பொதுமை உலகம் வேண்டும்!
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே!
என்ன, எப்படி இருக்கீங்க… மீண்டும் கொரோனா தொற்று இரண்டாம் அலையாய் வந்து நம் அனைவரையும் மிரட்டுதே! எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?
‘அது பெரியவர்களைத்தான் தாக்கும்; நமக்கு வராது’ அப்படீன்னு குழந்தைகளாகிய பேரப் பிள்ளைகளே, நீங்கள் அலட்சியமாய் இருக்காதீங்க!
வயது வரம்பில்லாமல் அந்தத் தொற்று அனைவரையும் தாக்கி உயிரைக்கூட பறிக்கத் தயங்குவதில்லை என்று செய்திகள் வருகின்றன; அதைப் படிக்கும்போது நெஞ்சமெல்லாம் ‘பகீர் பகீர்’ன்னு ஆகிறது.
எனவே, முகக் கவசம் அணிதல், சோப் போட்டு கை கழுவுதல், தள்ளி நிற்பது -_ தனி நபர் இடைவெளி, கிருமி நாசினியைக் கொண்டு அடிக்கடி கைகளைத் துடைத்துக் கொள்ளுதல் மற்றும் ரொம்பத் தேவையிருந்தால் ஒழிய, வெளியே எங்கும் போகாமலிருப்பது போன்றவைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கணும் தெரியுமா?
அலட்சியம் காட்டக் கூடாது. பள்ளிக் கூடப் பாடங்களை வீட்டிலிருந்தே படிப்பது, எழுதுவது என்ற ஒரு வகையான புது மாற்றத்திற்கு நாம் நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்! இனி, நமக்கு நாமே ஆசிரியர் _ ‘செல்’ போனை இம்மாதிரியான நல்ல முறையில் _ அறிவியல் ரீதியாகக் கல்வி கற்கப் பயன்படுத்தவும், அதற்கு பழகிக் கொள்வதும் முக்கியம்.
இந்தக் கொரோனா கொடிய நிலை எப்படி மாறும் என்று யாருக்கும் தெரியாது!
2ஆவது தடுப்பு ஊசி போட்டிருந்தாலும்கூட உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், கொரோனா தொற்று வரும். எனவே, நல்லா ஊட்டச்சத்தா சாப்பிடணும். அம்மா, அப்பா கொடுப்பதை முகம் சுளிக்காமல் நல்லா மென்று தின்னப் பழகணும்.
‘நொறுங்கத் தின்றால் நூறு வயசு’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
கடந்த மாதம் ஏப்ரலில் மூன்று முக்கியத் தலைவர்கள் பிறந்த நாள்.
ஏப்ரல் 11 _ மராத்தியத்தில் முந்தைய பம்பாய் மாகாணம் பூனாவில் ஜோதிபா புலே பிறந்தார்.
அவர்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் கல்வியைக் கற்கச் சொல்லி உத்தியோகம், வேலை எல்லார்க்கும் கிடைக்க _ சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடியவர். அவரது வாழ்விணையர் சாவித்திரி புலேவுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்து, அவர் மூலம் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட சமூக நம்ம சகோதரர்களுக்கும் எண்ணும் எழுத்தும் சொல்லிக் கொடுக்க வைத்து, பெரும் கல்விப் புரட்சியைச் செய்தவர்.
அவரது கொள்கையைப் பெரிதும் பின்பற்றியவர்தான் உலக மகா அறிவாளியாகிய சட்டமேதை நம்ம டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
இந்து மதத்தின் கொடுமையான வர்ணாசிரமத்தின்படி தாழ்த்தப்பட்ட ஜாதியில் அவர் பிறந்த காரணத்தால் எத்தனையோ அவமானங்களையும் தாண்டி மனம் ஒடிந்து மூலையில் முடங்கிவிடாமல், இங்கே நல்லா படிச்சு பிறகு அந்தக் காலத்திலேயே அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் சென்று ஆய்வுக்கான டாக்டர், வாதாடும் பாரிஸ்டர் பட்டங்களைப் பெற்று இந்தியாவுக்குத் திரும்பி, நம் மக்களின் உரிமைக்குப் போராடிய பெரிய சமூக விஞ்ஞானியாவார்.
அவர் இந்த மாதம் ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார்.
