கோமாளி மாமா-15: நேர்மை
ஓவியம்,கதை:மு.கலைவாணன்
கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் சரியான நேரத்தில் தோட்டத்திற்கு வந்துவிட்டனர்.
தேர்தல் நேரம் என்பதால் பெரியவர்கள் குறிப்பாக அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் அனைவரும் பரபரப்பான தேர்தல் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
இதையெல்லாம் கவனித்த மல்லிகா… “மாணிக்கம், செல்வம் தேர்தல் நடக்கப் போகுதே… அதுல நம்ம மாதிரி குழந்தைகளுக்கு ஏன்டா… ஒட்டு இல்லே?’’ என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
“கருவுல நாம உயிரா உருவான நாள்முதலா பதினெட்டு வயசு முழுமை அடையிற வரைக்கும் நாம குழந்தைங்கதான். அதுக்குப் பிறகுதான் நமக்கு ஓட்டுரிமை” என்று விளக்கம் சொன்னான் செல்வம்.
“அது ஏன் பதினெட்டு வயசுன்னு முடிவு செய்திருக்காங்கன்னு தெரியுமா மல்லிகா?’’ என புதிய கேள்வியைக் கேட்டான் மாணிக்கம்.
“அப்பதான் முடிவெடுக்கும் திறன் நம்ம மூளையில முழுமை அடையுதாம். அதனால பதினெட்டு வயசு வரைக்கும் நாம குழந்தைங்கதான்’’ என்று பதில் சொன்னான் செல்வம்.
“அது சரி… நமக்குப் பதினெட்டு வயசாகி நாம ஓட்டுப் போடும்போது எப்படிப்பட்டவங்களைத் தேர்ந்தெடுக்கணும்?’’ என மீண்டும் கேள்வி கேட்டாள் மல்லிகா.
அந்த நேரம் அங்கே வந்து சேர்ந்த கோமாளி மாமா… “அதுக்கான பதிலை நான் சொல்றேன்.
ஜாதி மதப் பாகுபாடு பார்க்காம ஆண் பெண்ணுன்னு பாலினப் பாகுபாடு பாக்காம, நாளைய தலைமுறையான உங்களைப் போல ஓட்டுரிமை இல்லாத குழந்தைகளின் வளர்ச்சியிலேயும், நலன்லேயும் அதிக கவனம் செலுத்துற நேர்மையானவங்களைத் தேர்ந்தெடுக்கணும்’’ என்றார்.
“மாமா… அது தொடர்பாவே ஒரு கதை சொல்லுங்க மாமா!” என ஆவலாய்க் கேட்டாள் மல்லிகா.
“சொல்லிட்டாப் போச்சு… ரத்தினகிரிங்கிற மலை சூழ்ந்த ஒரு பகுதி. அதை ஒரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருடைய அரண்மனையில புலவர் இனியவன்னு ஒருத்தர் இருந்தாரு. அவரு மத்த புலவர்கள் மாதிரி மன்னரைப் புகழ்ந்து பாடி, பரிசு வாங்கி காலங்கடத்துறவர் இல்லை. அப்பப்ப… மக்களுக்கு ஏற்படுற கஷ்டங்களை மன்னர்கிட்டேயும், அமைச்சர்கிட்டேயும் எடுத்துச் சொல்லி அவற்றைத் தீர்த்து வைப்பாரு. அந்தப் புலவர் இனியவன் வீடு அரண்மனையிலிருந்து ரொம்ப தூரத்திலே இருக்கிற ஒரு மலை மேலே இருந்தது.
தனக்கு எவ்வளவு சிரமம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாம அடிக்கடி அரண்மனைக்கு வந்து மன்னரைச் சந்திச்சு, மக்கள் குறைகளை எடுத்துச் சொல்றத அவர் தொடர்ந்து செஞ்சுக்கிட்டிருந்தாரு.
அதனால… மக்களும் புலவர் இனியவனை ஒரு பொதுநலத் தொண்டரைப் போல நினைச்சுக்கிட்டு தங்களோட பொதுவான தேவைகளைப் புலவர் இனியவன்கிட்ட சொல்லுவாங்க.
