது.
எடுத்துக்காட்டாக, ஓர் ஊர் என்பது சரி. ஒரு ஊர் என்பது பிழை. ஆனால், ஓர் ஊர் என்பதற்குப் பதில் ஒரு ஊர் என்று எழுதுவதாலோ பேசுவதாலோ பொருள் மாறாது.
அதேபோல் ஒற்றெழுத்துகள் சரியாகப் போடாவிட்டாலும் பொருள் மாறாது.
அவளைச் சந்தித்தேன் என்பது சரி.
அவளை சந்தித்தேன் என்பது பிழை.
ஆனால், எப்படி எழுதினாலும் பொருள் விலங்கிவிடும்.
ஆனால், சொற்களைச் சரியாக உச்சரிக்க ஒற்றெழுத்து கட்டாயம்.
எனவே, எந்த மொழியையும் கற்கும்போது அதற்குரிய இலக்கணங்களை முறையாக அறிந்து பேசுதல், எழுதுதல் வேண்டும். மொழி என்பது பயன்பாட்டுக்கான கருவி. கருவி சிதையாமல் இருந்தால்தானே சரியாகப் பயன்படும்!<