தனது வீடு முழுவதும் புத்தங்கள்! புத்தகங்கள்! புத்தகங்கள்! என்று படித்துப் படித்து தன் வாழ்க்கையைச் செலவு செய்து, பிறவி இழிவைத் தரும் ஹிந்து மதம் என்பதை அறவே வெறுத்து, பிறந்த போது ஹிந்து மதத்தவர்; இறக்கும்போது, ‘மாறியே தீருவேன்’ என்றார். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை வற்புறுத்தும் புத்தரின் கொள்கையைப் பின்பற்றி பவுத்தரானார்!
பெரியார் தாத்தாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இருவரும் கொள்கை வழியில் ஒரே சமத்துவப் பாதையில் பயணம் செய்தவர்கள்!
தமிழ்நாட்டிற்கு அம்பேத்கரை 1934லேயே அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார் தாத்தா – தனது பச்சை அட்டைக் ‘குடிஅரசு’ ஏட்டில் ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற அம்பேத்கரின் தலைமை உரையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுப் பரப்பியதன் மூலம்! அதன்பின் 20 ஆண்டுகால கொள்கை நட்பு _ கொள்கை உறவு தொடரவே செய்தது!
அதேபோல ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, தமிழ் _ திராவிடப் பண்பாட்டு வளர்ப்பு இவை பற்றியெல்லாம் பெரிதும் பாடிய நம் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்.
பெரியார் தாத்தாவின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுயமரியாதைச் சூட்டுக்கோல் மூலம் உணர்ச்சியையும் அறிவையும் கவிதைகளாக வடித்த புரட்சிக்கவிஞர் ஏப்ரல் 29இல் புதுச்சேரியில் பிறந்தார்.
பெரியார் தாத்தாவிடமும் மணியம்மையார் பாட்டியிடமும் ரொம்ப அன்பு செலுத்தியவர். பிள்ளைகளாகிய உங்களுக்கெல்லாம் கூட நல்ல நல்ல பாட்டுகளை _ கவிதைகளை மிக எளிய முறையில் எழுதி அறிவுப் பாடம் எடுத்தவர், சிங்கம் போன்ற தோற்றமுடைய கம்பீரக்கவிஞர் புரட்சிக்கவிஞர்.
‘இளைஞர் இலக்கியம்’ படித்துப் பாருங்கள். இன்னும் குழந்தைகளாகிய உங்களுக்குப் பல நல்ல கவிதைகளையெல்லாம் புரட்சிக்கவிஞர் தாத்தா எழுதியுள்ளார்!
மகளே! மகனே!
வளரும் என்றன் மகளே – என்
வாழ்வுயர்த்தும் மகனே,
தளரும் தமிழகத்தை – நீர்
தாங்க வேண்டும் அறிக.
நல்லவற்றைக் காண்பீர் – நீர்
நல்லவற்றைக் கேட்பீர்
நல்லவற்றைக் கற்பீர் – நீர்
நல்லவற்றை நினைப்பீர்!
ஒழுக்கம் ஓம்ப வேண்டும் – நீர்
உயர்க கல்வியாலே,
விழுப்பந் தானே தூண்டும் – நம்
விரிந்த உலகில் யாண்டும்!
நாளை நீங்கள் நாட்டின் – மக்கள்
நட்புறவுப் பாலம்
ஆளைச் சுரண்டி உண்ணும் – கீழ்
அரசியலே வேண்டா.
பொதுமை உலகம் வேண்டும் – நீர்
பொய்புரட்டுத் தீயர்
முதுகொடிக்க வேண்டும் – நம்
முன்னேற்ற மிதுவாகும்.
இன்று சிறுவர் நீங்கள் – புகழ்
என்றும் அறியாத
நன்று செய்யும் வாழ்க்கை – நீர்
நடைமுறையில் கொள்க!
இப்படியெல்லாம் உங்களைப் போன்ற ‘இளவட்டங்களுக்கு’ நம்ம புரட்சிக்கவிஞர் தாத்தா எப்படி அறிவுரை கூறியுள்ளார் பார்த்தீர்களா?
அவர் சொன்னதில் மற்றொன்று மிக மிக மிக முக்கியம். ஒரே வரியை நல்லா நினைவுலே வைச்சுக்கோங்க…
‘கடிகாரம் ஓடுமுன் ஓடு
என் கண்ணல்ல…!’
அடுத்த திங்கள் உங்களுடன் பேசும்போது, கொரோனா ஓடும் என்று எதிர்பார்ப்போம்! ஆனால், கவனமுடனும் பாதுகாப்புடனும் வாழப் பழகுங்கள்.
உங்கள் பிரியமுள்ள
ஆசிரியர் தாத்தா,
கி.வீரமணி