நமக்கு எப்படி டிசம்பர் மாதத்திலே குளிர்காலம் வருதோ அதுபோல ரத்தினகிரி நாட்டிலேயும் குளிர்காலம் வந்தது. வழக்கத்துக்கு மாறா அந்த நேரம் கடுமையான குளிர் அந்த மக்களை வாட்டி வதைச்சுது.
அதுவும்… புலவர் இனியவன் இருக்கிற மலைப்பகுதி மக்கள் குளிர்ல அதிகமா பாதிக்கப்பட்டாங்க. மலைவாழ் மக்கள் சில பேரு ஒண்ணாச் சேந்து இனியவன் வீட்டுக்கே வந்தாங்க.
“புலவரே! இந்த முறை குளிர் ரொம்ப அதிகமா இருக்கு… குழந்தை குட்டியெல்லாம் குளிர்தாங்க முடியாம தவிக்கிறாங்க. எங்க சிரமத்தை மன்னர்கிட்ட எடுத்துச் சொல்லி நீங்கதான் இதுக்கொரு வழி செய்யணும்”னு கேட்டுக்கிட்டாங்க.
அதைக் கேட்ட புலவர் இனியவன் உடனே அரண்மனைக்குப் புறப்பட்டுப் போனாரு. மன்னரைச் சந்திச்சு மக்கள் சொன்ன கோரிக்கையை எடுத்துச் சொன்னாரு. அதைக் கேட்ட மன்னர், “புலவரே… இந்த இக்கட்டான சூழலை நாம எப்படி சரி செய்யலாம்னு நீங்களே சொல்லுங்கன்னு” அவர்கிட்டேயே ஆலோசனை கேட்டாரு.
“மன்னா.. பக்கத்து நாட்டில் அதிகமான செம்மறி ஆடுகள் வளர்க்கிறார்கள். அந்த மக்கள் கம்பளிப் போர்வை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். நம் நாட்டில் மலைவாழ் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டு ஆளுக்கு ஒரு போர்வை வாங்கித் தந்தால் நல்லது” என ஆலோசனை சொன்னார்.
“அடடா! அருமையான யோசனை சொன்னீர்கள். உடனே ஆள் அனுப்பி எத்தனை கம்பளிப் போர்வை தங்கள் பகுதிக்குத் தேவையோ அதை வாங்கி வண்டியில் ஏற்றி தங்கள் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறேன். தங்கள் பகுதி மக்களுக்குத் தாங்களே அதை வழங்கி விடுங்கள்..’’ என்றார் மன்னர்.
“மக்கள் கோரிக்கையை ஏற்று ஆவன செய்து தந்த மன்னரே… தங்களுக்கு நன்றி’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் புலவர் இனியவன்.
ஓரிரு நாள்களிலேயே மன்னர் சொன்னதுபோல் புலவர் வீட்டு வாசலில் கம்பளிப் போர்வைகள் ஏற்றிய வண்டி வந்து நின்றது.
புலவரும் அவரது மனைவியும் வசிக்கும் அந்த சின்ன வீட்டுக்குள் கம்பளிப் போர்வைகளைத் தூக்கிச் சென்று அடுக்கி வைத்தார்கள் வண்டியில் வந்தவர்கள்.
அந்த மலைக்கிராமத்தில் திருடுவதற்காக வந்த இரண்டு இளைஞர்கள், இதை ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். இரவு ஊர் அடங்கியதும் அந்த வீட்டுக்குள் நுழைந்து கம்பளிப் போர்வைகளைத் திருடிச் சென்று விற்றுவிடலாம் என திட்டம் போட்டனர்.
இரவு நேரம்… ஊர் அடங்கி… மக்களெல்லாம் நல்ல தூக்கத்தில் இருக்கும் நேரத்தில் இரண்டு திருடர்களும் புலவர் இனியவன் வீட்டுக்குப் பின்பக்கம் உள்ள தட்டிக் கதவை ஓசைபடாமல் நகர்த்திவிட்டு உள்ளே நுழைந்தனர்.
ஒரு பக்கம் கம்பளிப் போர்வைகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு பக்கம் கிழிந்துபோன ஒரு கோரைப் பாயில் புலவர் இனியவனும், அவரது மனைவியும் குளிரில் நடுங்கியபடி படுத்துக் கொண்டிருந்தனர்.
திருட வந்த திருடர்கள் இருவரும் இதை வியப்பாகப் பார்த்தனர்.
இத்தனை கம்பளிப் போர்வைகள் தங்கள் அருகிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் குளிரில் தாங்கள் உடுத்தியிருக்கும் உடையையும் கையையும் கொண்டு போர்த்தியபடி தூங்குவதைப் பார்த்த ஒரு திருடன் “ஏன்டா… இத்தனை போர்வை இருந்தும் குளிருக்கு எடுத்துப் போர்த்திக்காம தூங்குறாரே இவரு யாருடா?” என்று கேட்டபடி மெல்ல காலெடுத்து வைத்தான்.
அவன் கால் வைத்த இடத்திலிருந்த தண்ணீர் சொம்பு கீழே உருண்டது.
அந்த ஓசை கேட்டு விழித்தார் புலவர் இனியன். அவர் எழும்போதே அவரின் மனைவியும் கண்விழித்து எழுந்துவிட்டார்கள்.
திருடர்கள் இருவரும் பயந்தபடி ஓட முயற்சித்தனர். “நில்லுங்கள்’’ என்றார் புலவர். இருவரும் அப்படியே நின்றபடி திரும்பிப் பார்த்தனர்.
திருடனில் ஒருவன்… “அய்யா, எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் வீட்டில் இந்த கம்பளிப் போர்வைகள் வண்டியில் வந்து இறங்குவதைப் பார்த்தோம்.
அதைத் திருடத்தான் உள்ளே வந்தோம். உள்ளே வந்து பார்த்தால் இத்தனை போர்வைகள் உங்கள் அருகிலேயே இருந்தபோதும் அதை எடுத்துப் போர்த்திக் கொள்ளாமல் குளிரில் நடுங்கியபடி படுத்திருக்கிறீர்களே… அதுதான் எங்களுக்குப் புரியவில்லை…” என்றான்.
“இது இந்த ஊர் மக்கள் குளிரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு வழங்குவதற்காக மன்னர் அனுப்பி வைத்தது. அதை எடுத்து நாங்கள் போர்த்திக் கொள்ள என்ன உரிமையிருக்கிறது. இது மன்னர் சொத்து. இதைத் திருட நினைக்கலாமா?” என்றார் புலவர் இனியவன்.
“உழைத்து வாழ வேண்டிய இந்த இளவயதில் திருட வந்தது பெரும் குற்றம். அதுவும் முதுமையான வயதில் குளிர் வாட்டியபோதும் பொதுச் சொத்தைத் தொடாமல் நேர்மையோடு வாழும் உங்களிடம் திருட வந்ததால் நாங்கள் திருந்திவிட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள்” என்றபடி இருவரும் புலவர் இனியவனின் காலில் விழுந்தனர்.
“தம்பிகளே! நல்ல வாய்ப்பாக என் வீட்டிற்குள் வந்ததால் தப்பித்தீர்கள். வேறு யாரிடமாவது மாட்டியிருந்தால் பொதுச் சொத்தைத் திருட நினைத்த உங்கள் நிலை என்ன ஆகியிருக்கும் என்றே தெரியாது. சரி.. சரி.. இன்றிரவு இங்கேயே தங்கி காலையில் இந்தப் போர்வைகளை மக்களுக்கு வழங்குவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்.
நான் உங்களை மன்னரிடம் அழைத்துச் சென்று காவலர் வேலை வாங்கித் தருகிறேன். இனி பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்” என்றார். திருட வந்த இருவரும் நேர்மையின் சின்னமாக விளங்கிய புலவர் இனியவனை வணங்கியபடி நின்றனர்’’ என்று கதையை முடித்தார் கோமாளி மாமா.
“மாமா… நீங்க சொன்ன மாதிரி நேர்மையானவங்களை… எங்களுக்கு ஓட்டுப் போடுற வயசு வரும்போது தேர்ந்தெடுப்போம்” என்றாள் மல்லிகா.
“மன்னராட்சியிலே மட்டுமில்லே, இந்த மக்களாட்சி காலத்திலேயும் நேர்மையானவங்களை, எல்லாரையும் சமமா பார்க்குற… பாகுபாடு பாக்காத நல்லவங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியது ஓட்டுப் போடுற ஒவ்வொருத்தரோட கடமை” என்றார் கோமாளி.